2017-10-12
P.409 - வாஞ்சியம்
---------------------------------
(எழுசீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தானன தானன தானன தானன தானதனா)
(சுந்தரர் தேவாரம் - 7.10.1 - "தேனெய் புரிந்துழல்")
முற்குறிப்புகள் - படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. புணர்ச்சியோடு நோக்கில் சந்தம் கெடாமையைக் காண்க.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
நார்மலி நெஞ்சொடு நற்கழல் ஏத்திய நம்பியு யிர்க்கொரு நற்றுணைவன்
கார்மலி மேதிய தேறிய காலனை அன்றுதை கண்ணுதல் எம்பெருமான்
கூர்மலி மூவிலை வேலினன் ஓர்விடை யான்சுடு காடுறை கொள்கையினான்
வார்சடை மேல்இள மாமதி சூடிய வன்பதி வாஞ்சிய நன்னகரே.
பதம் பிரித்து:
நார் மலி நெஞ்சொடு நற்கழல் ஏத்திய நம்பி உயிர்க்கு ஒரு நற்றுணைவன்;
கார் மலி மேதிஅது ஏறிய காலனை அன்று உதை கண்ணுதல் எம்பெருமான்;
கூர் மலி மூவிலை வேலினன்; ஓர் விடையான்; சுடுகாடு உறை கொள்கையினான்;
வார்-சடைமேல் இள மா மதி சூடியவன் பதி வாஞ்சிய நன்னகரே.
நார் மலி நெஞ்சொடு நற்கழல் ஏத்திய நம்பி உயிர்க்கு ஒரு நற்றுணைவன் - மனத்தில் அன்போடு நல்ல திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரது உயிர்க்குச் சிறந்த பாதுகாவல்; (நார் - அன்பு); (நம்பி - ஆண்களிற் சிறந்தவன் - இங்கே மார்க்கண்டேயர்);
கார் மலி மேதிஅது ஏறிய காலனை அன்று உதை கண்ணுதல் எம்பெருமான் - கரிய எருமையின்மீது ஏறி வரும் நமனை முன்னம் உதைத்தவனும் நெற்றிக்கண்ணனும் ஆன எம் பெருமான்; (மேதி - எருமை; அது - பகுதிப்பொருள்விகுதி);
கூர் மலி மூவிலை வேலினன் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்தியவன்;
ஓர் விடையான் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவன்; (ஓர் - ஒப்பற்ற);
சுடுகாடு உறை கொள்கையினான் - சுடுகாடே இடமாக உடையவன்;
வார்-சடைமேல் இள-மா-மதி சூடியவன் பதி வாஞ்சிய நன்னகரே - நீள்சடையின்மீது அழகிய இளம்பிறையைச் சூடிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம்;
2)
துன்னிய வல்வினை தீர்த்தரு ளாயென நெக்குரு கித்துதி சொன்னபடி
சென்னியில் அஞ்சலி கூப்பிய சீலரு யிர்த்துணை ஆகிய செல்வனவன்
முன்னிய மன்தொழு தேத்திய முக்கணன் ஒள்ளெரி முப்புர(ம்) மூட்டியவன்
வன்னியு(ம்) மத்தமு(ம்) மன்னிய வார்சடை யான்பதி வாஞ்சிய நன்னகரே.
பதம் பிரித்து:
"துன்னிய வல்வினை தீர்த்து அருளாய்" என நெக்குருகித் துதி சொன்னபடி
சென்னியில் அஞ்சலி கூப்பிய சீலர் உயிர்த்துணை ஆகிய செல்வன்அவன்;
முன் இயமன் தொழுது ஏத்திய முக்கணன்; ஒள் எரி முப்புரம் மூட்டியவன்;
வன்னியும் மத்தமும் மன்னிய வார் சடையான் பதி வாஞ்சிய நன்னகரே.
"துன்னிய வல்வினை தீர்த்து அருளாய்" என நெக்குருகித் துதி சொன்னபடி சென்னியில் அஞ்சலி கூப்பிய சீலர் உயிர்த்துணை ஆகிய செல்வன்அவன் - "நெருங்கிச் சூழும் வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக" என்று மனம் உருகித் துதித்துத் தலைமேல் கைகளைக் கூப்பி வழிபட்ட சீலரான மார்க்கண்டேயர் உயிருக்குக் காவல் ஆன செல்வன்; (துன்னுதல் - பொருந்துதல்; செறிதல்; அணுகுதல்);
முன் இயமன் தொழுது ஏத்திய முக்கணன் - முன்பு காலன் வழிபாடு செய்த முக்கண்ணன்; (* இயமன் ஈசனை வழிபாடு செய்த தலம் திருவாஞ்சியம் - தலபுராணச்செய்தி);
ஒள்-எரி முப்புரம் மூட்டியவன் - முப்புரங்களில் தீ மூட்டியவன்; (ஒள்ளெரி - ஒளி பொருந்திய தீ);
வன்னியும் மத்தமும் மன்னிய வார்சடையான் பதி வாஞ்சிய நன்னகரே - நீள்சடையில் வன்னி-இலையையும் ஊமத்த-மலரையும் சூடிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம்;
3)
தாளகி லேம்தழ லின்சுடு நஞ்சிது தன்னையெ னச்சுரர் அஞ்சியழக்
காளவி டந்தனை உண்டுக றுத்தொளி வீசிடும் ஓர்மணி கண்டமுளான்
வேளல ரம்பினை ஏவவும் ஓர்நொடி யிற்பொடி யாகவி ழித்தபிரான்
வாளர வம்பிறை சூடிய வார்சடை யான்பதி வாஞ்சிய நன்னகரே.
பதம் பிரித்து:
"தாளகிலேம் தழலின் சுடு நஞ்சுஇது-தன்னை" எனச் சுரர் அஞ்சி அழக்,
காள-விடம்தனை உண்டு, கறுத்து, ஒளி வீசிடும் ஓர் மணி கண்டம் உளான்;
வேள் அலர்-அம்பினை ஏவவும், ஓர் நொடியில் பொடி ஆக விழித்த பிரான்;
வாள்-அரவம் பிறை சூடிய வார்-சடையான் பதி வாஞ்சிய நன்னகரே.
"தாளகிலேம் தழலின் சுடு நஞ்சு-இதுதன்னை" எனச் சுரர் அஞ்சி அழக் - "தீயினும் சுடுகின்ற இந்த விடத்தை நாங்கள் தாங்கமாட்டோம்" என்று தேவர்கள் அச்சத்தோடு வந்து துதிக்கவும்; (தாள்தல் - பொறுத்தல்); (கிற்றல் - ஆற்றல்கொள்ளுதல்); (ஏம் - தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி);
காள-விடம்தனை உண்டு, கறுத்து, ஒளி வீசிடும் ஓர் மணி கண்டம் உளான் - அவர்களுக்கு இரங்கி அந்தக் கரிய விடத்தை உண்டு, கருமை அடைந்து, ஒளி வீசும் ஒப்பற்ற நீலமணிகண்டம் உள்ளவன்; (காளம் - கருமை);
வேள் அலர்-அம்பினை ஏவவும், ஓர் நொடியில் பொடி ஆக விழித்த பிரான் - மன்மதன் மலர்க்கணையை ஏவியபோது அவன் ஒரு நொடியளவில் சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் அவனைப் பார்த்த தலைவன்;
வாள்-அரவம் பிறை சூடிய வார்-சடையான் பதி வாஞ்சிய நன்னகரே - நீள்சடையில் கொடிய பாம்பையும் பிறைச்சந்திரனையும் சூடிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம்;
4)
நாளைநி னைந்தடை கூற்றுவ னுக்கொரு கூற்றென ஆகிய நற்கமலத்
தாளைவ ணங்கிய மாமணி வாசக ருக்கரு ளும்தயை யார்தலைவன்
ஊளையி டுந்நரி யைப்பரி ஆக்கிய வல்லவன் ஓர்மழு வாளனிடம்
வாளையி னங்களு லாம்புன லார்குள மார்பதி வாஞ்சிய நன்னகரே.
பதம் பிரித்து:
நாளை நினைந்து அடை கூற்றுவனுக்கு ஒரு கூற்று என ஆகிய நற்கமலத்
தாளை வணங்கிய மா மணிவாசகருக்கு அருளும் தயை ஆர் தலைவன்;
ஊளையிடும் நரியைப் பரி ஆக்கிய வல்லவன்; ஓர் மழுவாளன் இடம்,
வாளை-இனங்கள் உலாம் புனல் ஆர் குளம் ஆர் பதி வாஞ்சிய நன்னகரே.
நாளை நினைந்து அடை கூற்றுவனுக்கு ஒரு கூற்று என ஆகிய நற்கமலத் தாளை வணங்கிய மா-மணிவாசகருக்கு அருளும் தயை ஆர் தலைவன் - நம் ஆயுள் என்று முடியும் என்று எண்ணி அடைகின்ற காலனுக்கே காலன் ஆகிய அழகிய தாமரைமலர் போன்ற திருவடியை வணங்கிய மாணிக்கவாசகருக்கு அருள்புரிந்தவன், கருணை மிக்க தலைவன்; (ஆர்தல் - மிகுதல்);
ஊளையிடும் நரியைப் பரி ஆக்கிய வல்லவன் - ஊளையிடும் நரிகளைக் குதிரைகள் ஆக்கிய வல்லவன்; (பரி - குதிரை); (ஊளையிடுந்நரியை - சந்தம் கருதி, நகர-ஒற்று விரித்தல் விகாரம்);
ஓர் மழுவாளன் இடம், வாளை-இனங்கள் உலாம் புனல் ஆர் குளம் ஆர் பதி வாஞ்சிய நன்னகரே - மழுவை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம், வாளை-மீன்கள் உலவுகின்ற நீர் நிறைந்த குளங்கள் பொருந்திய திருவாஞ்சியம்;
5)
வெஞ்சின வெள்விடை ஏறிய வேதியன் ஆதியன் நீறணி மேனியினான்
அஞ்சிய விண்ணவர் உய்ந்திட ஆழ்கடல் நஞ்சினை ஆர்ந்தணி ஆக்கியவன்
அஞ்சன வேல்விழி கிஞ்சுக மென்மொழி மாதொரு பாகன மர்ந்தவிடம்
மஞ்சண வும்பொழி லில்மது உண்டளி பண்ணிசை வாஞ்சிய நன்னகரே.
வெஞ்சின வெள்விடை ஏறிய வேதியன் - மிகவும் சினம் உடைய வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவன், வேதம் ஓதியவன்;
ஆதியன் - எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளவன்;
நீறு அணி மேனியினான் - திருநீற்றை மேனியில் பூசியவன்;
அஞ்சிய விண்ணவர் உய்ந்திட ஆழ்கடல் நஞ்சினை ஆர்ந்து அணி ஆக்கியவன் - அஞ்சி வந்தடைந்த தேவர்கள் உய்யும்படி, பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு கண்டத்தில் அதனை அழகிய ஆபரணம் ஆக்கியவன்; (ஆர்தல் - உண்ணுதல்); (அணி - 1. ஒப்பனை. 2. அழகு. 3. ஆபரணம்);
அஞ்சன வேல்விழி கிஞ்சுக மென்மொழி மாது ஒரு பாகன் அமர்ந்த இடம் - மை திகழும் வேல் போன்ற கண்களையும் கிளி போன்ற மென்மையான மொழியையும் உடைய உமையை ஒரு பாகமாக உடையவன் விரும்பி உறையும் தலம்; (அஞ்சனம் - மை); (கிஞ்சுகம் - கிளி); (அமர்தல் - விரும்புதல்);
மஞ்சு அணவும் பொழிலில் மது உண்டு அளி பண் இசை வாஞ்சிய நன்னகரே - மேகம் வந்து பொருந்தும் சோலைகளில் பூக்களில் மதுவை உண்டு வண்டுகள் பண்களைப் பாடுகின்ற திருவாஞ்சியம்; (மஞ்சு - மேகம்); (அணவுதல் - அணுகுதல்; தழுவுதல்); (அளி - வண்டு);
6)
பாமல ராற்பணி பத்தரின் நெஞ்சிலி ருப்பவன் ஆயிழை பங்குடையான்
தூமதி வானதி கூவிளம் மத்தம ராவிவை சூடிய தொல்புகழான்
ஆமையின் ஓட்டையும் ஏனம ருப்பையு(ம்) நல்லணி யாமகிழ் அண்ணலிடம்
மாமல ரார்பொழி லிற்சிறை வண்டறை யுந்திரு வாஞ்சிய நன்னகரே.
பாமலரால் பணி பத்தரின் நெஞ்சில் இருப்பவன் - பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களின் நெஞ்சில் திகழ்பவன்;
ஆயிழை பங்கு உடையான் - உமையை ஒரு பங்கில் உடையவன்; (ஆயிழை - பெண்);
தூ மதி, வான்நதி, கூவிளம், மத்தம், அரா இவை சூடிய தொல்-புகழான் - தூய திங்களையும் கங்கையையும் வில்வத்தையும் ஊமத்த-மலரையும் பாம்பையும் முடிமேல் சூடியவன், மிகப் பழமையானவன், புகழ் உடையவன்;
ஆமையின் ஓட்டையும் ஏன மருப்பையும் நல் அணியா மகிழ் அண்ணல் இடம் - ஆமையின் ஓடு, பன்றியின் கொம்பு இவற்றை விரும்பி அணிகின்ற தலைவன் உறையும் தலம்; (ஏனம் - பன்றி); (மருப்பு - விலங்கின் கொம்பு; யானைத் தந்தம்); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "முற்றலாமை இள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு")
மா மலர் ஆர் பொழிலில் சிறை வண்டு அறையும் திரு வாஞ்சிய நன்னகரே - அழகிய மலர்கள் நிறைந்த சோலையில் சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற திருவாஞ்சியம்;
7)
சீரணி செந்தமி ழால்தினம் ஏத்திடு வார்பழ வல்வினை தீர்க்குமரன்
வாரணம் ஒன்றினை அன்றுரி செய்தவன் நஞ்சினை நுங்கிய மாமிடறன்
ஆரணம் ஓதிய நாவினன் ஆறணி வேணியன் ஐம்மலர் அம்புதொடு
மாரனை அங்கமி லானென ஆக்கிய வன்பதி வாஞ்சிய நன்னகரே.
சீர் அணி செந்தமிழால் தினம் ஏத்திடுவார் பழ-வல்வினை தீர்க்கும் அரன் - பெருமையும் அழகும் திகழும் தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளால் நாள்தோறும் துதிக்கும் பக்தர்களது பழைய வலிய வினைகளையெல்லாம் தீர்க்கும் ஹரன்;
வாரணம் ஒன்றினை அன்று உரி செய்தவன் - முன்னர் ஓர் ஆனையின் தோலை உரித்தவன்;
நஞ்சினை நுங்கிய மா-மிடறன் - ஆலகாலத்தை உண்ட அழகிய கண்டத்தை உடையவன்; (நுங்குதல் - விழுங்குதல்);
ஆரணம் ஓதிய நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;
ஆறு அணி வேணியன் - சடையில் கங்கையை அணிந்தவன்;
ஐம்மலர் அம்பு தொடு மாரனை அங்கம் இலான் என ஆக்கியவன் பதி வாஞ்சிய நன்னகரே - ஐந்து மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை அனங்கன் ஆக்கிய சிவபெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம்;
8)
கல்லையி டந்தவி லங்கைய ரக்கனை ஓர்விர லால்நெரி கண்ணுதலான்
மெல்லிய லாரிடும் உண்பலி ஏற்றிட வெண்டலை ஏந்திய வேந்தனவன்
வில்லென வெற்பைவ ளைத்தொரு நாணென மாசுணம் ஆர்த்தரு வெங்கணையால்
வல்லர ணஞ்சுட வல்லபி ரான்மகி ழும்பதி வாஞ்சிய நன்னகரே.
கல்லை இடந்த இலங்கை அரக்கனை ஓர் விரலால் நெரி கண்ணுதலான் - கயிலைமலையைப் பெயர்த்த அரக்கனும் இலங்கைமன்னனுமான இராவணனை ஒரு விரலை ஊன்றி நசுக்கியவன், நெற்றிக்கண்ணன்; (கல் - மலை); (நெரித்தல் - நசுக்குதல்); (நுதல் - நெற்றி);
மெல்லியலார் இடும் உண்பலி ஏற்றிட வெண்தலை ஏந்திய வேந்தன்அவன் - பெண்கள் இடும் பிச்சையை ஏற்பதற்குப் பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திய அரசன்;
வில் என வெற்பை வளைத்து ஒரு நாண் என மாசுணம் ஆர்த்து அரு-வெங்கணையால் வல்-அரணம் சுட-வல்ல பிரான் மகிழும் பதி வாஞ்சிய நன்னகரே - மேருமலையை வில்லாக வளைத்து அதனில் ஒரு நாணாக வாசுகி என்ற பாம்பைக் கட்டி, அரிய கொடிய கணையால் வலிமைமிக்க புரங்கள் மூன்றையும் எரித்த தலைவனான சிவபெருமான் விரும்பி உறையும் தலம் திருவாஞ்சியம்; (மாசுணம் - பாம்பு); (அரணம் - கோட்டை);
9)
பங்கய மாமல ரான்திரு மாலறி யாவெரி யாம்பர மாபரமன்
பொங்கிடும் அன்பொடு போற்றிடு வார்க்கெளி யன்புர(ம்) மூன்றெரி புன்னகையான்
அங்கியை ஏந்திந டிப்பவன் ஏர்மலி கச்சென நச்சர வார்த்தபிரான்
மங்கையை வாம(ம்)ம கிழ்ந்தவன் நின்றரு ளும்பதி வாஞ்சிய நன்னகரே.
பங்கய மாமலரான் திருமால் அறியா எரி ஆம் பரமாபரமன் - தாமரைமேல் உறையும் பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாத ஜோதி ஆன பரமன்; (பரமா பரமன் - மேலான பொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.61.1 - "பாதியொர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்");
பொங்கிடும் அன்பொடு போற்றிடுவார்க்கு எளியன் - பொங்கியெழும் பக்தியோடு வழிபடும் தொண்டர்களால் எளிதில் அடையப்படுபவன்;
புரம் மூன்று எரி புன்னகையான் - முப்புரங்களைச் சிரித்து எரித்தவன்;
அங்கியை ஏந்தி நடிப்பவன் - கையில் தீயை ஏந்திக் கூத்தாடுபவன்; (அங்கி - அக்கினி; நெருப்பு); (நடித்தல் - கூத்தாடுதல்);
ஏர் மலி கச்சு என நச்சரவு ஆர்த்த பிரான் - அழகிய அரைக்கச்சாக விஷப்பாம்பைக் கட்டிய தலைவன்; (ஏர் - அழகு); (ஆர்த்தல் - கட்டுதல்);
மங்கையை வாமம் மகிழ்ந்தவன் நின்று அருளும் பதி வாஞ்சிய நன்னகரே - உமையை இடப்பக்கம் ஒரு கூறாக விரும்பிய பெருமான் நீங்காமல் உறையும் தலம் திருவாஞ்சியம்;
10)
மேன்மையி லாமொழி பேசியு ழன்றிடு வீணரு ரைப்பன விட்டொழிமின்
தேன்மலர் இட்டடி வாழ்த்திடு சிந்தையி னார்க்கரு ளைப்பொழி செல்வனவன்
நான்மறை நல்லறம் ஓதிட ஆலதன் நீழல மர்ந்தவன் நம்பெருமான்
மான்மறி ஒண்மழு ஏந்திய வன்மகி ழும்பதி வாஞ்சிய நன்னகரே.
மேன்மை இலா மொழி பேசி உழன்றிடு வீணர் உரைப்பன விட்டு-ஒழிமின் - தகாத புன்மொழிகளே பேசித் திரியும் வீணர்கள் சொல்வனவற்றை மதிக்கவேண்டா;
தேன்மலர் இட்டு அடி வாழ்த்திடு சிந்தையினார்க்கு அருளைப் பொழி செல்வன்அவன் - வாசமலர்களைத் தூவித் திருவடியைப் போற்றும் பக்தர்களுக்குப் பேரருள் செய்யும் செல்வன்;
நான்மறை நல்-அறம் ஓதிட ஆல்-அதன் நீழல் அமர்ந்தவன் நம் பெருமான் - நால்வேதங்களின் நல்ல அறங்களையெல்லாம் சனகாதியர்களுக்கு விளக்குவதற்குக் கல்லால-மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருப்பவன் நம் பெருமான்;
மான்மறி ஒண்மழு ஏந்தியவன் மகிழும் பதி வாஞ்சிய நன்னகரே - மான்கன்றையும் ஒளியுடைய மழுவையும் தாங்கியவன் விரும்பி உறையும் தலம் திருவாஞ்சியம்;
11)
பண்டிகழ் தக்கனி யற்றிய வேள்வித கர்த்தவன் நீறணி பான்மையினான்
வெண்டிரை வேலைவி டந்தனை உண்டமி டற்றினன் ஏறணி வெல்கொடியான்
அண்டிய அன்பரின் அச்சம ழித்தவர் இன்புற நல்கிடும் அண்ணலிடம்
வண்டினம் இன்னிசை ஆர்த்தடை சோலைசு லாவிய வாஞ்சிய நன்னகரே.
பண்டு இகழ் தக்கன் இயற்றிய வேள்வி தகர்த்தவன் - முன்பு ஈசனை இகழ்ந்து தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்; (இலக்கணக் குறிப்பு : பண்டிகடக்கன் - பண்டு இகழ் தக்கன்; "ழ்+த = ட" என்று புணரும்; "திகடசக்கர = திகழ் தசக்கர" – கந்தபுராணம்; சம்பந்தர் தேவாரம் - 3.86.10 - "முகிடரு மிளமதி யரவொடு மழகுற முதுநதி திகடரு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே" - முகிழ் + தரு = முகிடரு. திகழ் + தரு = திகடரு);
நீறு அணி பான்மையினான் - திருநீற்றைப் பூசும் பெருமை உடையவன்; (பான்மை - குணம்; பெருமை);
வெண்-திரை வேலை விடந்தனை உண்ட மிடற்றினன் - வெண்ணிற அலைகளை உடைய பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்ட நீலகண்டன்; (திரை - அலை); (வேலை - கடல்); (மிடறு - கண்டம்);
ஏறு அணி வெல் கொடியான் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடையவன்;
அண்டிய அன்பரின் அச்சம் அழித்து, அவர் இன்புற நல்கிடும் அண்ணல் இடம் - சரணடைந்த பக்தர்களது அச்சத்தைத் தீர்த்து, அவர்கள் இன்புறுமாறு வரங்களை வழங்கும் தலைவனான சிவபெருமான் உறையும் தலம்;
வண்டு-இனம் இன்னிசை ஆர்த்து அடை சோலை சுலாவிய வாஞ்சிய நன்னகரே - வண்டுகள் இனிய இசையை ஒலித்து அடைகின்ற சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம்; (சுலாவுதல் - சுலவுதல் - சூழ்தல்);
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:
எழுசீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தானன தானன தானன தானன தானதனா;
சுந்தரர் தேவாரம் - 7.10.1 - "தேனெய் புரிந்துழல்" - பதிகப் பாடல் அமைப்பை ஒத்தது;
"அயிகிரி நந்தினி" என்று தொடங்கும் மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திர அமைப்பை ஒத்தது. ஆனால் அதன் அடிகள் "தனதன" என்ற சந்தத்தில் தொடங்கும். இப்பதிகப் பாடல்கள் "தானன" என்ற சந்தத்தில் தொடங்குகின்றன;
"மங்கள துங்க நிரந்தர சந்த்ர துரந்தர ப்ருந்த தராதிபதே" - மாதவ பஞ்சகம் - ஊத்துக்காடு வேங்கட கவி - அதுவும் இதே சந்தம். ஆனால் அதனில் இடையே வரும் சில சீர்கள் தனதன என்றோ தனனா என்றோ 4 மாத்திரைச் சீர்களாக அமைந்தும் வரக் காணலாம்;
O.S.Arun singing: https://www.youtube.com/watch?v=YvUTQHHSFR4
Sridevi Nrithyalaya - Bharatanatyam Dance: https://www.youtube.com/watch?v=ohevdr9DgpY
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment