Wednesday, July 9, 2025

V.048 - நலிந்தடியே நம்பி - திருவலிதாயம் - இலிங்கபந்தம்

2018-01-24

V.048 - நலிந்தடியே நம்பி - திருவலிதாயம் - (இலிங்கபந்தம்)

---------------------------------

(ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா)


பாடலைப் படிக்கும் முறை: கீழ்வரிசையில் இடம் வலமாகத் தொடங்கிச் சுற்றிச்சுற்றிக் கீழிருந்து மேலேறிப் பின் நடுக்கட்டங்கள் வழியாக மேலிருந்து நேரே கீழே இறங்கவேண்டும்.


நலிந்தடியே நம்பியடை பிறையையணி நாதனே

மெலிந்த மருங்குலுமை மாதுகூ றானமெய்யா

ஒலிவெடியை நிகர்க்குமொரு துடியுடை அங்கணனே

புலியுரி புனையமலா பூரணா பிதாவே

பலியையுவந் தீர்செந்தீப் போலிய வாகனே

கலிதீர் வலிதாயங் குடியான மாமணியே.


பதம் பிரித்து:

நலிந்து அடியே நம்பி அடை பிறையை அணி நாதனே;

மெலிந்த மருங்குல் உமை மாது கூறு ஆன மெய்யா;

ஒலி வெடியை நிகர்க்கும் ஒரு துடியுடை அங்கணனே;

புலி-உரி புனை அமலா; பூரணா; பிதாவே;

பலியை உவந்தீர்; செந்தீப் போலிய வாகனே;

கலி தீர், வலிதாயம் குடியான மாமணியே.


நலிந்து அடியே நம்பிடை பிறையைணி நாதனே - சாபத்தால் தேய்ந்து வாடித் திருவடியே புகல் என்று அடைந்த சந்திரனை அணிந்த தலைவனே; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);

மெலிந்த மருங்குல் உமை மாது கூறு ஆன மெய்யா - சிற்றிடையை உடைய உமைமங்கையை ஒரு கூறாக உடைய திருமேனியனே, மெய்ப்பொருளே; (மருங்குல் - இடை); (மெய்யன் - மேனியை உடையவன்; மெய்ப்பொருள்);

ஒலி வெடியை நிகர்க்கும் ஒரு துடியுடை அங்கணனே - வெடி போல ஒலிக்கும் உடுக்கையை உடைய அருட்கண்ணனே; (துடி - உடுக்கை);

புலி-ரி புனை அமலா - புலித்தோலை அணிந்த தூயனே; (உரி - தோல்); (அமலன் - மாசற்றவன்);

பூரணா - குறைவற்றவனே;

பிதாவே - தந்தையே;

பலியைவந்தீர் - பிச்சையை மகிழ்ந்தவரே; (பலி - பிச்சை); (உவந்தாய் என்று ஒருமையில் கூறாமல் உவந்தீர் என்றது - யாப்புக் கருதி வந்த ஒருமைபன்மை மயக்கம்);

செந்தீப் போலிய வாகனே - செந்தழல் போன்ற நிறமுடைய மேனியனே / அழகனே; (போலியவாகனே = போலிய வாகனே / போலிய ஆகனே); (போலிய - போன்ற); (ஆகம் - மேனி; மார்பு); (வாகன் - அழகுள்ளவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.34.3 - "வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த போலிய ஒருத்தர் புரிநூலர் இடம் என்பர்"); (சம்பந்தர் தேவாரம் - 3.115.2 - "கோதினீறது பூசிடு மாகனே");

கலி தீர், வலிதாயம் குடியான மாமணியே - திருவலிதாயத்தில் நீங்காமல் உறைகின்ற மாமணியே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (கலி - துன்பம்); (திருவலிதாயம் - சென்னைப் புறநகரில் உள்ள பாடி என்ற இடத்தில் உள்ள கோயில்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


3 comments: