03.05.068 – ஏடகம் (திருவேடகம்) - கைப்பதே நாடியிப் - (வண்ணம்)
2009-01-12
3.5.68) கைப்பதே நாடியிப் - ஏடகம் (திருவேடகம்)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தனா தானனத் .. தனதான )
(பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)
கைப்பதே நாடியிப் .. புவிமீது
.. கட்டமே நாளுமுற் .. றழியாமல்
எய்ப்பிலா வாழ்வினைப் .. பெறுமாறே
.. இட்டமாய் யானுனைப் .. பணிவேனே
துப்பனே ஓர்பவர்க் .. கணியானே
.. சொக்கனே மாலயற் .. கரியானே
அப்பனே ஆரணப் .. பொருளானே
.. அக்கரா ஏடகப் .. பெருமானே.
பதம் பிரித்து:
கைப்பதே நாடி, இப் புவிமீது
.. கட்டமே நாளும் உற்று அழியாமல்,
எய்ப்பு இலா வாழ்வினைப் பெறுமாறே,
.. இட்டமாய் யான் உனைப் பணிவேனே;
துப்பனே; ஓர்பவர்க்கு அணியானே;
.. சொக்கனே; மால் அயற்கு அரியானே;
அப்பனே; ஆரணப் பொருளானே;
.. அக்கரா; ஏடகப் பெருமானே.
கைப்பதே நாடி இப் புவிமீது கட்டமே நாளும் உற்று அழியாமல் - இவ்வுலக வாழ்வில் கசக்கும் விஷயங்களையே (இனியவை என்று எண்ணி) விரும்பி அதனால் எந்நாளும் துன்பமே அடைந்து வருந்தாமல்; (கைத்தல் - கசத்தல்); (கட்டம் - கஷ்டம்); (அழிதல் - நாசமாதல்; வருந்துதல்);
எய்ப்பு இலா வாழ்வினைப் பெறுமாறே - இளைத்தல் இல்லாத இன்ப வாழ்வைப் பெறும்படி; (எய்ப்பு - சோர்தல்; இளைத்தல்);
இட்டமாய் யான் உனைப் பணிவேனே - விருப்பத்தோடு நான் உன்னைத் தொழுவேன்; (இட்டம் - இஷ்டம்);
துப்பனே - பற்றுக்கோடாக இருப்பவனே; பவளம் போன்ற செம்மேனியனே; (துப்பு - பவளம்; சிவப்பு; தூய்மை; பற்றுக்கோடு; துணை); (திருவாசகம் - அருட்பத்து - 8.29.6 - "துப்பனே தூயாய்");
ஓர்பவர்க்கு அணியானே - (உன்னைச்) சிந்திப்பவர்களுக்கு அண்மையில் (பக்கத்தில்) இருப்பவனே; (ஓர்தல் - எண்ணுதல்; தியானித்தல்); (அணியன் - அண்மையில் (அருகில்) உள்ளவன்);
சொக்கனே - அழகனே;
மால் அயற்கு அரியானே - (அடிமுடி தேடியபொழுது) திருமாலுக்கும் பிரமனுக்கும் அடைய இயலாதவனாக இருப்பவனே;
அப்பனே - தந்தையே;
ஆரணப் பொருளானே - வேதப்பொருளாக இருப்பவனே; (ஆரணம் - வேதம்);
அக்கரா - அழிவின்றி இருப்பவனே; (அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்);
ஏடகப் பெருமானே - திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment