03.05.096 – பொது - மனத்தினில் ஆசைத்திரை - (வண்ணம்)
2009-01-25
3.5.96) மனத்தினில் ஆசைத்திரை - (பொது)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனத்தன தானத் .. தனதான )
(உரத்துறை போதத் தனியான - திருப்புகழ் - வைத்தீசுரன்கோயில் )
மனத்தினி லாசைத் .. திரையால்நான்
.. மயக்கம தாகிச் .. சுழலாமல்
வனத்தலர் தூவித் .. தமிழ்பாடி
.. மலர்க்கழல் நாடிப் .. பணிவேனோ
நினைத்தொழு மாணிக் .. கரணானாய்
.. நிழற்றிரி சூலப் .. படையானே
சினப்பெரு வேழத் .. துரிமூடீ
.. திரைப்புனல் வேணிப் .. பெருமானே.
பதம் பிரித்து:
மனத்தினில் ஆசைத்-திரையால் நான்
.. மயக்கமது ஆகிச் சுழலாமல்,
வனத்து அலர் தூவித் தமிழ் பாடி
.. மலர்க்கழல் நாடிப் பணிவேனோ;
நினைத் தொழு மாணிக்கு அரண் ஆனாய்;
.. நிழல்-திரிசூலப் படையானே;
சினப் பெரு வேழத்து உரிமூடீ;
.. திரைப்புனல் வேணிப் பெருமானே.
மனத்தினில் ஆசைத்-திரையால் நான் மயக்கம்அது ஆகிச் சுழலாமல் - மனத்தில் ஆசைக்கடலால் நான் மயங்கி வருந்தாமல்; (ஆசைத்திரை - ஆசை அலைகள்; ஆசைக்கடல்; ஆசை என்ற திரை); (சுழலுதல் - மனங்கலங்குதல்; சஞ்சலப்படுதல்; சோர்தல்); (மயக்கமது - மயக்கம்; அது - பகுதிப்பொருள்விகுதி);
வனத்து அலர் தூவித் தமிழ் பாடி - சோலையில் பூத்த பூக்களைத் தூவித் தமிழ்ப் பாமாலைகளைப் பாடி; (வனம் - சோலை); (அலர் - பூ);
மலர்க்கழல் நாடிப் பணிவேனோ - உன் மலர் போன்ற திருவடியை விரும்பி வணங்குமாறு அருள்வாயாக; (மலர்க்கழல் - மலர் போன்ற பாதம்);
நினைத் தொழு மாணிக்கு அரண் ஆனாய் - உன்னைத் தொழுத மார்கண்டேயருக்குக் காவல் ஆனவனே; (நினை - நின்னை - உன்னை); (மாணி - மார்க்கண்டேயர்); (அரண் - பாதுகாவல்);
நிழல் திரிசூலப் படையானே - ஒளி வீசும் சூலாயுதத்தை ஏந்தியவனே; (நிழல் - ஒளி); (நிழற்றிரிசூலப்படை - நிழல்+திரிசூலப்படை - ஒளி வீசும் சூலாயுதம்); (அப்பர் தேவாரம் 4.4.1 - "... ஒளிதிகழ் சூலத்தி னானும்...");
சினப் பெரு வேழத்து உரிமூடீ - சினம் மிகுந்த பெரிய யானையின் தோலைப் போர்த்தவனே; (வேழம் - யானை); (உரி - தோல்); (மூடீ - மூடியவனே - போர்த்தவனே);
திரைப்புனல் வேணிப் பெருமானே - அலைகளையுடைய கங்கையைச் சடையில் உடைய பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment