Saturday, July 11, 2020

03.05.094 – பொது - அண்டினார்க்கு ஈதற்கு - (வண்ணம்)

03.05.094 – பொது - அண்டினார்க்கு ஈதற்கு - (வண்ணம்)

2009-01-24

3.5.94) அண்டினார்க்கு ஈதற்கு - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனாத் தானத் .. தனதான )

(வண்டுபோற் சாரத் தருள்தேடி - திருப்புகழ் - திருவெஞ்சமாக்கூடல்)


அண்டினார்க் கீதற் .. கறியாமல்

.. அன்பிலாத் தீயர்க் .. குறவாகி

மண்டுவாய்ப் பாரிற் .. சுழலாதே

.. வஞ்சியாத் தாளைத் .. தொழுவேனோ

கண்டனாய்த் தேவர்க் .. கமுதீவாய்

.. கங்கைநீர்ச் சாரற் .. சடைமேலோர்

இண்டைபோற் கூனற் .. பிறைசூடீ

.. என்பராப் பூணற் .. பெருமானே.


பதம் பிரித்து:

அண்டினார்க்கு ஈதற்கு அறியாமல்,

.. அன்பு-இலாத் தீயர்க்கு உறவு ஆகி,

மண்டுவாய்ப் பாரிற் சுழலாதே,

.. வஞ்சியாத் தாளைத் தொழுவேனோ;

கண்டனாய்த் தேவர்க்கு அமுது ஈவாய்;

.. கங்கைநீர்ச் சாரற் சடைமேல் ஓர்

இண்டைபோல் கூனற் பிறை சூடீ;

.. என்பு அராப் பூணற் பெருமானே.


அண்டினார்க்கு ஈதற்கு அறியாமல் - (இல்லை என்று வந்து என்னை) அண்டியவர்களுக்கு எதுவும் கொடுக்கும் மனம் இல்லேனாய் = இரப்பவர்களுக்கு ஒன்றும் கொடாமல்; (அண்டுதல் - கிட்டுதல்; ஆசிரயித்தல்);

அன்பு-லாத் தீயர்க்கு வு ஆகி - அன்பு இல்லாத தீயோருக்கு நட்பு உடையவன் ஆகி;

மண்டுவாய்ப் பாரிற் சுழலாதே - மூடனாகி உலகில் உழலாமல்; (மண்டு - மூடன்); (சுழல்தல் - சுற்றித்திரிதல்; மனம் கலங்குதல்);

வஞ்சியாத் தாளைத் தொழுவேனோ - அடியார்களுக்கு ஒளித்தல் இன்றி வரங்களை அருளும் உன் திருவடியை வணங்க அருள்வாயாக; (வஞ்சித்தல் - ஏமாற்றுதல்); (திருப்பல்லாண்டு - 9.29.5 - "கரந்துங் கரவாத கற்பகனாகிக்" - கண்ணுக்குப் புலனாகாமல் இருந்தும் வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் கற்பகமரம் போல்பவனாய்);

கண்டனாய்த் தேவர்க்கு அமுது ஈவாய் - (விடம் உண்ண அஞ்சாத) வீரனாய் நீலகண்டன் ஆகித் தேவர்களுக்கு அமுதை அளித்தவனே; (கண்டன் - 1. வீரன்; 2. நீலகண்டன்; ஒருபுடைப் பெயர்; ஏகதேசம்; சம்பந்தன் என்ற பெயர் பந்தன் என்று சில தேவாரப்பாடல்களில் வருவதுபோல் இங்கே நீலகண்டன் என்பது கண்டன் என்று வந்தது); (அப்பர் தேவாரம் - 6.81.8 - "கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்" - மதநீர் ஒழுகுங் களிற்றினை உரித்த வீரனாய்);

கங்கைநீர்ச் சாரற் சடைமேல் - கங்கையாற்றின் சாரல் உடைய சடையின்மேல்;

ர் இண்டைபோல் கூனற் பிறை சூடீ - ஓர் இண்டைமாலைபோல் வளைந்த பிறைச்சந்திரனை அணிந்தவனே; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (கூனல் - வளைவு);

என்பு அராப் பூற் பெருமானே - எலும்பையும் பாம்பையும் அணிதலை உடைய நல்ல பெருமானே; (என்பு - எலும்பு); (அரா - பாம்பு); (பூணல் - பூண்தல் - அணிதல்); (பூணற் பெருமான் - 1. பூணல் + பெருமான் - பூணுதல் உடைய பெருமான்; 2. பூண் நல் பெருமான் - பூணும் நல்ல பெருமான்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment