2017-12-25
P.419 - பேரூர்
---------------------------------
(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி");
முற்குறிப்பு: பேரூர் - கோயம்புத்தூர் அருகுள்ள தலம்; பட்டீச்சரம் - பட்டீஸ்வரம் - பேரூரில் கோயிலின் பெயர்;
1)
காரார் நஞ்சை அமுதாகக் .. கருதி உண்ட கண்டத்தன்
கூரார் மழுவன் மண(ம்)நாறும் .. கொன்றைச் சடைமேல் கொக்கிறகன்
பாரூர் பலிதேர்ந் துழலீசன் .. பச்சை யம்மன் அவளோடும்
பேரூர்ப் பட்டீச் சரமேய .. பெம்மான் பெயரை உரைநாவே.
கார் ஆர் நஞ்சை அமுதாகக் கருதி உண்ட கண்டத்தன் - கரிய விடத்தை அமுதம்போல் விரும்பி உண்ட நீலகண்டன்;
கூர் ஆர் மழுவன் - கூர்மையான மழுவை ஏந்தியவன்;
மணம் நாறும் கொன்றைச் சடைமேல் கொக்குஇறகன் - சடைமேல் வாசக்-கொன்றைமலரையும் கொக்கின் இறகையும் அணிந்தவன்; (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.12.20 - "குலம்பாடிக் கொக்கிறகும் பாடி" - கொக்கிறகு - கொக்குருவங்கொண்ட அசுரனை அழித்து, அதன் அடையாளமாகச் சிவபெருமான் தன் தலையில் அணிந்தது. இவ்வசுரனைக், "குரண்டாசுரன்" எனக் குறிப்பிட்டு, இவ்வரலாற்றைக் கந்தபுராணமும், உபதேசகாண்டமும் கூறுதல் காண்க);
பார் ஊர் பலிதேர்ந்து உழல் ஈசன் - உலகில் பல ஊர்களில் பிச்சையேற்றுத் திரியும் ஈசன்;
பச்சையம்மன் அவளோடும் பேரூர்ப் பட்டீச்சரம் மேய பெம்மான் - பச்சைநாயகியோடு பேரூரில் பட்டீஸ்வரத்தில் உறைகின்ற பெருமான்; (* பச்சையம்மன் - இத்தலத்து இறைவி திருநாமம் பச்சைநாயகி);
பெயரை உரை நாவே - அப்பெருமானது திருநாமத்தை, நாக்கே நீ சொல்வாயாக;
2)
மட்டார் கொன்றை மதிசூடி .. மதில்மூன் றெரியக் கணையொன்றைத்
தொட்டான் தொண்டர் துயர்தீர்க்கும் .. துணைவன் வைகை நதிக்கரையில்
பிட்டார் பித்தன் பாண்டியன்றன் .. பிரம்பால் புண்ணுண் டவன்பேரூர்ப்
பட்டீச் சரத்தில் உறைகின்ற .. பரமன் பெயரை உரைநாவே.
மட்டு ஆர் கொன்றை மதிசூடி - தேன் நிறைந்த கொன்றைமலரையும் சந்திரனையும் சூடியவன்;
மதில்மூன்று எரியக் கணையொன்றைத் தொட்டான் - முப்புரங்களை எரிக்க ஒரு கணையை எய்தவன்;
தொண்டர் துயர்தீர்க்கும் துணைவன் - அடியார்களது துன்பத்தைத் தீர்க்கும் துணைவன்;
வைகைநதிக்-கரையில் பிட்டு ஆர் பித்தன் - மதுரையில் வைகையாற்றின் கரையில் பிட்டை உண்ட பேரருளாளன்; (ஆர்தல் - உண்ணுதல்);
பிரம்பால் புண்ணுண்டவன் - (அப்பொழுது, பாண்டிய மன்னனது) பிரம்பால் அடி பெற்றவன்;
3)
முடிவில் புகழன் முளைமதியன் .. முக்கண் முதல்வன் முடிமீது
கடிகொள் கொன்றை திகழ்தேவன் .. கச்சென் றரவைக் கட்டியவன்
கொடிமெல் லிடையார் இடுமையம் .. கொள்ளத் தலையொன் றேந்தியுழல்
படிறன் பட்டீச் சரமேய .. பரமன் பெயரை உரைநாவே.
முடிவு இல் புகழன் - அளவற்ற புகழ் உடையவன்;
முளைமதியன் - பிறையை அணிந்தவன்;
கடிகொள் கொன்றை திகழ் தேவன் - மணம் கமழும் கொன்றைமலரைச் சூடியவன்;
கச்சு என்று அரவைக் கட்டியவன் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவன்;
கொடி-மெல்-இடையார் இடும் ஐயம் கொள்ளத் தலை ஒன்று ஏந்தி உழல் படிறன் - கொடி போன்ற மெல்லிடை மங்கையர்கள் இடும் பிச்சையை ஏற்க மண்டையோட்டை ஏந்தித் திரியும் கள்வன்; (படிறன் - பொய்யன்; வஞ்சகன்); (சம்பந்தர் தேவாரம் - 3.37.3 - "எல்லையில் புகழாளனும் இமையோர்கணத்துடன் கூடியும் பல்லையார் தலையிற் பலியது கொண்டுகந்த படிறனும்");
4)
மிகவும் மெலிந்த வெண்மதியை .. விரிசெஞ் சடைமேற் சூடியவன்
தகவில் வேள்வி தனைச்செய்த .. தக்கன் தலையை அரிந்தன்று
பகலோன் பல்லை உகுத்தபிரான் .. படமார் பாம்பை மார்பிலணி
பகவன் பட்டீச் சரமேய .. பரமன் பெயரை உரைநாவே.
தகவு இல் வேள்விதனைச் செய்த தக்கன் தலையை அரிந்து - தகாத வேள்வியைச் செய்த தக்கனது தலையை வெட்டி;
அன்று பகலோன் பல்லை உகுத்த பிரான் - அத்தினத்தில் சூரியனது பல்லை உதிரச் செய்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.26.3 - "படையார் வெண்மழுவா பகலோன்-பல் உகுத்தவனே");
படம் ஆர் பாம்பை மார்பில் அணி பகவன் - படம் பொருந்திய நாகப்பாம்பை மார்பில் அணிந்த பகவான்;
5)
அழகன் மதனைப் பொடியாக .. அன்று காய்ந்த கண்ணுதலான்
குழையும் மனத்து மாணிக்காக் .. கூற்றை உதைத்த குரைகழலான்
குழையும் தோடும் அணிகின்ற .. கோலம் உடையான் மூவாத
பழையன் பட்டீச் சரமேய .. பரமன் பெயரை உரைநாவே.
அழகன் மதனைப் பொடியாக அன்று காய்ந்த கண்ணுதலான் - அழகிய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணன்; ("அழகன்" என்பதைத் தனியே கொண்டு, "சுந்தரன்" என்று சிவனைச் சுட்டியதாகவும் பொருள்கொள்ளலாம்);
மாணிக்காக் கூற்றை உதைத்த குரைகழலான் - மார்க்கண்டேயரைக் காக்கவேண்டி, எமனை ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியால் உதைத்தவன்; (மாணிக்கா - மாணிக்காக);
குழையும் தோடும் அணிகின்ற கோலம் உடையான் - ஒரு காதில் குழையும் ஒரு காதில் தோடும் அணியும் அர்த்தநாரீஸ்வரன்;
மூவாத பழையன் - என்றும் இளமையோடு இருக்கின்ற தொன்மையானவன்;
6)
கண்கள் மூன்று காட்டுமிறை .. காட்டில் ஆடும் கருத்துடையான்
பண்கள் ஆரத் தமிழ்பாடிப் .. பரவு நம்பி ஆரூரர்
நண்பன் நங்கை ஒருபங்கன் .. நம்பும் அன்பர்க் கருள்செய்யும்
பண்பன் பட்டீச் சரமேய .. பரமன் பெயரை உரைநாவே.
கண்கள் மூன்று காட்டும் இறை - முக்கண்ணன்;
காட்டில் ஆடும் கருத்து உடையான் - சுடுகாட்டில் கூத்தாடுபவன்;
பண்கள் ஆரத் தமிழ் பாடிப் பரவு நம்பி ஆரூரர் நண்பன் - இசைத்தமிழ் பாடிப் போற்றிய சுந்தரருக்குத் தன்னை நண்பனாகத் தந்தவன்;
நங்கை ஒரு பங்கன் - உமைபங்கன்;
நம்பும் அன்பர்க்கு அருள்செய்யும் பண்பன் - விரும்பி வழிபடும் பக்தர்களுக்கு அருள்பவன்;
7)
வேதம் அங்கம் ஆறோதும் .. விமலன் விண்ணோர் தொழுதேத்த
ஓத நஞ்சை உண்டபிரான் .. ஒற்றை விடையன் தோடார்ந்த
காதன் கொள்ளி விளக்காகக் .. கணங்கள் ஏந்தக் கூத்தாடு
பாதன் பட்டீச் சரமேய .. பரமன் பெயரை உரைநாவே.
வேதம் அங்கம்-ஆறு ஓதும் விமலன் - வேதத்தையும் ஆறங்கத்தையும் பாடியருளிய தூயன்;
விண்ணோர் தொழுதேத்த ஓத-நஞ்சை உண்ட பிரான் - தேவர்கள் இறைஞ்ச, இரங்கிக் கடல்-விடத்தை உண்ட தலைவன்; (ஓதம் - கடல்);
ஒற்றை விடையன் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவன்;
தோடு ஆர்ந்த காதன் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;
கொள்ளி விளக்காகக் கணங்கள் ஏந்தக் கூத்தாடு பாதன் - சுடுகாட்டில் எரியும் கொள்ளியைப் பூதகணங்கள் விளக்காக ஏந்திச் சூழக், கூத்தாடுபவன்;
8)
முனிவல் லரக்கன் ஈரஞ்சு .. முடிகள் தோள்கள் நெரிவிரலான்
இனிய கானம் பாடியவன் .. ஏத்த வாளும் தருமீசன்
தனிவெள் விடையன் ஒருகாதிற் .. சங்கக் குழையன் தாழ்சடைமேல்
பனிவெண் மதியன் பேரூரிற் .. பட்டீ சன்பேர் உரைநாவே.
முனி-வல்-அரக்கன் ஈரஞ்சு-முடிகள் தோள்கள் நெரி-விரலான் - கோபங்கொண்ட வலிய அரக்கனான இராவணனது பத்துத்தலைகளையும் (இருபது) புஜங்களையும் (திருப்பாத)விரலை ஊன்றி நசுக்கியவன்; (முனிதல் - கோபங்கொள்ளுதல்); (நெரித்தல் - நசுக்குதல்);
இனிய கானம் பாடி அவன் ஏத்த வாளும் தரும் ஈசன் - பின், இராவணன் இசை பாடி வழிபடவும் அவனுக்கு இரங்கி ஒரு வாளையும் அருளிய ஈசன்; (வாளும் - உம் - எச்சவும்மை; நீண்ட ஆயுள், பெயர், முதலியவற்றையும் அருளியதைக் குறிப்பால் உணர்த்தியது);
தனி-வெள்-விடையன் - ஒப்பற்ற வெண்ணிற எருதை வாகனமாக உடையவன்;
ஒரு காதில் சங்கக்-குழையன் - ஒரு காதில் சங்கினால் ஆன குழையை அணிந்தவன்;
தாழ்சடைமேல் பனி-வெண்-மதியன் - தாழும் சடையின்மேல் குளிர்ந்த வெண்திங்களை அணிந்தவன்;
9)
பிரமன் திருமால் அறியாத .. பெரிய சோதி வெள்ளெருக்கு
குரவம் கொன்றை மதமத்தம் .. கூவி ளஞ்சேர் முடியின்மேல்
அரவும் புனையும் ஆரழகன் .. அந்தி வண்ணன் அன்பரடி
பரவும் ஒருவன் பேரூரிற் .. பட்டீ சன்பேர் உரைநாவே.
பிரமன் திருமால் அறியாத பெரிய சோதி - நான்முகன் விஷ்ணு இவர்களால் அறிய இயலாத பெரிய ஜோதிவடிவினன்;
வெள்ளெருக்கு குரவம் கொன்றை மதமத்தம் கூவிளம் சேர் முடியின்மேல் அரவும் புனையும் ஆரழகன் - வெள்ளெருக்கு, குரவம், கொன்றை, ஊமத்தை முதலிய மலர்களும் வில்வமும் சேரும் திருமுடிமேல் பாம்பையும் அணியும் பேரழகன்;
அந்தி வண்ணன் - செம்மேனியன்;
அன்பர் அடி பரவும் ஒருவன் - பக்தர்களால் திருவடியைப் போற்றி வழிபடப்படும் ஒப்பற்றவன்;
10)
பொய்யார் மொழியே பேசுகின்ற .. புல்லர் மார்க்கம் போகாதீர்
செய்யா முக்கண் திகழ்தேவா .. செல்வா என்பார்க் கருளண்ணல்
மையார் கண்ணி உமைபங்கன் .. மார்பில் நூலன் வார்சடைமேல்
பையார் பாம்பன் பேரூரிற் .. பட்டீ சன்பேர் காத்திடுமே.
பொய் ஆர் மொழியே பேசுகின்ற புல்லர் மார்க்கம் போகாதீர் - பொய்களையே பேசும் கீழோர்களது மார்க்கங்களை அடையாமல் நீங்குங்கள்; (புல்லர் - கீழோர்);
செய்யா - செம்மேனியனே;
முக்கண் திகழ் தேவா - நெற்றிக்கண்ணுடைய தேவனே;
செல்வா என்பார்க்கு அருள்-அண்ணல் - செல்வனே என்றெல்லாம் போற்றும் பக்தர்களுக்கு அருளும் பெருமான்;
மை ஆர் கண்ணி உமைபங்கன் - மை திகழும் கண்களையுடைய உமையைப் பங்கில் உடையவன்;
மார்பில் நூலன் - மார்பில் பூணூல் அணிந்தவன்;
வார்-சடைமேல் பை ஆர் பாம்பன் - நீள்சடையின்மீது படம் உடைய நாகப்பாம்பை அணிந்தவன்;
11)
அரைசே அருளாய் என்றேத்தும் .. அன்பர் தம்மை வினைக்கடலின்
கரைசேர் நல்ல புணையானான் .. கருதார் புரங்கள் மூன்றெய்ய
வரையே வில்லா வளைவித்தான் .. வன்னி சூலம் மானோடு
பரசார் கையன் பேரூரிற் .. பட்டீ சன்பேர் காத்திடுமே.
"அரைசே அருளாய்" என்று ஏத்தும் அன்பர் தம்மை வினைக்கடலின் கரைசேர் நல்ல புணை ஆனான் - "அரசனே அருள்வாயாக" என்று வணங்கும் பக்தர்களை வினை என்ற கடலின் கரையில் சேர்க்கும் நல்ல தெப்பம் ஆனவன்;
கருதார் புரங்கள் மூன்று எய்ய வரையே வில்லா வளைவித்தான் - பகைவர்களது முப்புரங்களை அழிக்க மேருமலையையே வில்லாக வளைத்தவன்; (கருதார் - பகைவர்)
வன்னி சூலம் மானோடு பரசு ஆர் கையன் - கையில் நெருப்பு, சூலம், மான், மழு இவற்றை ஏந்தியவன்; (சுந்தரர் தேவாரம் - 7.25.8 - "பரசாருங் கரவா");
பேரூரில் பட்டீசன் பேர் காத்திடுமே - பேரூரில் உறையும் பட்டீசனது திருநாமம் நம்மைக் காக்கும்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment