Saturday, July 18, 2020

03.05.099 – பொது - தனத்தைத் தேடித் - (வண்ணம்)

03.05.099 – பொது - தனத்தைத் தேடித் - (வண்ணம்)

2009-01-28

3.5.99) தனத்தைத் தேடித் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத் தானத் .. தனதான )

(கருப்பற் றூறிப் பிறவாதே - திருப்புகழ் - பொது)


தனத்தைத் தேடித் .. தரைமீது

.. தருக்கிப் பேசித் .. திரியாமல்

நினைப்பைப் பாதத் .. துணைமீதே

.. நிறுத்திப் பாடப் .. பணியாயே

உனைப்பற் றார்கட் .. கரியானே

.. உளத்திற் பூசித் .. தெழுபூசல்

மனத்துக் கோயிற் .. பரமாமான்

.. மறிக்கைக் கோலப் .. பெருமானே.


பதம் பிரித்து:

தனத்தைத் தேடித் தரைமீது

.. தருக்கிப் பேசித் திரியாமல்,

நினைப்பைப் பாதத்துணைமீதே

.. நிறுத்திப் பாடப் பணியாயே;

உனைப் பற்றார்கட்கு அரியானே;

.. உளத்திற் பூசித்து எழு பூசல்

மனத்துக் கோயிற் பரமா; மான்

.. மறிக்-கைக் கோலப் பெருமானே.


* அடிகள் 3, 4 - பூசலார் நாயனார் வரலாற்றைச் சுட்டியது.


தனத்தைத் தேடித் தரைமீது தருக்கிப் பேசித் திரியாமல், - நான் பல நாளும் பொருளையே தேடி, இந்தப் பூமியில் ஆணவம் மிக்க பேச்சினைப் பேசி அலையாமல்; (தனம் - செல்வம்); (தரை - பூமி); (தருக்குதல் - கர்வம் கொள்ளுதல்);

நினைப்பைப் பாதத்துணைமீதே நிறுத்திப் பாடப் பணியாயே - என்னுடைய எண்ணத்தை உன் இரு திருவடிகளின்மேல் நிலைபெறச் செய்து உன் புகழைப் பாடுமாறு அருள்வாயாக; (துணை - இரண்டு); (பாதத்துணை - இரு திருவடிகள்); (நிறுத்துதல் - மனத்தை ஒருநிலையில் இருத்துதல்); (பணித்தல் - அருளிச்செய்தல்; ஆணையிடுதல்);

உனைப் பற்றார்கட்கு அரியானே - உன் திருவடியைப் பற்றாதவர்களால் அடைய இயலாதவனே; (பற்றுதல் - பிடித்தல்; மனத்துக் கொள்ளுதல்);

உளத்திற் பூசித்து எழு பூசல் மனத்துக் கோயில் பரமா - உள்ளத்தில் உன்னைப் பூசித்து வந்த பூசலார் நாயனார் தம் மனத்துள் அமைத்த கோயிலில் எழுந்தருளிய பரமனே; (பூசல் - பூசலார் நாயனார்); (பெரிய புராணம் - பூசலார் நாயனார் புராணம் - 12.65.10 - "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம்");

மான்மறிக்-கைக் கோலப் பெருமானே - கையில் மான்கன்றை ஏந்திய கோலத்தையுடைய பெருமானே; (மான்மறி - மான்கன்று);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment