Friday, June 27, 2025

P.408 - புகலூர் - நள்ளார் முப்புரங்கள்

2017-10-05

P.408 - புகலூர்

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானா தானதனா தன தானன தானதனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய்")

(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே")


1)

நள்ளார் முப்புரங்கள் நகை செய்தெரி செய்தவனே

கள்ளார் மாமலரால் கழல் போற்றிடு வார்க்கருளும்

வள்ளால் உன்னடியேன் மயல் ஆனவை தீர்த்தருளாய்

புள்ளார் பூம்பொழில்சூழ் புக லூருறை புண்ணியனே.


நள்ளார் முப்புரங்கள் நகை-செய்து எரி-செய்தவனே - பகைவர்களான அசுரர்களது முப்புரங்களைச் சிரித்து எரித்தவனே; (நள்ளார் - பகைவர்);

கள் ஆர் மா-மலரால் கழல் போற்றிடுவார்க்கு அருளும் வள்ளால் - தேன் நிறைந்த அழகிய பூக்களால் திருவடியை வழிபடும் அன்பர்களுக்கு அருள்புரியும் வள்ளலே; (வள்ளால் - வள்ளலே);

உன் அடியேன் மயல் ஆனவை தீர்த்து அருளாய் - உன் அடியேனது மயக்கங்களைத் தீர்த்து அருள்வாயாக;

புள் ஆர் பூம்பொழில் சூழ் புகலூர் உறை புண்ணியனே - பறவைகள் ஒலிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (புள் - பறவை); (ஆர்த்தல் - ஒலித்தல்);


2)

செயலால் சிந்தையினால் திரு ஓங்கிய செந்தமிழின்

இயலால் இன்னிசையால் இரு தாள்தொழு வார்துணைவா

கயலார் கண்ணிபங்கா மயல் ஆனவை தீர்த்தருளாய்

புயலார் பூம்பொழில்சூழ் புக லூருறை புண்ணியனே.


செயலால், சிந்தையினால், திரு ஓங்கிய செந்தமிழின் இயலால், இன்னிசையால் இருதாள் தொழுவார் துணைவா - மனம், வாக்கு, காயம் என்ற இம்மூன்றாலும் உன் புகழைப் போற்றி, நன்மைமிக்க செந்தமிழ் பாடிப், பணிசெய்து, உன் இரு-திருவடிகளை வழிபடும் பக்தர்களுக்குத் துணைவனே;

கயல் ஆர் கண்ணி பங்கா - கயல்மீன் போன்ற கண்களையுடைய உமையை ஒரு பங்காக உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);

மயல் ஆனவை தீர்த்தருளாய் - உன் அடியேனது மயக்கங்களைத் தீர்த்து அருள்வாயாக;

புயல் ஆர் பூம்பொழில் சூழ் புகலூர் உறை புண்ணியனே - மேகம் பொருந்துகின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (புயல் - மேகம்); (ஆர்தல் - பொருந்துதல்);


3)

கனலார் கண்ணுதலாய் கணை எய்ம்மத னைச்சினந்தாய்

அனலார் அங்கையினாய் அர வம்புனை மார்பினனே

மினலார் செஞ்சடையாய் வினை ஆனவை தீர்த்தருளாய்

புனலார் வாவிசுலாம் புக லூருறை புண்ணியனே.


கனல் ஆர் கண்ணுதலாய் - நெற்றிக்கண்ணில் தீயை உடையவனே; (ஆர்தல் - பொருந்துதல்);

கணை எய்ம் மதனைச் சினந்தாய் - மலரம்பை எய்த மன்மதனைக் கோபித்து எரித்தவனே;

அனல் ஆர் அங்கையினாய் - கையில் நெருப்பை ஏந்தியவனே;

அரவம் புனை மார்பினனே - மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனே;

மினல் ஆர் செஞ்சடையாய் - மின்னல் போல் ஒளிரும் சிவந்த சடையை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);

வினை ஆனவை தீர்த்தருளாய் - உன் அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

புனல் ஆர் வாவி சுலாம் புகலூர் உறை புண்ணியனே - நீர் நிறைந்த குளம் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (வாவி - நீர்நிலை); (சுலாம் - சுலாவும்; சுலாவுதல் - சுலவுதல் - சூழ்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.97.5 - "சோலை சுலாவும் புறவம்மே");


4)

குன்றோர் திண்சிலையாக் குனி வித்தர வம்பிணித்தே

அன்றோர் வெங்கணையால் அரண் மூன்றையும் எய்தவனே

நன்றே செய்பவனே நலி தீவினை தீர்த்தருளாய்

பொன்றா நாயகனே புக லூருறை புண்ணியனே.


குன்று ஓர் திண் சிலையாக் குனிவித்து அரவம் பிணித்தே அன்று ஓர் வெங்கணையால் அரண் மூன்றையும் எய்தவனே - முன்னம் மேருமலையை ஒரு வலிய வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, ஒரு சுட்டெரிக்கும் அம்பால் முப்புரங்களையும் எய்தவனே; (சிலை - வில்); (குனிவித்தல் - வளைத்தல்); (பிணித்தல் - கட்டுதல்); (அரண் - கோட்டை);

நன்றே செய்பவனே - நன்மையையே செய்பவனே; (சங்கரன்);

நலி தீவினை தீர்த்தருளாய் - என்னை வருத்தும் தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

பொன்றா நாயகனே - என்றும் இறவாத தலைவனே; (பொன்றுதல் - அழிதல்; சாதல்);

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே);


5)

மையார் மாமிடறா மலை மாதொரு கூறுடையாய்

செய்யா சேவுகந்தாய் திரை பாய்தரு செஞ்சடையாய்

ஐயா அங்கணனே அடி யேனிடர் தீர்த்தருளாய்

பொய்யா நான்மறையாய் புக லூருறை புண்ணியனே.


மை ஆர் மா-மிடறா - கருமை பொருந்திய அழகிய கண்டம் உடையவனே;

மலைமாது ஒரு கூறு உடையாய் - மலையான்-மகளான உமையை ஒரு பாகமாக உடையவனே;

செய்யா - செம்மேனியனே; (செய் - செம்மை; சிவப்பு நிறம்); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.11 - "ஆரழல்போற் செய்யா");

சே உகந்தாய் - இடப-வாகனனே; (சே - எருது);

திரை பாய்தரு செஞ்சடையாய் - கங்கை பாயும் செஞ்சடை உடையவனே;

ஐயா அங்கணனே - தலைவா, அருட்கண் உடையவனே;

அடியேன் இடர் தீர்த்து அருளாய் - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;

பொய்யா நான்மறையாய் - பொய்யாத நால்வேதத்தின் பொருள் ஆனவனே; வேதத்தை ஓதியவனே;

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே);


6)

மூவா முக்கணனே முறை யால்தொழு மாணியென்றும்

சாவா துய்ந்திடவே தயை செய்த மலர்க்கழலாய்

சேவார் வெல்கொடியாய் சிவ னேவினை தீர்த்தருளாய்

பூவார் சோலைகள்சூழ் புக லூருறை புண்ணியனே.


மூவா முக்கணனே - என்றும் இளமையோடு திகழும், முக்கட் பெருமானே;

முறையால் தொழு மாணி என்றும் சாவாது உய்ந்திடவே தயை செய்த மலர்க்கழலாய் - முறைப்படி உன்னை வழிபட்ட மார்க்கண்டேயர் என்றும் உயிரோடு இருக்க இரங்கி அருள்செய்த, கழல் அணிந்த மலர்ப்பாதனே; (மாணி - அந்தணச் சிறுவன்);

சே ஆர் வெல்கொடியாய் - இடபச்-சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடையவனே; (சே - இடபம்);

சிவனே வினை தீர்த்து அருளாய் - சிவபெருமானே, அடியேன் வினையைத் தீர்த்து அருள்வாயாக;

பூ ஆர் சோலைகள் சூழ் புகலூர் உறை புண்ணியனே - பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே);


7)

தாதாய் தாழ்சடையாய் தலை யிற்பலி தேர்ந்துழல்வாய்

காதார் வெண்குழையாய் கரி கானிடை ஆடுகின்ற

நாதா நாரிபங்கா நலி தீவினை தீர்த்தருளாய்

போதார் சோலைகள்சூழ் புக லூருறை புண்ணியனே.


தாதாய் - தந்தையே;

தாழ்சடையாய் - தாழும் சடையை உடையவனே;

தலையில் பலி தேர்ந்து உழல்வாய் - பிரமன் மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனே;

காது ஆர் வெண்குழையாய் - காதில் வெண்குழையை அணிந்தவனே;

கரிகானிடை ஆடுகின்ற நாதா - சுடுகாட்டில் கூத்தாடும் தலைவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.7.2 - "கரிகானிடை மாநட மாடுவர்");

நாரிபங்கா - உமைபங்கனே;

நலி தீவினை தீர்த்தருளாய் - என்னை வருத்தும் தீவினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

போது ஆர் சோலைகள் சூழ் புகலூர் உறை புண்ணியனே - பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (போது - பூ);


8)

தலையோர் பத்துடையான் தக வென்பது சற்றுமிலான்

வலியால் வெற்பிடந்தான் மணி ஆர்முடி தோள்நெரித்தாய்

அலையார் செஞ்சடையாய் அடி யேனிடர் தீர்த்தருளாய்

பொலிவார் சோலைகள்சூழ் புக லூருறை புண்ணியனே.


தலை ஓர் பத்து உடையான் - பத்துத்தலைகள் உடையவன்;

தகவு என்பது சற்றும் இலான் - கொஞ்சமும் நற்குணம் இல்லாதவன்; (தகவு - தகுதி; குணம்; அறிவு; நல்லொழுக்கம்);

வலியால் வெற்பு இடந்தான் மணி ஆர் முடி தோள் நெரித்தாய் - அந்த இராவணன் தன் பலத்தால் கயிலைமலையைப் பெயர்த்த போது, அவனது கிரீடம் அணிந்த தலைகளையும் தோள்களையும் நசுக்கியவனே;

அலை ஆர் செஞ்சடையாய் - கங்கை பொருந்திய சிவந்த சடையை உடையவனே;

அடியேன் இடர் தீர்த்து அருளாய் - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;

பொலிவு ஆர் சோலைகள் சூழ் புகலூர் உறை புண்ணியனே - அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே); (பொலிவு - அழகு; செழிப்பு );


9)

கரியான் மாமலரான் கழல் நேடி வழுத்திடவோர்

எரியாய் நின்றவனே இலை ஆர்நுனை வேலுடையாய்

பரியாய் பாசுபதா பழ வல்வினை தீர்த்தருளாய்

புரியார் புன்சடையாய் புக லூருறை புண்ணியனே.


கரியான் மாமலரான் கழல் நேடி வழுத்திட ஓர் எரியாய் நின்றவனே - திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் உன் அடிமுடியைத் தேடிக் காணார் ஆகி உன்னைத் துதிக்கும்படி ஓர் எல்லையற்ற ஜோதி உருவில் நினறவனே;

இலை ஆர் நுனை வேல் உடையாய் - இலை போன்ற நுனிகளையுடைய சூலத்தை ஏந்தியவனே;

பரியாய் பாசுபதா - பாசுபதனே, இரங்குவாயாக;

பழ-வல்வினை தீர்த்து அருளாய் - என் பழைய வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக;

புரி ஆர் புன்சடையாய் - முறுக்கிய செஞ்சடையை உடையவனே; (புரி - முறுக்கு; சுருள்);

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே (புண்ணியமூர்த்தியே);


10)

வீணார் வெற்றுரையே மிக வும்பகர் வஞ்சகர்சொல்

பேணார் நல்லவர்கள் பிடி போல்நடை மங்கைபங்கா

கோணார் வெண்பிறையாய் குழ காவென இன்பருள்வான்

பூணா அக்கணிந்தான் புக லூருறை புண்ணியனே.


வீண் ஆர் வெற்றுரையே மிகவும் பகர் வஞ்சகர் சொல் பேணார் நல்லவர்கள் - பயனற்ற பொருளற்ற பேச்சே பேசுகின்ற பொய்யர்களது பேச்சை மதிக்கமாட்டார் நல்லவர்கள்; (வீண் - பயனின்மை); (ஆர்தல் - பொருந்துதல்); (வீணார் - வீணர் என்பது எதுகை நோக்கி நீட்டல் விகாரம் பெற்றது என்றும் கொள்ளல் ஆம்); ("நல்லவர்கள்" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

"பிடி போல் நடை மங்கை பங்கா - "பெண்யானையைப் போன்ற நடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே; (பிடி - பெண்யானை);

கோண் ஆர் வெண்-பிறையாய் குழகா" என இன்பு அருள்வான் - வளைந்த வெண் திங்களை அணிந்தவனே; அழகனே" என்று வாழ்த்த, இன்பம் அருள்பவன்; (கோண் - வளைவு);

பூணா அக்கு அணிந்தான் - ஆபரணமாக எலும்பை அணிந்தவன்; (பூண் - அணி; ஆபரணம்); (அக்கு - எலும்பு); (பூணா - பூணாக; "பூணாத" என்று கொண்டு, "யாரும் அணியாத எலும்புமாலையை அணிந்தவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினன் (புண்ணியமூர்த்தி);


11)

துடியார் மெல்லிடையாள் துணை வன்படர் செஞ்சடைமேல்

கடியார் கொன்றையினான் கண நாதனு ளங்கசியும்

அடியார் இன்புறவே அவர் வல்வினை தீர்த்தருள்வான்

பொடியார் மேனியினான் புக லூருறை புண்ணியனே.


துடி ஆர் மெல்-இடையாள் துணைவன் - உடுக்கு ஒத்த சிற்றிடையை உடைய உமைக்குக் கணவன்; (துடி - உடுக்கு);

படர்-செஞ்சடைமேல் கடி ஆர் கொன்றையினான் - படரும் சிவந்த சடையின்மேல் மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவன்; (கடி - வாசனை);

கணநாதன் - பூதகணங்களுக்குத் தலைவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.8.1 - "கணநாதன் காண் அவனென் கண்ணுளானே");

உளம் கசியும் அடியார் இன்புறவே அவர் வல்வினை தீர்த்து அருள்வான் - உள்ளம் உருகும் அடியவர்கள் மகிழும்படி அவர்களது வலிய வினையைத் தீர்த்து அருள்பவன்;

பொடி ஆர் மேனியினான் - திருநீற்றைப் பூசிய திருமேனி உடையவன்;

புகலூர் உறை புண்ணியனே - திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினன் (புண்ணியமூர்த்தி);


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

சந்த விருத்தம் - "தானா தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்.

இச்சந்தத்தைத் "தானா தானதனா தனதானன தானதனா" என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.

  • அடிகளின் முதற்சீர் - தானா - இது "தனனா" என்றும் வரலாம்;

  • அடிகளின் முதற்சீர் - நெடிலில் முடியும்;

  • "தானன" என்ற 4-ஆம் சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், 5-ஆம் சீர் "தனாதனனா" என்று அமைந்து அடியின் சந்தம் கெடாது வரும்.

(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து")

(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே")


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment