Friday, July 3, 2020

03.05.081 – அண்ணாமலை - எண்ணா மதியாலே - (வண்ணம்)

03.05.081 – அண்ணாமலை - எண்ணா மதியாலே - (வண்ணம்)

2009-01-19

03.05.081) எண்ணா மதியாலே - (அண்ணாமலை - திருவண்ணாமலை)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தன்னா .. தனதான )


எண்ணா .. மதியாலே

.. இன்னா .. உறுவேனின்

திண்ணார் .. வினைதீரச்

.. செம்மான் .. அருளாயே

மண்ணார் .. பலர்கூடி

.. மன்னே .. மதிசூடீ

அண்ணா .. எனவோதும்

.. அண்ணா .. மலையானே.


பதம் பிரித்து:

எண்ணா மதியாலே

.. இன்னா உறுவேனின்,

திண் ஆர் வினை தீரச்

.. செம்மான் அருளாயே;

மண்ணார் பலர் கூடி,

.. "மன்னே; மதிசூடீ;

அண்ணா" என ஓதும்

.. அண்ணாமலையானே.


எண்ணா மதியாலே இன்னா உறுவேனின் - உன்னை எண்ணும் அறிவு இன்மையால், வினைப்பயனை எண்ணாமல் தீவினை செய்து துன்பம் உறுகின்ற அடியேனின்; (இன்னா - துன்பம்);

திண் ஆர் வினை தீரச் செம்மான் அருளாயே - வலிமை பொருந்திய வினைகள் தீர்வதற்குச், சிவந்த நிறம் உடைய சிவனே, அருள்புரிவாயாக; (திண் - திண்மை - வலிமை); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்); (மான் - பெரியோன்); (சம்பந்தர் தேவாரம் - 1.87.10 - "செருமால் விடையூருஞ் செம்மான்");

மண்ணார் பலர் கூடி "மன்னே; மதிசூடீ; அண்ணா" என ஓதும் அண்ணாமலையானே - உலகத்தவர்கள் பலரும் ஒன்று திரண்டு "அரசே! பிறைச்சந்திரனைச் சூடியவனே! அண்ணலே!" என்று போற்றும் திருவண்ணாமலையானே. (மண்ணார் - பூமியில் வாழ்பவர்கள்); (மன் - அரசன்); (அண்ணா - "அண்ணல்" என்பதன் விளியான "அண்ணால்" என்பது "அண்ணா" என மருவிற்று); (சுந்தரர் தேவாரம் - 7.24.5 - "அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment