Wednesday, July 1, 2020

03.05.074 – ஐயாறு - சில நொடியும் ஏத்த - (வண்ணம்)

03.05.074 – ஐயாறு - சில நொடியும் ஏத்த - (வண்ணம்)

2009-01-14

3.5.74) சில நொடியும் ஏத்த - (ஐயாறு - திருவையாறு)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தாத்த .. தனதான )

(வசனமிக வேற்றி மறவாதே - திருப்புகழ் - திருவாவினன்குடி)


சிலநொடியும் ஏத்த .. நினையாது

.. செடியவினை சேர்க்கும் .. அறியாமை

விலகவழி காட்டி .. அருளாயே

.. விடவரவம் ஆர்த்த .. அரையானே

சிலைகொடெயில் மாய்த்த .. திறலானே

.. திகழ்திருவை யாற்றில் .. உறைவோனே

அலைபுனலை ஏற்ற .. சடைமேலோர்

.. அரவுமதி சேர்த்த .. பெருமானே.


பதம் பிரித்து:

சில நொடியும் ஏத்த .. நினையாது,

.. செடிய வினை சேர்க்கும் .. அறியாமை

விலக வழி காட்டி .. அருளாயே;

.. விட-அரவம் ஆர்த்த .. அரையானே;

சிலைகொடு எயில் மாய்த்த .. திறலானே;

.. திகழ்-திருவையாற்றில் .. உறைவோனே;

அலை-புனலை ஏற்ற .. சடைமேல் ஓர்

.. அரவு மதி சேர்த்த .. பெருமானே.


சில நொடியும் ஏத்த நினையாது - சில நொடியளவு நேரமும் (உன்னைத்) துதிக்க எண்ணாமல்; (செடி - பாவம்; தீமை; துன்பம்); (ஏத்துதல் - துதித்தல்);

செடிய வினை சேர்க்கும் அறியாமை விலக வழி காட்டி அருளாயே - துன்பம் தரும் தீயவினையைப் பெருக்குகின்ற அறியாமையானது நீங்க வழிகாட்டி அருள்வாயாக; (செடிய - துன்பம் தருவனவாகிய);

விட-அரவம் ஆர்த்த அரையானே - விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டியவனே; (ஆர்த்தல் - கட்டுதல்);

சிலைகொடு எயில் மாய்த்த திறலானே - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எய்து அழித்த வெற்றியுடையவனே; (சிலை - வில்); (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு); (எயில் - மதில்); (மாய்த்தல் - அழித்தல்); (திறல் - வெற்றி; வலிமை);

திகழ்-திருவையாற்றில் றைவோனே - விளங்கும் திருவையாற்றில் எழுந்தருளியவனே; (திகழ்தல் - விளங்குதல்; சிறப்பு மிகுதல்);

அலை-புனலை ஏற்ற சடைமேல் ஓர் அரவு மதி சேர்த்த பெருமானே - அலைமோதும் கங்கையைத் தாங்கிய சடைமேல் ஒரு பாம்பையும் சந்திரனையும் சேர்த்துவைத்த பெருமானே; (அலைத்தல் - அலைமோதுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment