Saturday, July 18, 2020

03.05.098 – கச்சூர் - இரைக்கக் காசுக்கென - (வண்ணம்)

03.05.098 – கச்சூர் - இரைக்கக் காசுக்கென - (வண்ணம்)

2009-01-28

3.5.98) இரைக்கக் காசுக்கென - ச்சூர் - (திருக்கச்சூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத் தானத் .. தனதான )

(கருப்பற் றூறிப் பிறவாதே - திருப்புகழ் - பொது)


இரைக்கக் காசுக் .. கெனவோடி

.. இளைத்துக் காலற் .. கிரையாகிக்

கரைக்கத் தீயிற் .. பொடியாமுன்

.. கழற்பொற் றாளைத் .. துதியேனோ

இரக்கத் தாலப் .. புரமூவர்

.. இருக்கத் தானற் .. பதமீவாய்

திரைத்துப் பாயப் .. பணிவோனே

.. திருக்கச் சூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

இரைக்கக் காசுக்கு என ஓடி,

.. இளைத்துக், காலற்கு இரையாகிக்,

கரைக்கத் தீயில் பொடி ஆ(ம்)முன்,

.. கழற்-பொற்றாளைத் துதியேனோ;

இரக்கத்தால் அப்-புர-மூவர்

.. இருக்கத்தான் நற்பதம் ஈவாய்;

திரைத்துப் பாய் அப்பு அணிவோனே;

.. திருக்கச்சூரில் பெருமானே.


இரைக்கக் காசுக்கு என ஓடி, இளைத்துக் - வாழ்நாள் முழுதும் பணத்துக்காகவே மூச்சிரைக்க ஓடி வருந்தி; (இரைத்தல் - மூச்சுவாங்குதல்); (இளைத்தல் - சோர்தல்; மெலிதல்);

காலற்கு இரையாகிக், கரைக்கத் தீயில் பொடி ஆம் முன், - காலனுக்கு இரையாகி, இவ்வுடல் தீயில் புக்கு நீரில் கரைக்கச் சாம்பல் ஆகும் முன்னே; (காலற்கு - காலன் + கு - காலனுக்கு); (பொடி - சாம்பல்);

கழற்-பொற்றாளைத் துதியேனோ - வீரக்கழல் அணிந்த உன் பொன்னடியை நான் துதித்து உய்ய அருள்வாயாக;

இரக்கத்தால் அப்-புர-மூவர் இருக்கத்தான் நற்பதம் ஈவாய் - உன் கருணையினால் முப்புரங்களை எரித்த அந்நாளில் அங்கிருந்த அசுரர்களுள் சிவபக்தியைக் கைவிடாத "சுதன்மன், சுசீலன், சுபுத்தி" என்ற மூவரை அழியாதபடி காத்து அம்மூவர்க்கும் நன்னிலையை அளித்தவனே; (நற்பதம் - நன்னிலை; நற்கதி); (சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்");

திரைத்துப் பாய் அப்பு அணிவோனே - அலைமோதப் பாயும் கங்கையைச் சடையில் அணிந்தவனே; (திரைத்தல் - அலையெழுதல்); (அப்பு - நீர் - இங்கே கங்கை);

திருக்கச்சூரில் பெருமானே - திருக்கச்சூர் என்ற தலத்தில் உறையும் சிவபெருமானே.



பிற்குறிப்புகள்:

முப்புரம் எரித்தபொழுது மூவர்க்கு அருளியது: -- "தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி" என்னும் தலைவர் உட்படத் திரிபுரத்தில் இருந்தவர் அனைவரும் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடவும், "சுதன்மன், சுசீலன், சுபுத்தி" என்னும் மூவர்மட்டும் முன்போலவே சிவநெறியைக் கைவிடாது பக்திசெய்தனர். முப்புரங்களை எரித்தபொழுது, சிவபெருமான் அவர்களைமட்டும் அழியாது காத்து, அருள்செய்தான்.


1. சுந்தரர் தேவாரம் - 7.55.8 -

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்

.. இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவ லாளர்என் றேவிய பின்னை

.. ஒருவன் நீகரி காடரங் காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ

.. மணிமு ழாமுழக் கவருள் செய்த

தேவ தேவநின் திருவடி யடைந்தேன்

.. செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.


"தேவதேவனே, .... நீ, முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை, .... அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்ததை அறிந்து வந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்".

2. மாதவச் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த "காஞ்சிப் புராணம்" - முப்புராரி கோட்டப் படலம் -

முப்பு ரங்களின் மூவர் புத்தன் மொழித்தி றத்து மயங்கிடாது

அப்ப ணிந்தவர் தாள்ப ணிந்தரு ளாற்றின் நின்றனர் ஆதலால்

பொய்ப்பு ரந்தபு காலை நீற்றறை நாவின் மன்னவர் போல்எரி

தப்பி வாழ்ந்தனர் ஈசன் ஆணையில் நிற்ப வர்க்கிடர் சாருமோ. 2


சுதன்மன் என்று சுசீலன் என்று சுபுத்தி என்று சொலப்படும்

அதன்மம் நீத்தஅம் மூவ ருக்கும் அருள்சு ரந்துமை பாகனார்

இதம்வி ளங்க வரங்கள் வேட்ட விளம்பு மின்னென அங்கவர்

பதம்வ ணங்குபு நின்தி ருப்பணி வாயில் காப்பருள் என்றனர். 3


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment