03.05.073 – கடவூர் - கொடிய வினை மிக - (வண்ணம்)
2009-01-14
3.5.73) கொடிய வினை மிக - கடவூர் - (திருக்கடவூர்)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தனன தந்தத் .. தனதான )
(இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி - திருப்புகழ் - திருச்செந்தூர்)
கொடியவினை மிகம யங்கிக் .. குயில்போலும்
.. குரலியர்கள் தமைவி ரும்பிப் .. புவிமீது
மிடியிலுழல் எனது துன்பத் .. தொடர்மாய
.. விடையமரும் உனைவ ணங்கித் .. தொழுவேனோ
அடிதொழுத சிறுவன் அஞ்சப் .. பகடேறி
.. அருகடையு(ம்) நமனை அங்குச் .. செறுகாலா
முடியின்மிசை மதியி லங்கக் .. கடவூரில்
.. முனிவர்தொழ உறைபு யங்கப் .. பெருமானே.
பதம் பிரித்து:
கொடிய வினை மிக, மயங்கிக் குயில்போலும்
.. குரலியர்கள்தமை விரும்பிப் புவிமீது
மிடியில் உழல் எனது துன்பத்தொடர் மாய,
.. விடை அமரும் உனை வணங்கித் தொழுவேனோ;
அடி தொழுத சிறுவன் அஞ்சப் பகடு ஏறி
.. அருகு அடையும் நமனை அங்குச் செறு காலா;
முடியின்மிசை மதி இலங்கக், கடவூரில்
.. முனிவர் தொழ உறை புயங்கப் பெருமானே.
கொடிய வினை மிக - தீவினை மிகும்படி / தீவினை மிகுந்ததனால்;
மிக மயங்கிக் குயில்போலும் குரலியர்கள்தமை விரும்பிப் - மிகவும் மதி மயங்கிக், குயில்போல் இனியமொழி பேசும் பெண்கள்மேல் ஆசையுற்று; ("மிக" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);
புவிமீது மிடியில் உழல் எனது துன்பத்தொடர் மாய - இவ்வுலகில் வாடும் என் துன்பத்தொடர் அழியுமாறு; (மிடி - வறுமை; துன்பம்);
விடை அமரும் உனை வணங்கித் தொழுவேனோ - இடபவாகனனான உன்னை வணங்கிக் கைகூப்பி வழிபடுமாறு அருள்வாயாக; (அமர்தல் - விரும்புதல்); (சுந்தரர் தேவாரம் - 7.9.5 - "வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்")
அடி தொழுத சிறுவன் அஞ்சப் பகடு ஏறி அருகு அடையும் நமனை அங்குச் செறு காலா - உன் திருவடியைத் தொழுத மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரைக் கொல்ல எண்ணி எருமைக்கடாவின்மேல் ஏறி அவரை நெருங்கிய கூற்றுவனை அப்பொழுது உதைத்து அழித்த காலகாலனே; (பகடு - எருமைக்கடா); (செறுதல் - அழித்தல்);
முடியின்மிசை மதி இலங்கக் - திருமுடிமேல் பிறைச்சந்திரன் ஒளிவீச அணிந்து; (இலங்குதல் - விளங்குதல்);
கடவூரில் முனிவர் தொழ உறை புயங்கப் பெருமானே - முனிவர்கள் தொழுது போற்றத் திருக்கடவூரில் உறைகின்ற புயங்கப் பெருமானே; (புயங்கம் - புஜங்கம் - பாம்பு); (திருவாசகம் - யாத்திரைப் பத்து - 8.45.1 - "பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான்" - பாம்பணிந்த எங்கள் பெருமான்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment