03.05.103 – கச்சி ஏகம்பம் - துட்டர்க்கு உறவாகி - (வண்ணம்)
2009-01-30
3.5.103) துட்டர்க்கு உறவாகி (கச்சி ஏகம்பம்)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தத் .. தனதான )
(அற்றைக் கிரைதேடி - திருப்புகழ் - காஞ்சீபுரம்)
துட்டர்க் .. குறவாகிச்
.. சுற்றித் .. திரியாமல்
இட்டத் .. தொடுபூவை
.. இட்டுத் .. தொழுவேனோ
சிட்டர்க் .. கருள்தேவா
.. செக்கர்ச் .. சடையானே
கட்டைக் .. களைவோனே
.. கச்சிப் .. பெருமானே.
பதம் பிரித்து:
துட்டர்க்கு உறவு ஆகிச்
.. சுற்றித் திரியாமல்,
இட்டத்தொடு பூவை
.. இட்டுத் தொழுவேனோ;
சிட்டர்க்கு அருள் தேவா;
.. செக்கர்ச் சடையானே;
கட்டைக் களைவோனே;
.. கச்சிப் பெருமானே.
துட்டர்க்கு உறவு ஆகிச் சுற்றித் திரியாமல் - துஷ்டர்களோடு கூடி நான் வீணே உழலாமல்; (துட்டர் - துஷ்டர் - தீயோர்);
இட்டத்தொடு பூவை இட்டுத் தொழுவேனோ - அன்போடு உன் திருவடியில் பூக்கள் தூவி வழிபடுமாறு எனக்கு அருள்வாயாக; (இட்டம் - இஷ்டம்);
சிட்டர்க்கு அருள் தேவா - ஞானியர்களுக்கு அருளும் தேவனே; (சிட்டர் - ஞானியர்);
செக்கர்ச் சடையானே - சிவந்த சடையை உடையவனே; (செக்கர் - சிவப்பு);
கட்டைக் களைவோனே - பந்தங்களை நீக்குபவனே; (கட்டு - பந்தம்);
கச்சிப் பெருமானே - திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment