2017-12-17
P.418 - உத்தரகோசமங்கை
---------------------------------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")
1)
செயசெய என்று வாழ்த்து .. சிறுவரைக் கொல்ல வந்த
இயமனைச் செற்ற பாதன் .. ஏறுகந் தேறு நாதன்
உயர்பொழில் அணிசெய் கின்ற .. உத்தர கோச மங்கைக்
கயலன கண்ணி பங்கன் .. கழலிணை கருது நெஞ்சே.
"செயசெய" என்று வாழ்த்து சிறுவரைக் கொல்ல வந்த இயமனைச் செற்ற பாதன் - ஜயஜய என்று ஈசனை வாழ்த்திய மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த கூற்றுவனை உதைத்து அழித்தவன்;
ஏறு உகந்து ஏறு நாதன் - இடபவாகனத்தை விரும்பிய தலைவன்;
உயர்-பொழில் அணி-செய்கின்ற உத்தரகோசமங்கைக் - ஓங்கிய சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில்;
கயல் அன கண்ணி பங்கன் கழலிணை கருது நெஞ்சே - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பங்கில் உடைய சிவபெருமானது இரு-திருவடிகளை, நெஞ்சே நீ எண்ணுவாயாக;
2)
எண்மலர் தூவி அன்பர் .. ஏத்திடும் முக்கண் நம்பன்
பெண்மயில் அன்ன சாயல் .. பேதையைக் கூறு கந்தான்
ஒண்மலர்ச் சோலை சூழ்ந்த .. உத்தர கோச மங்கைத்
திண்மலி எண்டோள் ஈசன் .. சேவடி எண்ணு நெஞ்சே.
எண்மலர் - அஷ்டபுஷ்பங்கள்;
நம்பன் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; விரும்பத்தக்கவன்;
பெண்மயில் அன்ன சாயல் பேதையைக் கூறு உகந்தான் - பெண்மயிலைப் போன்ற அழகிய சாயல் உடைய உமையை ஒரு கூறாக விரும்பியவன்;
ஒண்-மலர்ச்-சோலை - அழகிய பூஞ்சோலை;
திண்-மலி எண்-தோள் ஈசன் - வலிய எட்டுப் புஜங்களை உடைய ஈசன்;
3)
மூங்கரைப் பாடச் செய்வான் .. முடவரை ஓடச் செய்வான்
வேங்கையின் தோலை வீக்கி .. வெள்விடை ஏறு வேந்தன்
ஓங்கிய மதிலி லங்கும் .. உத்தர கோச மங்கைக்
கோங்கணி சடையி னான்றன் .. குரைகழல் எண்ணு நெஞ்சே.
மூங்கர் - ஊமையர்;
முடவன் - நொண்டி;
வேங்கை - புலி;
வீக்குதல் - கட்டுதல்;
ஓங்கிய மதில் இலங்கும் - உயர்ந்த மதில் திகழும்;
கோங்கு அணி சடையினான்தன் குரைகழல் எண்ணு நெஞ்சே - கோங்கமலரைச் சடையில் அணிந்த சிவபெருமானது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை, நெஞ்சே நீ எண்ணுவாயாக; (கோங்கு - கோங்கமலர்);
(* பகவத் கீதை - தியான சுலோகம் - மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் - मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम् - Divine grace makes the Dumb speak with Eloquence and the Lame cross high Mountains)
4)
நலிவுறு திங்கள் வந்து .. நற்கழல் தொழவி ரங்கிப்
பொலிவுறச் சடைமேல் வைத்தான் .. பொடியணி மேனி அத்தன்
ஒலியளி நாடு சோலை .. உத்தர கோச மங்கைப்
புலியதள் ஆடை யான்றன் .. பொன்னடி போற்று நெஞ்சே.
நலிவுறு திங்கள் வந்து நற்கழல் தொழ, இரங்கிப் பொலிவுறச் சடைமேல் வைத்தான் - சாபத்தால் தேய்ந்து வாடிய சந்திரன் வந்து நன்மைமிக்க திருவடியை வணங்கவும், இரங்கி அச்சந்திரன் திகழும்படி அதனைத் திருமுடிமேல் சூடியவன்;
பொடி அணி மேனி அத்தன் - திருநீற்றை மேனிமேல் பூசிய தந்தை;
ஒலி-அளி நாடு சோலை உத்தரகோசமங்கைப் - ஒலிக்கின்ற வண்டுகள் அடையும் சோலை திகழும் திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற; (அளி - வண்டு);
புலிஅதள் ஆடையான்தன் பொன்னடி போற்று நெஞ்சே - புலித்தோலை ஆடையாக உடைய சிவபெருமானது பொன் போன்ற திருவடிகளை, நெஞ்சே நீ போற்றுவாயாக; (அதள் - தோல்);
5)
தகுமலர் கொண்டு தேவர் .. தாள்தொழ அரண்கள் தீயிற்
புகுதர எய்த வில்லி .. போர்விடைப் பாகன் தேனை
உகுமலர் மலிந்த சோலை .. உத்தர கோச மங்கை
நகுதலை மாலை சூடி .. நற்கழல் நாடு நெஞ்சே.
தகுமலர் கொண்டு தேவர் தாள் தொழ, அரண்கள் தீயில் புகுதர எய்த வில்லி - தக்க மலர்களால் தேவர்கள் தன் திருவடியைத் தொழவும், அவர்களுக்கு இரங்கி, வில் ஏந்தி முப்புரங்கள் தீப் புக எய்தவன்; (புகுதர = புக); (தருதல் - ஒரு துணைவினை);
போர்விடைப் பாகன் - போர் செய்யவல்ல இடபத்தை ஊர்தியாக உடையவன்;
தேனை உகு-மலர் மலிந்த சோலை உத்தரகோசமங்கை - தேனைச் சொரியும் பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற;
நகுதலை மாலை சூடி நற்கழல் நாடு நெஞ்சே - ஒளிவீசும் மண்டையோடுகளால் ஆன மாலையைச் சூடிய பெருமானது நல்ல திருவடியை, நெஞ்சே நீ விரும்புவாயாக; (நகுதல் - பிரகாசித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.41.5 - "நதியதனயலே நகுதலைமாலை நாண்மதிசடைமிசை யணிந்து");
6)
அஞ்சனக் கண்ணி அஞ்ச .. ஆனையை உரித்த அண்ணல்
அஞ்செழுத் தோது மாணி .. அளவிலா ஆயுள் எய்தி
உஞ்சிட வீசு பாதன் .. உத்தர கோச மங்கை
நஞ்சினை மணிசெய் கண்டன் .. நற்கழல் நாடு நெஞ்சே.
அஞ்சனக் கண்ணி அஞ்ச ஆனையை உரித்த அண்ணல் - மை அணிந்த கண்களையுடைய உமை அஞ்சும்படி யானையின் தோலை உரித்த தலைவன்;
அஞ்செழுத்து ஓது மாணி அளவு இலா ஆயுள் எய்தி உஞ்சிட வீசு பாதன் - திருவைந்தெழுத்தை ஓதிய மார்க்கண்டேயர் என்றும் சாவாது வாழும்படி திருப்பாதத்தை வீசி நமனை உதைத்தவன்; (உஞ்சிட - உய்ந்திட);
உத்தரகோசமங்கை - திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற;
நஞ்சினை மணிசெய் கண்டன் நற்கழல் நாடு நெஞ்சே - ஆலகாலத்தை அழகிய நீலமணி போல அணிந்த கண்டம் உடைய பெருமானது நல்ல திருவடியை, நெஞ்சே நீ விரும்புவாயாக;
7)
மண்புனல் நெருப்பு காற்று .. மாவிசும் பெல்லாம் ஆய
பண்பினன் பன்றிப் பின்போய்ப் .. பார்த்தனுக்(கு) அருள்செய் வேடன்
ஒண்பிறைக் கண்ணி சூடி .. உத்தர கோச மங்கைக்
கண்புனை நெற்றி ஈசன் .. கழலடி கருது நெஞ்சே.
மண் புனல் நெருப்பு காற்று மா-விசும்பு எல்லாம் ஆய பண்பினன் - ஐம்பூதங்கள் ஆனவன்; (விசும்பு - ஆகாயம்);
பன்றிப்பின் போய்ப் பார்த்தனுக்கு அருள்செய் வேடன் - வேடனாகி ஒரு பன்றியைத் துரத்திச் சென்று அர்ஜுனனுக்கு அருள்புரிந்தவன்;
ஒண்-பிறைக் கண்ணி சூடி - ஒளியுடைய பிறையைக் கண்ணிமாலையாகத் திருமுடிமேல் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);
உத்தரகோசமங்கைக் - திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற;
கண் புனை நெற்றி ஈசன் கழலடி கருது நெஞ்சே - நெற்றிக்கண் திகழும் ஈசனது கழல் அணிந்த திருவடியை, நெஞ்சே நீ எண்ணுவாயாக;
8)
மலையெறி இலங்கைக் கோன்றன் .. மணிமுடி பத்த டர்த்தான்
அலைமலி ஆறு பாயும் .. அவிர்சடை அண்ணல் தும்பி
உலவிடு சோலை சூழ்ந்த .. உத்தர கோச மங்கை
நிலையென நின்ற ஈசன் .. நீள்கழல் நினையென் நெஞ்சே.
மலை எறி இலங்கைக்கோன்தன் மணிமுடி பத்து அடர்த்தான் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனது கிரீடம் அணிந்த பத்துத்-தலைகளையும் நசுக்கியவன்; (அடர்த்தல் - நசுக்குதல்);
அலை மலி ஆறு பாயும் அவிர்-சடை அண்ணல் - கங்கைநதி பாயும் ஒளிவீசும் சடையை உடைய ஐயன்; (அவிர்தல் - ஒளிவீசுதல்); (அப்பர் தேவாரம் - 4.72.5 - "அவிர்சடை உடையர் போலும்");
தும்பி உலவிடு சோலை சூழ்ந்த உத்தரகோசமங்கை நிலையென நின்ற ஈசன் - வண்டுகள் உலவும் சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில் நீங்காது உறைகின்ற ஈசன்;
நீள்கழல் நினை என் நெஞ்சே - அப்பெருமானது நீண்ட திருவடிகளை, என் நெஞ்சே நீ நினைவாயாக;
9)
தவ(ம்)மலி நால்வர் கேட்கச் .. சதுர்மறைப் பொருள்வி ரித்தான்
குவலயம் உண்ட மாலும் .. குளிர்மல ரானும் காணா
உவமையி லாத தேசன் .. உத்தர கோச மங்கைச்
சிவபெரு மான்றன் செய்ய .. திருவடி சிந்தி நெஞ்சே.
தவ(ம்)மலி நால்வர் கேட்கச் சதுர்மறைப் பொருள் விரித்தான் - தவம் மிகுந்த சனகாதியருக்கு வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (விரித்தல் - விளக்கியுரைத்தல்; உபதேசித்தல்);
குவலயம் உண்ட மாலும் குளிர்-மலரானும் காணா உவமை இலாத தேசன் - மண்ணை உண்ட திருமாலாலும் குளிர்ந்த தாமரைப்பூமேல் இருக்கும் பிரமனாலும் காண ஒண்ணாத ஒப்பற்ற ஒளியுருவன்; (தேசன் - தேஜஸ் என்ற சொல்லின் அடிப்படையில் வரும் சொல்);
உத்தரகோசமங்கைச் சிவபெருமான்தன் செய்ய திருவடி சிந்தி நெஞ்சே - திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற சிவபெருமானது சிவந்த திருவடியை, நெஞ்சே நீ சிந்திப்பாயாக; (செய்ய - சிவந்த);
10)
அடைநெறி அறிய மாட்டார் .. அவமொழி பேசு கையர்
மடமையார் வார்த்தை தன்னை .. மதித்திட வேண்டா; எல்லாம்
உடையவன் உம்பர் தங்கோன் .. உத்தர கோச மங்கை
விடையவன் தொழுத அன்பர் .. வேண்டின ஈவான் தானே.
அடைநெறி அறிய மாட்டார், அவமொழி பேசு கையர், மடமை ஆர் வார்த்தை-தன்னை மதித்திட வேண்டா - உய்யும் நெறியை அறியாதவர்களும், இழிந்த மொழிகளைப் பேசும் கீழோர்களும் சொல்லும் அறிவற்ற வார்த்தைகளை நீங்கள் மதிக்கவேண்டா; (கையர் - கீழோர்);
உம்பர்தம் கோன் - தேவர்கள் தலைவன்;
உத்தர கோச மங்கை விடையவன் - திருவுத்தரகோசமங்கையில் உறைகின்ற இடபவாகனன்;
தொழுத அன்பர் வேண்டின ஈவான்-தானே - வழிபாடு செய்யும் பக்தர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் கொடுப்பவன்;
11)
மணமலர்க் கொன்றை யானை .. மங்கள நாய கிக்குக்
கணவனைச் சுரர்க்கி ரங்கிக் .. கரியவி டத்தை நல்ல
உணவென உண்ட கோனை .. உத்தர கோச மங்கைத்
துணைவனை அரனை நாளும் .. தொழுதெழ இன்பம் ஆமே.
* மங்கள நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்;
சுரர்க்கு இரங்கி - தேவர்களுக்கு இரங்கி;
வி. சுப்பிரமணியன்
----------- --------------