Friday, July 3, 2020

03.05.082 – இடைமருதூர் - எல்லை இலதென - (வண்ணம்)

03.05.082 – இடைமருதூர் - எல்லை இலதென - (வண்ணம்)

2009-01-19

3.5.82) எல்லை இலதெ - (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தய்ய தனதன .. தனதான )


எல்லை இலதென .. வருமாசை

.. எய்தி அலைமனம் .. உடையேனும்

ஒல்லை உனதடி .. இணைபாடி

.. உய்தி பெறுநினை .. வுறுவேனோ

வெல்லும் விடைதிகழ் .. கொடியானே

.. வெய்ய கணைதொடு .. சிலையானே

வல்லி யுடனிடை .. மருதூரில்

.. மல்கு வரமருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

எல்லை இலது என வரும் ஆசை

.. எய்தி அலை மனம் உடையேனும்

ஒல்லை உனது அடிஇணை பாடி

.. உய்தி பெறு நினைவு உறுவேனோ;

வெல்லும் விடை திகழ் கொடியானே;

.. வெய்ய கணை தொடு சிலையானே;

வல்லியுடன் இடைமருதூரில்

.. மல்கு வரம் அருள் பெருமானே.


எல்லை இலது என வரும் ஆசை எய்தி அலை மனம் உடையேனும் - அளவற்றதான ஆசைகள் அடைந்து அலைக்கின்ற (/அலைகின்ற) மனத்தை உடைய அடியேனும்; (அலைதல் - திரிதல்; வருந்துதல்); (அலைத்தல் - வருத்துதல்; நிலைகெடுத்தல்);

ஒல்லை உனது அடிஇணை பாடி உய்தி பெறு நினைவு உறுவேனோ - விரைவில் உன் இருதிருவடிகளைப் புகழ்ந்து பாடி உய்யும் எண்ணத்தைப் பெறுவேனோ? அருள்வாயாக; (ஒல்லை - சீக்கிரம்); (உய்தி - உய்வு; ஈடேற்றம்);

வெல்லும் விடை திகழ் கொடியானே - வெற்றியுடைய இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனே;

வெய்ய கணை தொடு சிலையானே - (முப்புரத்தை எரித்த நாளில்) சுடுகின்ற கணையை ஏவிய வில்லை ஏந்தியவனே; (வெய்ய – வெம்மையான); (சிலை - வில்);

வல்லியுடன் இடைமருதூரில் மல்கு வரம் அருள் பெருமானே - கொடி போன்ற உமையுடன் திருவிடைமருதூரில் மிகுந்த வரம் அருளும் பெருமானே; (வல்லி - கொடி - இங்கே ஆகுபெயராகிக் கொடி போன்ற உமாதேவியைக் குறித்தது); (மல்குதல் - மிகுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment