03.05.092 – கடவூர் - புலனாசைப் புயல்வீச - (வண்ணம்)
2009-01-23
3.5.92) புலனாசைப் புயல்வீச - கடவூர் - (திருக்கடையூர்)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதானத் .. தனதான )
(இறவாமற் பிறவாமல் - திருப்புகழ் - அவிநாசி)
புலனாசைப் .. புயல்வீசப்
.. பொருள்நாடித் .. தவியாமல்
மலர்தூவிக் .. கழல்பாடி
.. வளவாழ்வைப் .. பெறுவேனோ
அலைநீரைப் .. புனைவானே
.. அடியாருக் .. கெளியானே
கலைஞானப் .. பொருளானே
.. கடவூரிற் .. பெருமானே.
பதம் பிரித்து:
புலன் ஆசைப் புயல் வீசப்,
.. பொருள் நாடித் தவியாமல்,
மலர் தூவிக் கழல் பாடி,
.. வளவாழ்வைப் பெறுவேனோ;
அலைநீரைப் புனைவானே;
.. அடியாருக்கு எளியானே;
கலைஞானப் பொருளானே;
.. கடவூரில் பெருமானே.
புலன் ஆசைப் புயல் வீசப் பொருள் நாடித் தவியாமல் - ஐம்புலன்-ஆசை என்ற புயல் வீசப் பணத்தைத் தேடித் தவித்து வருந்தாமல்;
மலர் தூவிக் கழல் பாடி, வளவாழ்வைப் பெறுவேனோ - நான் பூக்களைத் தூவி, உன் திருவடிகளைப் பாடி, வளம் மிக்க நல்ல வாழ்வைப் பெற அருள்வாயாக!
அலைநீரைப் புனைவானே - அலைவீசும் கங்கையைத் திருமுடிமேல் அணிந்தவனே;
அடியாருக்கு எளியானே - பக்தர்களுக்கு எளியவனே;
கலைஞானப் பொருளானே - கலைப்பொருள் ஆகவும் ஞானப் பொருளாகவும் திகழ்பவனே; (அப்பர் தேவாரம் - 5.68.2 – "நள்ளாறனார் காரணக் கலைஞானக் கடவுளே" - கலைஞானக் கடவுள் - கலைஞானம் தரும் கடவுள் என்க. அல்லது அவற்றிற்குப் பொருளாயுள்ள கடவுள் எனலும் ஆம்);
கடவூரில் பெருமானே - திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment