Friday, July 3, 2020

03.05.079 – மயிலாப்பூர் - எப்பாவத்தால் இப்பாரிற் - (வண்ணம்)

03.05.079 – மயிலாப்பூர் - எப்பாவத்தால் இப்பாரிற் - (வண்ணம்)

2009-01-17

03.05.079) எப்பாவத்தால் இப்பாரிற் - (மயிலாப்பூர்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தா தத்தா தத்தா தத்தா

தத்தா தனனத் .. தனதான )

(துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் - திருப்புகழ் - திருத்தணிகை)


எப்பா வத்தா லிப்பா ரிற்போய்

..... எய்ப்பா யெனவைத் .. தனையோநீ

.. எத்தே மிக்கேன் அற்றார் கட்கோர்

..... எட்டான் இடுதற் .. கறியேனான்

இப்பாழ் மெய்க்கூ ணுக்கா கத்தான்

..... இட்டார் பணியைத் .. தின(ம்)மேவி

.. இப்பா டுற்றேன் நற்போ தத்தால்

..... எப்போ தடியைத் .. தொழுவேனோ?

அப்பா லுக்கே அப்பா லிப்பால்

..... அப்பா அரவைப் .. புனைவானே

.. அத்தே ரிற்றாள் இட்டே றப்போய்

..... அச்சே முரியப் .. புரம்வேவ

வைப்பாய் நக்கே மட்டார் நற்றா

..... மத்தாய் அணிபொற் .. சடையானே

.. வைப்பே மற்றார் உற்றார் தப்பா

..... மற்கா மயிலைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

எப்-பாவத்தால் இப்-பாரிற் போய்

..... எய்ப்பாய் என வைத்தனையோ நீ;

.. எத்தே மிக்கேன்; அற்றார்கட்கு ஓர்

..... எள்-தான் இடுதற்கு அறியேன் நான்;

இப்-பாழ் மெய்க்கு ஊணுக்காகத்தான்

..... இட்டார் பணியைத் தினம் மேவி

.. இப் பாடு உற்றேன்; நல் போதத்தால்

..... எப்போது அடியைத் .. தொழுவேனோ?

அப்பாலுக்கே அப்பால், இப்பால்,

..... அப்பா; அரவைப் புனைவானே;

.. அத் தேரில் தாள் இட்டு ஏறப் போய்

..... அச்சே முரியப், .. புரம் வேவ

வைப்பாய் நக்கே; மட்டு ஆர் நல்

..... தாமத்தாய்; அணி பொற் சடையானே;

.. வைப்பே; மற்று ஆர் உற்றார்?

..... தப்பாமல் கா, மயிலைப் பெருமானே.


எப் பாவத்தால் இப் பாரில் போய் எய்ப்பாய் என வைத்தனையோ நீ - (நான்) எத்தகைய பாவத்தைச் செய்தேனோ, இந்தப் பூமியில் பிறந்து வருந்துமாறு நீ விதித்தாய்; (எய்த்தல் - இளைத்தல்; வருந்துதல்);

எத்தே மிக்கேன் - வஞ்சகமே மிக உடையவன் நான்; (எத்து - வஞ்சகம்);

அற்றார்கட்கு ஓர் எள் தான் இடுதற்கு அறியேன் நான் - அற்றவர்களுக்கு எள் அளவும் ஒன்றும் இடமாட்டேன்; (அற்றார் - வறியவர்; அடியவர்); (எள்+தான் - எட்டான்);

இப்-பாழ் மெய்க்கு ஊணுக்காகத்தான் இட்டார் பணியைத் தினம் மேவி இப் பாடு உற்றேன் - அழியும் இந்த இழிந்த உடலை வளர்க்க உணவுக்காகவே, ஏவல் இட்டவர்கள் / பொருள் இட்டவர்கள் பணித்த செயல்களையே தினமும் செய்து இத்துன்பமுற்று வருந்தினேன்; (பாழ்த்தல் - அழிவடைதல்; பயனறுதல்); (பாழ் - இழிவு); (மெய் - உடல்); (ஊண் - உணவு); (மேவுதல் - பொருந்திச் செய்தல்; விரும்புதல்); (பாடு - துன்பம்; வருத்தம்); (அப்பர் தேவாரம் - 5.43.3 - "பிணிகொள் வார்குழற் பேதையர் காதலால் பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்");

நல் போதத்தால் எப்போது அடியைத் தொழுவேனோ - நல்லறிவு பெற்று, எப்பொழுது உன் திருவடியை வணங்குவேனோ? அருள்வாயாக; (போதம் - ஞானம்; அறிவு);

அப்பாலுக்கே அப்பால், இப்பால், ப்பா - இந்தப் பிரபஞ்சத்தைக் கடந்தவனாகவும், இதன் உள்ளே இருப்பவனாகவும் உள்ள அப்பனே; (திருவாசகம் - திருவம்மானை - 8.8.11 - "செப்பார் முலைபங்கன் அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்");

அரவைப் புனைவானே - பாம்பை அணிந்தவனே;

அத் தேரில் தாள் இட்டு ஏறப் போய் அச்சே முரியப் - (தேவர்கள் செய்த) அந்தத் தேரில் திருவடி இட்டு ஏறவும் அதன் அச்சு முரியக் கண்டு; (முரிதல் - ஒடிதல்);

புரம் வேவ வைப்பாய் நக்கே - (அப்பொழுது), சிரித்தே முப்புரங்களையும் எரியச்செய்தவனே; (நகுதல் - சிரித்தல்);

மட்டு ஆர் நல் தாமத்தாய் - வாசமலர் மிகுந்த மாலை அணிபவனே; (மட்டு - தேன்/வாசனை); (ஆர்தல் - நிறைதல்); (தாமம் - பூமாலை);

அணி பொற் சடையானே - அழகிய பொற்சடை உடையவனே; (அணி - அழகிய);

வைப்பே - சேமநிதியே; (வைப்பு - சேமநிதி);

மற்று ஆர் உற்றார் - உன்னைத் தவிர வேறு யார் எனக்கு உற்றவர்கள்? (மற்று - வேறு);

தப்பாமல் கா, மயிலைப் பெருமானே - மயிலாப்பூரில் உறையும் சிவபெருமானே, கைவிடாமல் என்னைக் காப்பாயாக; (தப்புதல் - செய்யத் தவறுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

2 comments: