Sunday, July 12, 2020

03.05.095 – பொது - வந்து கேட்பாருக்கு - (வண்ணம்)

03.05.095 – பொது - வந்து கேட்பாருக்கு - (வண்ணம்)

2009-01-24

3.5.95) வந்து கேட்பாருக்கு - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனாத் தானத் .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(வண்டுபோற் சாரத் தருள்தேடி - திருப்புகழ் - திருவெஞ்சமாக்கூடல்)


வந்துகேட் பாருக் .. களியாமல்

.. வம்புவாக் காடித் .. தினமோடி

அந்தனாற் றீயுற் .. றழியாமுன்

.. அன்பினாற் றாளைத் .. தொழுவேனோ

கந்தவீத் தூவிப் .. பணிதேவர்

.. கம்பமாய்த் தேவைத் .. தொடுவீரா

தந்தையாய்த் தாவைக் .. களைவானே

.. சங்கமார்த் தார்கைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

வந்து கேட்பாருக்கு அளியாமல்,

.. வம்பு வாக்காடித் தினம் ஓடி,

அந்தனால் தீ உற்று அழியாமுன்

.. அன்பினால் தாளைத் தொழுவேனோ;

கந்த வீத் தூவிப் பணி தேவர்

.. கம்பம் மாய்த்து ஏவைத் தொடு வீரா;

தந்தையாய்த் தாவைக் களைவானே;

.. சங்கம் ஆர்த்து ஆர் கைப் பெருமானே.


வந்து கேட்பாருக்கு அளியாமல் - தேடி வந்து இரப்பவர்களுக்கு ஒன்றும் கொடாமல்;

வம்பு வாக்காடித் தினம் ஓடி - வீண் பேச்சுப் பேசிப் பயனின்றி வாழ்ந்து காலத்தைக் கழித்து ஆயுளும் தீர்ந்து; (வம்பு - வீண்பேச்சு); (வாக்காடுதல் - பேசுதல்; வாதாடுதல்);

அந்தனால் தீ உற்று அழியாமுன் - எமன் வரவால் தீயை அடைந்து அழிவதன் முன்னமே; (அந்தன் - எமன்); (உறுதல் - அடைதல்);

அன்பினால் தாளைத் தொழுவேனோ - அன்போடு உன் திருவடியை வழிபட அருள்வாயாக;

கந்த வீத் தூவிப் பணி தேவர் கம்பம் மாய்த்து ஏவைத் தொடு வீரா - வாசமலர்களைத் தூவி வணங்கிய தேவர்களது அச்சத்தைத் தீர்த்து, (முப்புரங்களை எரிக்க) ஒரு கணையை எய்த வீரனே; (கந்தம் - வாசனை); (வீ - பூ); (கம்பம் - நடுக்கம்; அச்சம்); (- அம்பு);

தந்தையாய்த் தாவைக் களைவானே - பக்தர்களுக்குத் தந்தை ஆகி அவர்களது துன்பத்தை நீக்குபவனே; (தா / தாவு - வருத்தம்; கேடு; குற்றம்);

சங்கம் ஆர்த்து ஆர் கைப் பெருமானே - வளையல் ஒலித்துப் பொருந்தும் கையை உடைய பெருமானே - வளையல் ஒலித்துப் பொருந்துகின்ற கையை உடைய பெருமானே = கையில் வளையல் அணிந்த உமையொருபங்கன் ஆன பெருமானே; (சங்கம் - வளையல்); (ஆர்த்தல் - பூணுதல்; ஒலித்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

1 comment: