Wednesday, July 1, 2020

03.05.076 – பொது - தேர்நிற்கச் சினந்து - (வண்ணம்)

03.05.076 – பொது - தேர்நிற்கச் சினந்து - (வண்ணம்)

2009-01-15

3.5.76 - தேர்நிற்கச் சினந்து - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத்தத் தனந்த தத்தந் .. தனதான )


தேர்நிற்கச் சினந்து வெற்புந் .. திடுவோன்வாய்

.. ஓர்பத்தைப் புலம்ப வைக்குங் .. கழல்பாடி

நீர்மிக்குப் பரந்த லைக்குஞ் .. சடைபாடி

.. நீலத்தைப் பெறுங்க ழுத்தின் .. புகழ்பாடிச்

சீர்மிக்குச் சிவந்தி ருக்குந் .. திருமேனித்

.. தீச்சுற்றிப் பொலிந்தி ருக்கும் .. பொடிபாடிப்

பாருற்றுப் பணிந்தி ரக்குங் .. குணசீலர்

.. பாவத்தைக் களைந்த ளிக்கும் .. பெருமானே.


பதம் பிரித்து:

தேர் நிற்கச், சினந்து வெற்பு உந்திடுவோன்-வாய்

.. ஓர்-பத்தைப் புலம்ப வைக்கும் கழல் பாடி,

நீர் மிக்குப் பரந்து அலைக்கும் சடை பாடி,

.. நீலத்தைப் பெறும் கழுத்தின் புகழ் பாடிச்,

சீர் மிக்குச் சிவந்து இருக்கும் திருமேனித்

.. தீச் சுற்றிப் பொலிந்து இருக்கும் பொடி பாடிப்,

பார் உற்றுப் பணிந்து இரக்கும் குணசீலர்

.. பாவத்தைக் களைந்து அளிக்கும் பெருமானே.


தேர் நிற்கச், சினந்து, வெற்பு உந்திடுவோன் வாய் ஓர்-பத்தைப் புலம்ப வைக்கும் பாடி - வானில் செல்லும் தனது தேர் ஓடாமல் நின்றுவிடவும், கோபித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முயலும் இராவணனது பத்து வாய்களையும் அழுது புலம்பவைத்த (=அவனை நசுக்கிய) திருவடியைப் பாடி; (வெற்பு - மலை - இங்கே, கயிலைமலை); (உந்துதல் - தள்ளுதல்; வீசியெறிதல்);

நீர் மிக்குப் பரந்து அலைக்கும் சடை பாடி - கங்கைநதி பரவி அலைமோதுகின்ற சடையைப் பாடி;

நீலத்தைப் பெறும் கழுத்தின் புகழ் பாடி - நீலகண்டத்தின் புகழைப் பாடி;

சீர் மிக்குச் சிவந்து இருக்கும் திருமேனித் தீச் சுற்றிப் பொலிந்து இருக்கும் பொடி பாடி - அழகிய சிவந்த திருமேனி என்ற தீயைச் சுற்றிப் பொலிந்து இருக்கும் சாம்பலான திருநீற்றைப் பாடி; (திருமேனித்தீ - திருமேனி என்ற நெருப்பு - உருவகம்); (பொடி - சாம்பல்; திருநீறு);

பார் உற்றுப் பணிந்து இரக்கும் குணசீலர் பாவத்தைக் களைந்து அளிக்கும் பெருமானே - நிலத்தை அடைந்து (தரையில் வீழ்ந்து) வணங்கி வேண்டுகின்ற குணசீலர்களது (பக்தர்களது) வினைகளைத் தீர்த்து அருள்புரிவான் சிவபெருமான். (பார் - நிலம்); (இரத்தல் - வேண்டுதல்); (அளித்தல் - அருள்செய்தல்);


இலக்கணக் குறிப்புகள் - 1. படர்க்கையில் பரவுவதாகக் கொண்டால், "அளிக்கும் - கொடுப்பான்" - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று; 2. முன்னிலையில் பரவுவதாகக் கொண்டால், "போற்றி" என்ற ஒரு சொல்லை ஈற்றில் வருவித்துக்கொள்க;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment