03.05.071 – பொது - வாழத் தெரியாமல் - (வண்ணம்)
2009-01-13
3.5.71) வாழத் தெரியாமல் - (பொது)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தானத் .. தனதான )
(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)
வாழத் .. தெரியாமல்
.. வாடித் .. தவியாதே
வேழத் .. துரியானை
.. மேவித் .. தொழுநீயே
ஆழக் .. கடல்நாவாய்
.. ஆகித் .. துணையாவான்
வீழப் .. பதுசூடும்
.. வேணிப் .. பெருமானே.
பதம் பிரித்து:
வாழத் தெரியாமல்
.. வாடித் தவியாதே;
வேழத்து உரியானை
.. மேவித் தொழு நீயே;
ஆழக் கடல் நாவாய்
.. ஆகித் துணை ஆவான்;
வீழ் அப்பு அது சூடும்
.. வேணிப் பெருமானே.
* மனமே என்ற விளி தொக்கு நின்றது;
வாழத் தெரியாமல் வாடித் தவியாதே - மனமே! நன்னெறியில் வாழ அறியாமல் வாடி வருந்தாதே; ("மனமே" என்ற விளியை வருவித்துப் பொருள்கொள்க);
வேழத்து உரியானை மேவித் தொழு நீயே - யானைத்தோலைப் போர்த்த சிவபெருமானை நீ விரும்பித் தொழுவாயாக; (வேழம் - யானை); (உரி - தோல்); (மேவுதல் - அடைதல்; விரும்புதல்);
ஆழக் கடல் நாவாய் ஆகித் துணை ஆவான் - ஆழம் மிக்க வினைக்கடலில் ( / பிறவிக்கடலில்) படகாகி அவன் நம்மைக் காப்பான்; (நாவாய் - படகு; கப்பல்);
வீழ் அப்பு அது சூடும் வேணிப் பெருமானே - வானிலிருந்து விழுந்த கங்கையைச் சடையில் அணிந்த பெருமான்; (அப்பு - நீர்); (வேணி - சடை);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment