03.05.091 – கடவூர் - கொடுமாயப் பிணிமாய - (வண்ணம்)
2009-01-23
3.5.91) கொடுமாயப் பிணிமாய - கடவூர் - (திருக்கடவூர்)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதானத் .. தனதான )
(இறவாமற் பிறவாமல் - திருப்புகழ் - அவிநாசி)
கொடுமாயப் .. பிணிமாயக்
.. குளிரார்நற் .. றமிழ்தாளில்
இடுநேயத் .. தொடுநாளும்
.. இனிதாகத் .. தொழுவேனோ
எடுபாசத் .. தொடுநாடும்
.. எமன்மாளச் .. செறுகாலா
கடுநாகச் .. சடையானே
.. கடவூரிற் .. பெருமானே.
பதம் பிரித்து:
கொடு மாயப் பிணி மாயக்
.. குளிர் ஆர் நற்றமிழ் தாளில்
இடு நேயத்தொடு நாளும்
.. இனிதாகத் தொழுவேனோ;
எடு-பாசத்தொடு நாடும்
.. எமன் மாளச் செறு காலா;
கடு-நாகச் சடையானே;
.. கடவூரிற் பெருமானே.
கொடுமாயப் பிணி மாயக் - கொடிய மாயையாகிய பிணி அழியும்படி; (மாயம் - மாயை; அஞ்ஞானம்);
குளிர் ஆர் நற்றமிழ் தாளில் இடு நேயத்தொடு - குளிர்ந்த நல்ல தமிழ்ப்பாமாலைகளைத் திருவடியில் இடும் அன்போடு; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (நற்றமிழ் - தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப் பாமாலைகள்);
நாளும் இனிதாகத் தொழுவேனோ - தினமும் இனிது தொழுமாறு அருள்வாயாக;
எடு பாசத்தொடு நாடும் எமன் மாளச் செறு காலா - (மார்க்கண்டேயரது உயிரை எடுக்கக் கையில்) எடுத்த பாசத்தோடு அடைந்த காலனே இறக்கும்படி உதைத்து அழித்த காலகாலனே; (செறுதல் - அழித்தல்);
கடுநாகச் சடையானே - கொடிய பாம்பைச் சடையில் அணிந்தவனே; (கடுமை - கொடுமை; மூர்க்கம்; சினம்); (சுந்தரர் தேவாரம் - 7.2.2 – "மூக்கப்பாம்பைக் கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர்");
கடவூரில் பெருமானே - திருக்கடவூரில் உறைகின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment