2017-12-16
P.417 - ஆடானை - (திருவாடானை)
---------------------------------
(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");
1)
குறையொன்றிலன் உலகைச்சுடு கொடுநஞ்சினை உண்டு
கறையொன்றிய கண்டத்தினன் கடியார்மலர் நாடி
அறைவண்டினம் அடையும்பொழில் ஆடானையில் உறையும்
இறைவன்கழல் தொழுவார்துயர் இலராவது திடனே.
குறை ஒன்று இலன் - பூரணன்;
உலகைச் சுடு கொடுநஞ்சினை உண்டு கறை ஒன்றிய கண்டத்தினன் - உலகங்களையெல்லாம் சுட்டெரித்த கொடிய ஆலகாலத்தை உண்டு கறை பொருந்திய மிடற்றை உடையவன்;
கடி ஆர் மலர் நாடி அறை வண்டினம் அடையும் பொழில் ஆடானையில் உறையும் - மணமலர்களை நாடி ஒலிக்கின்ற வண்டுகள் அடைகின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற; (கடி - வாசனை);
இறைவன் கழல் தொழுவார் துயர் இலர் ஆவது திடனே - சிவபெருமான் திருவடியை வணங்கும் அன்பர்களது துயரம் நீங்குவது உறுதி;
2)
முடைவெண்டலை ஏந்தித்திரி முதல்வன்சுரர் அசுரர்
கடையுங்கடல் உமிழ்நஞ்சடை கண்டன்மழை மேகம்
அடையும்மதில் சூழுந்திரு ஆடானையில் மழுவாட்
படையும்தரி பரமன்கழல் பணிவார்வினை படுமே.
முடை-வெண்-தலை ஏந்தித் திரி முதல்வன் - முடைநாற்றம் உடைய பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சையேற்றுத் திரியும் முதல்வன்;
சுரர் அசுரர் கடையும் கடல் உமிழ் நஞ்சு அடை கண்டன் - தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடல் உமிழ்ந்த விஷத்தைக் கண்டத்தில் அடைத்தவன்;
மழைமேகம் அடையும் மதில் சூழும் திருஆடானையில் - மழைமுகில் அடைகின்ற உயர்ந்த மதில் சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற;
மழுவாள்-படையும் தரி பரமன் கழல் பணிவார் வினை படுமே - (சூலம், மான், இவற்றோடு) மழுவாளையும் ஏந்திய பரமனது திருவடியைப் பணியும் பக்தர்களது வினை அழியும்;
3)
அஞ்சைக்களம் முண்டீச்சரம் அண்ணாமலை மேயான்
வஞ்சிக்கொடி போல்மெல்லிடை மலைமாதொரு பாகன்
அஞ்சொற்கிளி பயிலும்பொழில் ஆடானையில் உறையும்
நஞ்சைக்களம் அணிவான்கழல் நம்பித்தொழ நலமே.
அஞ்சைக்களம் முண்டீச்சரம் அண்ணாமலை மேயான் - திருவஞ்சைக்களம், திருமுண்டீச்சரம், திருவண்ணாமலை முதலிய தலங்களில் உறைபவன்;
வஞ்சிக்கொடி போல் மெல்லிடை மலைமாது ஒரு பாகன் - வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிடையை உடைய மலைமங்கையை ஒரு பாகமாக உடையவன்;
அஞ்சொற்கிளி பயிலும் பொழில் ஆடானையில் உறையும் - அழகிய சொற்களைப் பேசும் கிளிகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறையும்;
நஞ்சைக் களம் அணிவான் கழல் நம்பித் தொழ நலமே - விஷத்தைக் கண்டத்தில் அணிந்த பெருமானது திருவடியை விரும்பித் தொழும் அன்பர்களுக்கு என்றும் நன்மையே; (களம் - கண்டம்);
4)
பாலுந்தயிர் ஆடும்பரன் பாலற்குயிர் தந்து
காலன்றனைக் காலாலுதை கடவுள்கறை மிடறன்
ஆலுங்குயில் அடையும்பொழில் ஆடானையில் உறையும்
சூலன்கழல் தனையன்பொடு தொழுவார்வினை தொலைவே.
பாலும் தயிர் ஆடும் பரன் - பாலாலும் தயிராலும் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;
பாலற்கு உயிர் தந்து காலன்தனைக் காலால் உதை கடவுள் - பாலகனுக்கு (மார்க்கண்டேயருக்கு) உயிர் கொடுத்துக் கூற்றுவனைக் காலால் உதைத்த கடவுள்; (பாலற்கு = பாலன்+கு = பாலனுக்கு);
கறை மிடறன் - நீலகண்டன்;
ஆலும் குயில் அடையும் பொழில் ஆடானையில் உறையும் - ஒலிக்கின்ற குயில்கள் அடைகின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற;
சூலன் கழல்தனை அன்பொடு தொழுவார் வினை தொலைவே - சூலபாணியின் திருவடியை அன்போடு தொழும் பக்தர்களது வினை அழியும்; (தொலைவு - அழிவு);
5)
மின்போலொளிர் சடையின்மிசை வெண்திங்களை வைத்தான்
இன்பேவுரு ஆனானவன் எல்லாம்செய வல்லான்
அன்பாயியை அகலாதவன் ஆடானையில் உறையும்
நம்பானடி தொழுதார்களை நலியாவினை தானே.
மின் போல் ஒளிர் சடையின்மிசை வெண்-திங்களை வைத்தான் - மின்னலைப் போல ஒளி வீசும் சடையின்மேல் வெண்பிறையைச் சூடியவன்;
இன்பே உரு ஆனான் அவன் - ஆனந்த வடிவினன்;
எல்லாம் செய-வல்லான் - சர்வ-வல்லமை உடையவன்; (செய - செய்ய);
அன்பாயியை அகலாதவன் - அன்பாயி என்ற திருநாமம் உடைய உமையைப் பிரியாதவன்; (* அன்பாயி - திருவாடானை இறைவி திருநாமம்);
ஆடானையில் உறையும் - திருவாடானையில் உறைகின்ற;
நம்பான் அடி தொழுதார்களை நலியா வினை தானே - சிவபெருமான் திருவடியைத் தொழுதவர்களை வினைகள் வருத்தமாட்டா; (நம்பான் / நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - உயிர்களால் விரும்பப்படுபவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.11.7 - "காழிநகர் மேய நம்பானை நண்ணவல்லார் வினை நாசமே");
6)
எழுதாமறை ஒதும்பொருள் இலைமாமலர் தூவித்
தொழுவாருணி துயர்தீர்த்தவன் தோடோர்செவி உடையான்
அழகார்பொழில் புடைசூழ்தரும் ஆடானையில் உறையும்
மழுவாளினன் அடியைத்தொழ மருவாவினை தானே.
எழுதாமறை ஒதும் பொருள் - வேதங்களை ஓதிய மெய்ப்பொருள்; வேதங்கள் பாடுகின்ற பொருள் ஆனவன்;
இலை மாமலர் தூவித் தொழு வாருணி துயர் தீர்த்தவன் - வில்வம் முதலிய இலைகளையும் சிறந்த மலர்களையும் தூவி வழிபட்ட வாருணிக்குச் சாபவிமோசனம் அளித்தவன்; (வாருணி - வருணன் மகன்); (* வாருணியின் சாபவிமோசனத்தைத் திருவாடானைத் தலவரலாற்றில் காண்க);
தோடு ஓர் செவி உடையான் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;
அழகு ஆர் பொழில் புடை சூழ்தரும் ஆடானையில் உறையும் - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற;
மழுவாளினன் அடியைத் தொழ மருவா வினை தானே - மழுவாள் ஏந்தும் சிவபெருமான் திருவடியை வணங்கினால் வினைகள் அடையமாட்டா;
7)
ஓர்வெண்டலை கலனாகிட ஊரூர்பலி திரிவான்
நீர்மண்டிய சடையின்மிசை நிலவைப்புனை நிமலன்
ஆர்வண்டினம் அடையும்பொழில் ஆடானையில் உறையும்
கூர்வெண்மழு உடையான்பெயர் கூறக்கெடும் வினையே.
ஓர் வெண்-தலை கலன் ஆகிட ஊர்-ஊர் பலி திரிவான் - ஒரு வெள்ளை மண்டையோடே பிச்சைப் பாத்திரம் ஆகப், பல்லூர்களில் பிச்சைக்கு உழல்பவன்; (பலி - பிச்சை);
நீர் மண்டிய சடையின்மிசை நிலவைப் புனை நிமலன் - கங்கை தங்கிய சடையின்மேல் சந்திரனை அணிந்த தூயன்;
ஆர் வண்டு-இனம் அடையும் பொழில் ஆடானையில் உறையும் - ஒலிக்கின்ற வண்டுகள் அடையும் சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற; (ஆர்த்தல் - ஒலித்தல்);
கூர்-வெண்-மழு உடையான் பெயர் கூறக் கெடும் வினையே - கூர்மையான ஒளி வீசும் மழுவை ஏந்திய சிவபெருமானது திருப்பெயரைச் சொன்னால் வினை அழியும்;
8)
மலைபோற்புயம் நாலஞ்சினன் வாய்பத்தழு மாறே
மலரார்கழல் விரலூன்றிய வரதன்மழு வாளன்
அலையார்நதி அடைவேணியன் ஆடானையில் என்றும்
நிலையாகிய தலைவன்பெயர் நினைவார்துயர் கெடுமே.
மலைபோல் புயம் நாலஞ்சினன் வாய் பத்து அழுமாறே - மலைபோல் இருபது புஜங்களை உடைய இராவணனது பத்துவாய்களும் அழும்படி; (நாலஞ்சு = 4 x 5 = 20);
மலர் ஆர் கழல் விரல் ஊன்றிய வரதன் - தாமரைமலர் போன்ற திருவடியின் விரலைக் கயிலைமலைமேல் ஊன்றிய வரதன்; (வரதன் - வரம் தருபவன்);
மழுவாளன் - மழுவை ஏந்தியவன்;
அலை ஆர் நதி அடை வேணியன் - அலை மிக்க கங்கையைச் சடையில் அடைத்தவன்; (வேணி - சடை);
ஆடானையில் என்றும் நிலையாகிய தலைவன் பெயர் நினைவார் துயர் கெடுமே - திருவாடானையில் நீங்காது உறைகின்ற தலைவனான சிவபெருமானது திருப்பெயரை நினைக்கின்றவர்களது துயர் நீங்கும்;
9)
தக்கன்றலை துண்டித்தவன் சங்கேந்தியும் அயனும்
வெட்கும்படி உயர்சோதியன் வெண்ணூல்திகழ் மார்பன்
அக்கும்புனை அழகன்திரு ஆடானையில் உறையும்
முக்கண்திகழ் முதல்வன்புகழ் மொழிவார்துயர் கெடுமே.
தக்கன்-தலை துண்டித்தவன் - தக்கனது வேள்வியை அழித்து அவனது தலையை வெட்டிய பெருமான்;
சங்கு-ஏந்தியும் அயனும் வெட்கும்படி உயர் சோதியன் - சங்கினை ஏந்தும் திருமாலும் பிரமனும் (அடிமுடி தேடிக் காணாராய்) நாணும்படி உயர்ந்த ஜோதிப்பிழம்பு; (வெட்குதல் - நாணப்படுதல்; அஞ்சுதல்);
வெண்ணூல் திகழ் மார்பன் - திருமார்பில் வெண்ணூல் அணிந்தவன்;
அக்கும் புனை அழகன் - எலும்பையும் அணியும் அழகன்; (அக்கு - எலும்பு);
திருஆடானையில் உறையும் முக்கண் திகழ் முதல்வன் புகழ் மொழிவார் துயர் கெடுமே - திருவாடானையில் உறைகின்ற முக்கண்ணனது திருப்புகழைப் பேசும் (/பாடும்) அன்பர்களது துயர் நீங்கும்;
10)
கறையேமலி நெஞ்சத்தினர் பறைபொய்களை மதியேல்
பிறையோடிள நாகம்புனை பெருமான்சிறை வண்டின்
அறையார்பொழில் திகழும்திரு ஆடானையில் உறையும்
மறையோதியின் அடிவாழ்த்திட மறவார்மகிழ் வாரே.
கறையே மலி நெஞ்சத்தினர் பறை பொய்களை மதியேல் - குற்றமே மிகுந்த வஞ்சநெஞ்சர்கள் சொல்கின்ற பொய்களை மதிக்கவேண்டா;
பிறையோடு இளநாகம் புனை பெருமான் - பிறையையும் இளநாகத்தையும் அணிந்த பெருமான்;
சிறை-வண்டின் அறை ஆர் பொழில் திகழும் திருஆடானையில் உறையும் - சிறகுகளை உடைய வண்டுகளின் ஒலி மிக்க சோலை திகழும் திருவாடானையில் உறைகின்ற; (சிறை - சிறகு); (அறை - ஓசை); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்; நிறைதல்);
மறை-ஓதியின் அடி வாழ்த்திட மறவார் மகிழ்வாரே - மறைகளைப் பாடியருளிய சிவபெருமானது திருவடியை மறவாமல் வாழ்த்தும் அன்பர்கள் இன்பம் எய்துவார்கள்;
11)
மாலிந்திரன் மலர்மேலயன் வழிபாடுசெய் ஒருவன்
கோலந்திகழ் மதியந்தனைக் குஞ்சிப்புனை கூத்தன்
ஆலின்புடை மறைசொன்னவன் ஆடானையில் உறையும்
நீலந்திகழ் கண்டன்கழல் நினைவார்மகிழ் வாரே.
மால் இந்திரன் மலர்மேல்-அயன் வழிபாடுசெய் ஒருவன் - திருமாலாலும் இந்திரனாலும் தாமரைமேல் உறையும் பிரமனாலும் வழிபடப்படும் ஒப்பற்றவன்;
கோலம் திகழ் மதியம்தனைக் குஞ்சிப் புனை கூத்தன் - அழகிய சந்திரனைத் திருமுடிமேல் அணிந்த கூத்தன்; (குஞ்சி - தலை);
ஆலின்புடை மறை சொன்னவன் - கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (சம்பந்தர் தேவாரம் - 1.48.1 - "ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே");
ஆடானையில் உறையும் நீலம் திகழ் கண்டன் கழல் நினைவார் மகிழ்வாரே - திருவாடானையில் உறைகின்ற நீலகண்டனது திருவடியை எண்ணி வழிபடும் அன்பர்கள் இன்புறுவார்கள்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment