Friday, June 27, 2025

T.202 - கோடிகா - (திருக்கோடிக்காவல்) - தேன் நிலாவும்

2017-10-18

T.202 - கோடிகா - (திருக்கோடிக்காவல்) - தேன் நிலாவும்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தானனா தந்தனந் தானனா தந்தனந்

தானனா தந்தனந் .. தனதான )

(காலனார் வெங்கொடுந் தூதர் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


தேனிலா வும்பெரும் பாவினால் உன்பரஞ்

.. .. சீரையே சந்ததம் .. பகர்வேனே

.. தீயவே தந்திடும் பாவமே மண்டிடுந்

.. .. தீனனேன் உய்ந்திடும் .. படியீயாய்

கானிலார் குஞ்சரஞ் சீறியே வந்ததுங்

.. .. காதினாய் அன்றடைந் .. துனையோது

.. காதலார் அன்பரின் காவலா கொன்றிடுங்

.. .. காலனே அஞ்சிடுங் .. கழலானே

ஆனிலோர் அஞ்சுகந் தாடினாய் அண்டரஞ்

.. .. சாலமே உண்டவெங் .. களநேயா

.. ஆகமோர் பங்கணங் காயினாய் வண்டலம்

.. .. பாரமோ டென்பையும் .. புனைவோனே

கூனிலா வும்பணங் காணரா வுஞ்சலங்

.. .. கூடவே ஒன்றிடுஞ் .. சடையானே

.. கோலமா ருங்கருஞ் சோலைசூ ழுந்தலங்

.. .. கோடிகா நின்றவெம் .. பெருமானே.


பதம் பிரித்து:

தேன் நிலாவும் பெரும் பாவினால் உன் பரஞ்

.. .. சீரையே சந்ததம் .. பகர்வேனே;

.. தீயவே தந்திடும் பாவமே மண்டிடும்

.. .. தீனனேன் உய்ந்திடும்படி ஈயாய்;

கானில் ஆர் குஞ்சரம் சீறியே வந்ததும்

.. .. காதினாய் அன்று; அடைந்(து) உனை ஓது

.. காதல் ஆர் அன்பரின் காவலா; கொன்றிடும்

.. .. காலனே அஞ்சிடும் .. கழலானே;

ஆனில் ஓர் அஞ்(சு) உகந்(து) ஆடினாய்; அண்டர் அஞ்(சு)

.. .. ஆலமே உண்ட வெங்-கள நேயா;

.. ஆகம் ஓர் பங்(கு) அணங்(கு) ஆயினாய்; வண்டு அலம்(பு)

.. .. ஆரமோ(டு) என்பையும் .. புனைவோனே;

கூன்-நிலாவும், பணம் காண் அராவும், சலம்

.. .. கூடவே ஒன்றிடும் .. சடையானே;

.. கோலம் ஆரும் கருஞ்சோலை சூழும் தலம்

.. .. கோடிகா நின்ற எம் .. பெருமானே.


தேன் நிலாவும் பெரும்-பாவினால் உன் பரம் சீரையே சந்ததம் பகர்வேனே - இனிய சிறந்த பாமாலைகளால் உன் மேலான புகழையே என்றும் சொல்வேன்; (சந்ததம் - எப்பொழுதும்);

தீயவே தந்திடும் பாவமே மண்டிடும் தீனனேன் உய்ந்திடும்படி ஈயாய் - தீயவற்றையே தரும் பாவங்களே மிக்கவனும் கதியற்றவனுமான நான் உய்யும்படி நீ அருள்புரிவாயாக; (மண்டுதல் - மிகுதல்); (தீனன் - வறியவன்); (ஈதல் - கொடுத்தல்);


கானில் ஆர் குஞ்சரம் சீறியே வந்ததும் காதினாய் - காட்டில் வாழும் ஆனை சீறி வந்தபோது அதனைக் கொன்றவனே; (குஞ்சரம் - ஆனை); (காதுதல் - கொல்லுதல்);

அன்று அடைந்து உனை ஓது, காதல் ஆர் அன்பரின் காவலா - முன்னர் உன்னைச் சரணடைந்து வழிபட்ட பெரும்-பக்தரான மார்க்கண்டேயரைக் காத்தவனே; (காதல் - பக்தி; அன்பு);

கொன்றிடும் காலனே அஞ்சிடும் கழலானே - எல்லா உயிர்களையும் கொல்லும் கூற்றுவனே அஞ்சும்படி அவனைக் கழல் அணிந்த திருவடியால் உதைத்தவனே;


ஆனில் ஓர் அஞ்சு உகந்து ஆடினாய் - பசுவினிடத்து உண்டாகிய பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் உடையவனே; (பஞ்சகவ்வியம் - பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம் என்னும் ஐந்து); (ஆன் - பசு); (ஓர் - அசை); (ஆடுதல் - நீராடுதல்); (அப்பர் தேவாரம் – 6.92.1 - "ஆவினிலைந் துகந்தானை");

அண்டர் அஞ்சு ஆலமே உண்ட வெங்-கள நேயா - தேவர்கள் அஞ்சிய ஆலகாலத்தை உண்ட விரும்பத்தக்க கண்டத்தை உடையவனே; அன்புடையவனே; (அண்டர் - தேவர்); (வெம்மை - விருப்பம்); (களம் - கண்டம்); (நேயம் - அன்பு);

ஆகம் ஓர் பங்கு அணங்கு ஆயினாய் - உன் திருமேனியில் உமையை ஒரு பங்காக உடையவனே; (ஆகம் - உடல்); (அணங்கு - அழகிய பெண்);

வண்டு அலம்பு ஆரமோடு என்பையும் புனைவோனே - வண்டுகள் ஒலிக்கின்ற மலர்மாலையையும் எலும்புமாலையும் அணிபவனே; (அலம்புதல் - ஒலித்தல்); (ஆரம் - மாலை); (என்பு - எலும்பு); (சம்பந்தர் தேவாரம் - 2.95.4 - "அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே");


கூன்-நிலாவும், பணம் காண் அராவும், சலம் கூடவே ஒன்றிடும் சடையானே - வளைந்த சந்திரனும், படம் உடைய பாம்பும், கங்கையோடு ஒன்றுகின்ற சடையை உடையவனே; (கூன் - வளைவு); (பணம் - பாம்பின் படம்); (அரா - பாம்பு); (சலம் - ஜலம் - கங்கை);

கோலம் ஆரும் கருஞ்-சோலை சூழும் தலம் கோடிகா நின்ற எம் பெருமானே - அழகு மிக்க பெரிய கரிய சோலைகள் சூழ்ந்த தலமான திருக்கோடிகாவில் உறைகின்ற எம்பெருமானே; (கோலம் - அழகு); (கருமை - கறுப்பு; பெருமை); (சம்பந்தர் தேவாரம் - 2.47.10 - "கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தான்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment