03.05.085 – ஆரூர் - சுற்றுமா தீவினைப் - (வண்ணம்)
2009-01-21
3.5.85) சுற்றுமா தீவினைப் (ஆரூர் - திருவாரூர்)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தனா தானனத் .. தனதான )
(பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)
சுற்றுமா தீவினைப் .. பிணியாலே
.. துக்கமார் வாழ்வினிற் .. சுழலாதே
பற்றெலா(ம்) மாய்தரப் .. புகழ்பாடிப்
.. பத்தியார் சீரெனக் .. கருளாயே
நற்றவா மாபொனைக் .. குளநீரில்
.. நச்சுமோர் தோழருக் .. கருள்வானே
வெற்றியார் ஏறுடைக் .. கொடியாயேர்
.. மிக்கவா ரூரினிற் .. பெருமானே.
பதம் பிரித்து:
சுற்று மா தீவினைப் பிணியாலே
.. துக்கம் ஆர் வாழ்வினிற் சுழலாதே,
பற்றெலாம் மாய்தரப் புகழ் பாடிப்
.. பத்தி ஆர் சீர் எனக்கு அருளாயே;
நற்றவா; மா பொனைக் குளநீரில்
.. நச்சும் ஓர் தோழருக்கு அருள்வானே;
வெற்றி ஆர் ஏறுடைக் கொடியாய்; ஏர்
.. மிக்க ஆரூரினில் பெருமானே.
சுற்றும் மா தீவினைப் பிணியாலே - (என்னைச்) சூழ்ந்திருக்கும் பெரும் தீவினைக் கட்டின் விளைவாக; (சுற்றுதல் - சூழ்ந்திருத்தல்; விடாதுபற்றுதல்);
துக்கம் ஆர் வாழ்வினிற் சுழலாதே - துக்கம் மிக்க வாழ்க்கையில் சிக்கி மனம் வருந்தாமல்; (ஆர்தல் - நிறைதல்);
பற்று எலாம் மாய்தரப் புகழ் பாடிப் பத்தி ஆர் சீர் எனக்கு அருளாயே - என் பந்தங்கள் எல்லாம் அழியும்படி உன் புகழைப் பாடிப் பக்தி மிகும் சீரை எனக்கு அருள்வாயாக; (மாய்தல் - அழிதல்); (தருதல் - ஒரு துணைவினை);
நற்றவா - நல்ல தவவடிவினனே; (நற்றவன் - நல் தவன் - நல்ல தவவடிவினன்); (சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லும் நா நமச்சிவாயவே");
மா பொனைக் குளநீரில் நச்சும் ஓர் தோழருக்கு அருள்வானே - (சுந்தரருக்குத் திருமுதுகுன்றில் அருளிய பொற்காசுகளை அவரை அங்கேயே ஆற்றில் இடச் செய்து பின்னர்) அந்தப் பெரும்பொன்னைத் திருவாரூரில் கமலாலயக் குளத்தில் (உன்னை) விரும்பும் ஒப்பற்ற தம்பிரான் தோழரான அவருக்கு அருளியவனே; (நச்சுதல் - விரும்புதல்);
வெற்றி ஆர் ஏறுடைக் கொடியாய் - வெற்றி மிக்க இடபக்கொடியை உடையவனே;
ஏர் மிக்க ஆரூரினில் பெருமானே - அழகிய திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; (ஏர் - அழகு; நன்மை);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment