Saturday, July 4, 2020

03.05.090 – பொது - அறியாமைக்கு இடம் ஆகி - (வண்ணம்)

03.05.090 – பொது - அறியாமைக்கு இடம் ஆகி - (வண்ணம்)

2009-01-22

3.5.90) அறியாமைக்கு இடம் ஆகி - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதானத் .. தனதான )

(இறவாமற் பிறவாமல் - திருப்புகழ் - அவிநாசி)


அறியாமைக் .. கிடமாகி

.. அலலேயுற் .. றலையாமல்,

வெறியார்நற் .. றமிழ்பாடி

.. வினைதீரற் .. கருளாயே

மறியார்கைத் .. தலனேமுன்

.. மதனாரைச் .. சுடுவானே

குறியேமுத் .. தலைவேலா

.. குளிர்வேணிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

அறியாமைக்கு இடம் ஆகி,

.. அலலே உற்று அலையாமல்,

வெறி ஆர் நற்றமிழ் பாடி

.. வினை தீரற்கு அருளாயே;

மறி ஆர் கைத்தலனே; முன்

.. மதனாரைச் சுடுவானே;

குறியே; முத்தலைவேலா;

.. குளிர்-வேணிப் பெருமானே.


அறியாமைக்கு இடம் ஆகி - அறியாமை என் உள்ளத்தில் குடிகொள்ள (அதனால்);

லலே உற்று லையாமல் - அல்லலே (துன்பமே) அடைந்து வருந்தாமல்; (அலல் - அல்லல் - இடைக்குறையாக வந்தது);

வெறி ஆர் நற்றமிழ் பாடி வினை தீரற்கு அருளாயே - மணம் கமழும் நல்ல தமிழான தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி உன்னைத் தொழுது என் வினை தீர அருள்வாயாக; (வெறி - வாசனை);

மறிர் கைத்தலனே - கையில் மான்கன்றை ஏந்தியவனே; (மறி - மான்கன்று); (கைத்தலம் - கரதலம்; கை);

முன் மதனாரைச் சுடுவானே - முன்பு மன்மதனைச் சுட்டெரித்தவனே; (மதன் - மன்மதன்);

குறியே - தியானப் பொருளே; யாவராலும் குறிக்கொள்ளப்படும் பொருளே; (சுந்தரர் தேவாரம் - 7.26.4 - "குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன்");

முத்தலைவேலா - திரிசூலத்தை ஏந்தியவனே; (முத்தலைவேல் - மூன்று நுனிகளையுடைய சூலம் - திரிசூலம்);

குளிர்-வேணிப் பெருமானே - குளிர்ந்த கங்கையைச் சடையில் அணிந்த பெருமானே; (வேணி - நதி; சடை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment