Monday, July 20, 2020

03.05.101 – வான்மியூர் - காடு நாடு நாடோறும் - (வண்ணம்)

03.05.101 – வான்மியூர் - காடு நாடு நாடோறும் - (வண்ணம்)

2009-01-29

3.5.101) காடு நாடு நாடோறும் - வான்மியூர் - (திருவான்மியூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தான தானான தானத் .. தனதான )

(பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே - திருப்புகழ் - பொது)

(காதி மோதி வாதாடு - திருப்புகழ் - பொது)


காடு நாடு நாடோறும் ஓடிப் .. பணமீது

.. காத லாகி மாவாரி சூழித் .. தரைமீது

கேடு தேடி வீழாது தாளைத் .. தொழுவேனோ

.. கேழி லாத மாசோதி யேபொற் .. சடையானே

தோடு காதில் ஆர்மாதை ஆகத் .. துடையானே

.. சூரன் மீது வேலேவு வேளைத் .. தருவோனே

வீடு நாடி னார்பாடி ஆடிப் .. பணியீசா

.. வேலை ஓதம் ஆர்வான்மி யூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

காடு(ம்) நாடு(ம்) நாள்தோறும் ஓடிப், பணம் மீது

.. காதல் ஆகி, மா வாரி சூழ் இத்-தரைமீது

கேடு தேடி வீழாது தாளைத் தொழுவேனோ;

.. கேழ் இலாத மா சோதியே; பொற்சடையானே;

தோடு காதில் ஆர் மாதை ஆகத்து உடையானே;

.. சூரன் மீது வேல் ஏவு வேளைத் தருவோனே;

வீடு நாடினார் பாடி ஆடிப் பணி ஈசா;

.. வேலை ஓதம் ஆர் வான்மியூரிற் பெருமானே.


காடும் நாடும் நாள்தோறும் ஓடி - பல இடங்களிலும் தினந்தோறும் அலைந்து திரிந்து;

(* காடு - அப்பர் தேவாரம் - 6.95.5 - "திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும் திருவெண்ணீ றணியாத திருஇல் ஊரும் ...... அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே");

பணம் மீது காதல் ஆகி - பணத்தின் மேல் ஆசை கொண்டு, அதனால்;

மா வாரி சூழ் இத் தரைமீது கேடு தேடி வீழாது தாளைத் தொழுவேனோ - பெரிய கடல் சூழ்ந்த இப்புவிமீது கேட்டையே தேடி அழியாமல், உன் திருவடியை வழிபட அருள்வாயாக; (வாரி - கடல்); (வீழ்தல் - விழுதல்);

கேழ் இலாத மா சோதியே - ஒப்பற்ற பெருஞ்சோதியே; (கேழ் - ஒப்பு); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.8 - "கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை");

பொற்சடையானே - பொன் போன்ற சடையை உடையவனே;

தோடு காதில் ஆர் மாதை ஆகத்து உடையானே - காதில் தோடு அணியும் உமையைத் திருமேனியில் உடையவனே; (ஆர்தல் - அணிதல்; பொருந்துதல்); (ஆகம் - மேனி);

சூரன் மீது வேல் ஏவு வேளைத் தருவோனே - சூரபதுமன் மீது வேலை ஏவிய முருகனைத் தந்தவனே; (வேள் - முருகன்);

வீடு நாடினார் பாடி ஆடிப் பணி ஈசா - முக்தி தேடுபவர்கள் பாடி ஆடி வணங்கும் ஈசனே; (வீடு - முக்தி);

வேலை ஓதம் ஆர் வான்மியூரிற் பெருமானே - கடலின் அலைகள் ஒலிக்கின்ற திருவான்மியூரில் உறையும் பெருமானே. (வேலை - கடல்); (ஓதம் - அலை); (ஆர்த்தல் - ஒலித்தல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment