Saturday, July 4, 2020

03.05.088 – பொது - அல்லதே புரிவதனாலே - (வண்ணம்)

03.05.088 – பொது - அல்லதே புரிவதனாலே - (வண்ணம்)

2009-01-22

3.5.88) அல்லதே புரிவதனாலே - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தய்ய தானன .. தனதான )

(அல்லில் நேருமி னதுதானும் - திருப்புகழ் - வள்ளியூர்)


அல்ல தேபுரி .. வதனாலே

.. அல்ல லேமிகும் .. அடியேனும்

வல்ல வாபவன் .. எனு(ம்)நாமம்

.. சொல்லு மாறருள் .. புரியாயே

கல்லி னோடலை .. கடல்நீரில்

.. கையர் வீசிய .. அவர்வாழ

நல்ல தோர்புணை .. அதுவாக

.. நல்கி னாய்சிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

அல்லதே புரிவதனாலே

.. அல்லலே மிகும் அடியேனும்,

வல்லவா பவன் எனும் நாமம்

.. சொல்லுமாறு அருள்புரியாயே;

கல்லினோடு அலைகடல் நீரில்

.. கையர் வீசிய அவர் வாழ

நல்லதோர் புணை அது ஆக

.. நல்கினாய் சிவபெருமானே.


* 3,4-ஆம் அடிகள் - சமணர்கள் அப்பரைக் கல்லில் கட்டிக் கடலில் எறிந்தபொழுது அவர் திருவைந்தெழுத்தைச் சொல்லி உய்ந்ததைச் சுட்டியது.


அல்லதே புரிவதனாலே அல்லலே மிகும் அடியேனும் - தீவினையே செய்வதனால் துன்பமே மிகுகின்ற அடியேனும்; (அல்லது - தீவினை); (அல்லல் - துன்பம்);

வல்லவா பவன் எனும் நாமம் சொல்லுமாறு அருள்புரியாயே - வல்லவாறு (இயன்ற அளவில்) "பவன்" முதலிய திருநாமங்களைச் சொல்லி வழிபட அருள்வாயாக; (வல்லவா - 1. வல்லவாறு. 2. வல்லவனே என்ற விளி - என்று இருவிதமாகவும் பொருள்கொள்ளல் ஆம்); (பவன் - சிவன் திருநாமங்களில் ஒன்று); (அப்பர் தேவாரம் - 4.112.9 - "பவனெனு நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்");

கல்லினோடு அலைகடல் நீரில் கையர் வீசிவர் வாழ – கீழோர்களான சமணர்கள் கல்லோடு கட்டிக் கடலில் வீசிய திருநாவுக்கரசர் உய்யும்படி; (கையர் - கீழ்மக்கள்; வஞ்சகர்);

நல்லதோர் புணை அது ஆக நல்கினாய் சிவபெருமானே - அக்கல்லே நல்ல படகாகி அவரைக் கரைசேர்க்கும்படி அருளியவனே, சிவபெருமானே; (புணை - தெப்பம்); (நல்குதல் - அருள்செய்தல்);


(அப்பர் தேவாரம்: 5.72.7 -

கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்

ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால்

நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன்

நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே.)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment