Wednesday, July 22, 2020

03.05.104 – பராய்த்துறை - அங்கலாய்ப்பு இடர் துன்னி - (வண்ணம்)

03.05.104 – பராய்த்துறை - அங்கலாய்ப்பு இடர் துன்னி - (வண்ணம்)

2009-02-01

3.5.104) அங்கலாய்ப்பு இடர் துன்னி - (பராய்த்துறை - திருப்பராய்த்துறை)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்த தாத்தன தன்ன தனந்தன

தத்தத் தத்தத் .. தனதான )

(வம்ப றாச்சில - திருப்புகழ் - காஞ்சிபுரம்)


அங்க லாய்ப்பிடர் துன்னி நலிந்திட

.. .. அத்தத் திற்குப் .. பலநாளும்

.. அன்ப னாய்ப்புவி தன்னில் அலைந்திடும்

.. .. அப்பித் தத்திற் .. சுழல்மூடம்

மங்கி வார்த்தைகள் மின்னி விளங்கிட

.. .. மட்டுச் சொட்டத் .. தமிழ்பாடி

.. வந்து காத்திடும் உன்னை மனந்தனில்

.. .. வைத்துத் தப்பிப் .. பிழையேனோ

பங்க னாய்த்திகழ் தென்ன அயன்றலை

.. .. பற்றிப் பிச்சைக் .. குழல்வோனே

.. பண்பி னாற்பொலி செம்மை பொருந்திய

.. .. பத்தர்க் குப்பற் .. றதுவானாய்

தெங்கு நாற்புற(ம்) மன்ன நலங்கிளர்

.. .. செய்க்குச் சுத்தப் .. புனலோடும்

.. தென்ப ராய்த்துறை தன்னை விரும்பிய

.. .. செக்கர்ச் சிட்டப் .. பெருமானே.


பதம் பிரித்து:

அங்கலாய்ப்பு இடர் துன்னி நலிந்திட,

.. .. அத்தத்திற்குப் பல நாளும்

.. அன்பனாய்ப், புவி-தன்னில் அலைந்திடும்

.. .. அப்-பித்தத்திற் சுழல்-மூடம்

மங்கி, வார்த்தைகள் மின்னி விளங்கிட

.. .. மட்டுச் சொட்டத் தமிழ் பாடி,

.. வந்து காத்திடும் உன்னை மனந்தனில்

.. .. வைத்துத் தப்பிப் பிழையேனோ;

பங்கனாய்த் திகழ் தென்ன; அயன்-தலை

.. .. பற்றிப் பிச்சைக்கு உழல்வோனே;

.. பண்பினாற் பொலி செம்மை பொருந்திய

.. .. பத்தர்க்குப் பற்றதுவானாய்;

தெங்கு நாற்புற(ம்) மன்ன, நலங்-கிளர்

.. .. செய்க்குச் சுத்தப் புனல் ஓடும்,

.. தென்-பராய்த்துறை தன்னை விரும்பிய

.. .. செக்கர்ச் சிட்டப் பெருமானே.


அங்கலாய்ப்பு இடர் துன்னி நலிந்திட, அத்தத்திற்குப் பல நாளும் அன்பனாய்ப் - துக்கமும் இடரும் சூழ்ந்து வருத்தும்படி, பொருள்மீது நெடுங்காலம் ஆராத காதல் உடையவன் ஆகி; (அங்கலாய்த்தல் - துக்கித்தல்; இச்சித்தல்); (அத்தம் - அர்த்தம் - பொருள்; பணம்);

புவி-தன்னில் அலைந்திடும் அப்-பித்தத்திற் சுழல்-மூடம் மங்கி - உலகில் அலைகின்ற அந்தப் பித்தத்தில் சுழல்கின்ற அறியாமை நீங்கி; (புவி - பூமி); (பித்தம் - மயக்கம்; பைத்தியம்); (மூடம் - அறிவின்மை);

வார்த்தைகள் மின்னி விளங்கிட மட்டுச் சொட்டத் தமிழ் பாடி - சொற்கள் ஒளிவீசத் தேன் சொட்டும்படி தமிழ்ப் பாமாலைகளைப் பாடி; (மின்னுதல் - ஒளிசெய்தல்); (மட்டு - தேன்);

வந்து காத்திடும் உன்னை மனந்தனில் வைத்துத் தப்பிப் பிழையேனோ - அடியாரைத் தேடி வந்து காக்கும் உன்னை என் மனத்தில் வைத்து நான் உய்யுமாறு அருள்வாயாக; (தப்பிப் பிழைத்தல் - உய்தல்);

பங்கனாய்த் திகழ் தென்ன - உமையை ஒரு பங்காக உடைய, இனியவனே, அழகனே; (தென்னன் - இனியவன்; அழகியவன்);

அயன்-தலை பற்றிப் பிச்சைக்கு உழல்வோனே - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சைக்குத் திரிபவனே; (அயன் - பிரமன்);

பண்பினாற் பொலி செம்மை பொருந்திய பத்தர்க்குப் பற்றது ஆனாய் - நற்குணங்களால் பொலிகின்ற செம்மை மிகுந்த பக்தர்களுக்குப் பற்றுக்கோடு ஆனவனே; (பண்பு - இயல்பு; நற்குணம்); (பொலிதல் - விளங்குதல்; சிறத்தல்); (செம்மை - செவ்வை; பெருமை); (பற்று - பற்றுக்கோடு); (சம்பந்தர் தேவாரம் - 1.97.6 – "நின்னடி சரணென்னும் அடியோர்க்குப் பற்றதுவாய பாசுபதன்");

தெங்கு நாற்புறம் மன்ன, நலங்-கிளர் செய்க்குச் சுத்தப் புனல் ஓடும் - எல்லாப் பக்கமும் தென்னை மரங்கள் மிகுந்ததும், வளம் மிக்க வயலுக்குக் காவிரியின் தூய நீர் ஓடுகின்றதுமான; (தெங்கு - தென்னைமரம்); (மன்னுதல் - நிலைத்தல்; தங்குதல்; மிகுதல்); (செய் - வயல்); (சுந்தரர் தேவாரம் - 7.57.12 – "நலங்கிளர் வயல் நாவலர் வேந்தன்");

தென் பராய்த்துறை தன்னை விரும்பிய செக்கர்ச் சிட்டப் பெருமானே - அழகிய திருப்பராய்த்துறையை இடமாக விரும்பியவனும் செம்மேனியனும் சிரேஷ்டமானவனுமான பெருமானே; (தென் - அழகு; இனிமை); (செக்கர் - சிவப்பு); (சிட்டம் - பெருமை; சிரேஷ்டம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment