03.05.084 – ஒற்றியூர் - நரைத்து மற்றவருக்கு - (வண்ணம்)
2009-01-20
3.5.84) நரைத்து மற்றவருக்கு - (ஒற்றியூர் - திருவொற்றியூர்)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனத்த தத்ததனத் .. தனதான )
(நினைத்த தெத்தனையிற் - திருப்புகழ் - திருத்தணிகை)
நரைத்து மற்றவருக் .. கிழிவாகி
.. நடத்தல் அற்றுமரித் .. தழியாமுன்
விரைத்த நற்றமிழைத் .. தரிநாவால்
.. விருப்ப துற்றடியைத் .. துதியேனோ
அரக்க னைக்குருதிப் .. புனலோட
.. அடர்த்த அத்தமழுப் .. படையானே
திரைக்க டற்கரையிற் .. கவினார்காச்
.. செழிக்கும் ஒற்றிநகர்ப் .. பெருமானே.
பதம் பிரித்து:
நரைத்து மற்றவருக்கு இழிவாகி,
.. நடத்தல் அற்று, மரித்து அழியாமுன்,
விரைத்த நற்றமிழைத் தரி-நாவால்
.. விருப்பதுற்று அடியைத் .. துதியேனோ;
அரக்கனைக் குருதிப் புனல் ஓட
.. அடர்த்த அத்த; மழுப் படையானே;
திரைக்கடற்-கரையிற் கவின் ஆர் காச்
.. செழிக்கும் ஒற்றிநகர்ப் பெருமானே.
நரைத்து, மற்றவருக்கு இழிவு ஆகி, நடத்தல் அற்று, மரித்து அழியாமுன் - தலை நரைத்து, பிறருக்கெல்லாம் இழிவு உடையவன் ஆகி, நடப்பதும் இன்றிப் படுத்த படுக்கையாகி, இறந்து அழிவதன் முன்பே; (மரித்தல் - சாதல்);
விரைத்த நற்றமிழைத் தரி-நாவால் விருப்பதுற்று அடியைத் துதியேனோ; - மணம் கமழும் தமிழ்ப்பாமலைகளைத் தாங்கிய நாவால் நான் உன் திருவடியை விரும்பித் துதிக்க அருள்வாயாக; (விரைத்தல் - மணம் கமழ்தல்);
அரக்கனைக் குருதிப் புனல் ஓட அடர்த்த அத்த - கயிலையைப் பெயர்த்த இராவணனை இரத்த ஆறு ஓடும்படி நசுக்கிய அப்பனே; (அடர்த்தல் - நசுக்குதல்); (அத்தன் - தந்தை);
மழுப் படையானே - மழுவை ஏந்தியவனே;
திரைக்கடற் கரையில் கவின் ஆர் கா செழிக்கும் - அலையை உடைய கடலின் கரையில், அழகிய சோலை செழிக்கின்ற;
ஒற்றிநகர்ப் பெருமானே - திருவொற்றியூரில் எழுந்தருளிய பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment