Friday, July 3, 2020

03.05.078 – மயிலாப்பூர் - கடலில் எழுகிற அலையின் - (வண்ணம்)

03.05.078 – மயிலாப்பூர் - கடலில் எழுகிற அலையின் - (வண்ணம்)

2009-01-16

03.05.078) கடலில் எழுகிற அலையின் - (மயிலாப்பூர்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தனதன தனன தனதன

தனன தனதன .. தனதான )

(குமர குருபர முருக சரவண - திருப்புகழ் - திருவேரகம்)


கடலில் எழுகிற அலையின் நிலையன

..... கடையும் இலதென .. மிகுகோடி

.. கருவில் அடைகிற கொடிய வினைபுரி

..... கயமை மிகுகிற .. அடியேனின்

மடமை அறவுனை மிகவு(ம்) நினைகிற

..... மதியை உடையவர் .. குழுவோடு

.. மறைகள் அறைகிற உனது திருவடி

..... மலரை வழிபட .. அருளாயே

அடைவ தமுதென அரவு கயிறென

..... அசுரர் சுரரொடு .. கடைநாளில்

.. அவரை எரிவிடம் எழவும் அடிதொழ

..... அதனை உணுமணி .. மிடறானே

இடது புறமயில் அனைய மலைமகள்

..... இணையும் எழிலுரு .. உடையானே

.. இரையும் அலையயல் மயிலை நகரினில்

..... இனிமை தரவுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

கடலில் எழுகிற அலையின் நிலை அன,

..... கடையும் இலது என, .. மிகு-கோடி

.. கருவில் அடைகிற கொடிய வினை புரி

..... கயமை மிகுகிற .. அடியேனின்

மடமை அற, உனை மிகவும் நினைகிற

..... மதியை உடையவர் .. குழுவோடு,

.. மறைகள் அறைகிற உனது திருவடி

..... மலரை வழிபட .. அருளாயே;

அடைவது அமுது என, அரவு கயிறு என

..... அசுரர் சுரரொடு .. கடை நாளில்,

.. அவரை எரி விடம் எழவும், அடி தொழ,

..... அதனை உணு(ம்) மணி .. மிடறானே;

இடது புறம் மயில் அனைய மலைமகள்

..... இணையும் எழில் உரு .. உடையானே;

.. இரையும் அலை அயல் மயிலை நகரினில்

..... இனிமை தர உறை .. பெருமானே.


கடலில் எழுகிற அலையின் நிலை அன, கடையும் இலது என - கடலில் எழுகிற அலையின் தன்மையைப் போன்ற, முடிவு இல்லாதது என்று; (அன - அன்ன – போன்ற); (கடை - முடிவு - end);

மிகு-கோடி கருவில் அடைகிற கொடிய வினை புரி - எண்ணற்ற பிறவிகள் அடையும்படி கொடிய வினைகளைச் செய்கிற; (கரு - கருப்பை; பிறப்பு);

மை மிகுகிற அடியேனின் மடமை அற - கீழ்மை மிகுகிற எனது அறியாமை அழிய; (கயமை - கீழ்மை); (மடமை - பேதைமை);

உனை மிகவும் நினைகிற மதியை உடையவர் குழுவோடு - உன்னை மிகவும் சிந்திக்கிற அறிவு உடைய அடியவர்கள் குழாத்தோடு சேர்ந்து;

மறைகள் அறைகிற உனது திருவடி மலரை வழிபட அருளாயே - வேதங்கள் சொல்கிற உன்னுடைய திருவடித் தாமரையை வணங்க எனக்கு அருள்வாயாக; (அறைதல் - சொல்லுதல்);

அடைவது அமுது என, அரவு கயிறு என அசுரர் சுரரொடு கடை நாளில் - அமிர்தத்தைப் பெறவேண்டி, ஒரு பாம்பைக் கயிறாகக் கொண்டு, தேவர்களும் அசுரர்களும் (பாற்கடலைக்) கடைந்த சமயத்தில்; (கடை நாளில் - கடைந்த சமயத்தில்);

அவரை எரி விடம் எழவும், அடி தொழ, தனை உணு(ம்) மணி மிடறானே; - அவர்களை எரிக்கும் கொடிய விஷம் தோன்றவும், அவர்கள் உன் திருவடியைத் தொழுது அழுது வேண்ட, (அவர்களுக்கு இரங்கி) அந்த விடத்தை உண்ட நீலமணிகண்டனே; (ஊணும் - உண்ணும் - இடைக்குறை விகாரம்); (மிடறு - கண்டம்);

இடது புறம் மயில் அனைய மலைமகள் இணையும் எழில் உரு உடையானே - இடது பக்கத்தில் மயில் போன்ற சாயலுடைய பார்வதி சேர்ந்திருக்கும் அழகிய திருமேனி உடையவனே; (அனைய – போன்ற); (மலைமகள் - பார்வதி);

இரையும் அலை அயல் மயிலை நகரினில் இனிமை தர உறை பெருமானே - இரைகின்ற கடலின் அருகே உள்ள மயிலாப்பூரில் (பக்தர்களுக்கு) இன்பம் அருள உறைகின்ற பெருமானே; (இரைதல் - பெரிது ஒலித்தல்); (அலை - கடல்); (அயல் - அருகு; சமீபம்; பக்கம்); (மயிலை - மயிலாப்பூர்); (இனிமை - இன்பம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment