Saturday, June 27, 2020

03.05.066 – ஏடகம் (திருவேடகம்) - மேலான நூலுரைத்த - (வண்ணம்)

03.05.066 – ஏடகம் (திருவேடகம்) - மேலான நூலுரைத்த - (வண்ணம்)

2009-01-11

3.5.66) மேலான நூலுரைத்த - ஏடகம் (திருவேடகம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானான தான தத்த .. தானான தான தத்த

தானான தான தத்த .. தனதான )

(நாவேறு பாம ணத்த - திருப்புகழ் - திருவேரகம்)


மேலான நூலு ரைத்த .. சீரான பாதை விட்டு

.... மேனாளி லேயி ழைத்த .. வினையாலே

.. வீணாக நானி லத்தில் .. ஆறாத ஆசை யுற்று

.... வீடாத நோவு பெற்று .. மிகவாடிக்

கோலான தேபி டிக்கு(ம்) .. மூதாகி ஆவி அற்ற

.... கூடாகி ஏகு தற்கு .. முனமேயெம்

.. கோவேகு ராவெ ருக்கு .. வானாறு சூடு சத்தி

.... கூறாவெ னாவ ழுத்து .. மனமீயாய்

மாலாகி வாது புக்க .. தீயோர்கள் நாண அற்றை

.... வாடாத மாலை உற்ற .. திருவேடு

.. மாவேக ஆறெ திர்த்து .. மேலோடி நீரில் நிற்கு(ம்)

.... மாணேறும் ஏட கத்தில் .. உறைவோனே

பாலான வாரி கக்கும் ஆலாலம் ஓரி னித்த

.... பாகாக வேம டுத்த .. மிடறானே

.. பாய்கால னாரி ரத்தம் ஆறாக ஓட வைத்த

.... பாதாஅ ராவ சைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மேல் ஆன நூல் உரைத்த சீரான பாதை விட்டு,

.... மேனாளிலே இழைத்த வினையாலே,

.. வீணாக நானிலத்தில் ஆறாத ஆசை உற்று,

.... வீடாத நோவு பெற்று மிக வாடிக்,

கோல் ஆனதே பிடிக்கும் மூது ஆகி, ஆவி அற்ற

.... கூடு ஆகி, ஏகுதற்கு முனமே, "எம்

.. கோவே; குரா எருக்கு .. வானாறு சூடு சத்தி

.... கூறா" எனா வழுத்து .. மனம் ஈயாய்;

மாலாகி வாது புக்க .. தீயோர்கள் நாண அற்றை

.... வாடாத மாலை உற்ற .. திரு-ஏடு

.. மா-வேக ஆறு எதிர்த்து .. மேல்-ஓடி நீரில் நிற்கு(ம்)

.... மாண் ஏறும் ஏடகத்தில் .. உறைவோனே;

பாலான வாரி கக்கும் ஆலாலம் ஓர் இனித்த

.... பாகாகவே மடுத்த .. மிடறானே;

.. பாய்-காலனார் இரத்தம் ஆறாக ஓட வைத்த

.... பாதா; அரா அசைத்த .. பெருமானே.


மேல் ஆன நூல் உரைத்த சீரான பாதை விட்டு, - சிறந்த நூல்களில் சொல்லப்படும் நல்ல வழியில் செல்லாமல்; (மேல் - மேன்மை); (சீர் - நன்மை; சிறப்பு);

மேனாளிலே இழைத்த வினையாலே - முன்பு செய்த தீவினையின் பயனால்; (மேனாள் - மேல் நாள் - முன்னாள்; முற்காலம்);

வீணாக நானிலத்தில் ஆறாத ஆசை உற்று - இப்பூமியில் பயனின்றித் தணியாத ஆசை மனத்தில் கொண்டு; (நானிலம் - பூமி); (ஆறுதல் - தணிதல்; அடங்குதல்);

வீடாத நோவு பெற்று மிக வாடி - என்றும் ஒழியாத துன்பம் பெற்று, மிகவும் சோர்ந்து; (வீடுதல் - விடுதல்; ஒழிதல்);

கோல் ஆனதே பிடிக்கும் மூது ஆகி - கைக்கோல் ஊன்றும் கிழட்டுப்பருவம் அடைந்து; (மூது - முதுமை);

ஆவி அற்ற கூடு ஆகி ஏகுதற்கு முனமே - உயிரற்ற உடல் ஆகிச், செல்வதற்கு முன்பே; (கூடு - உடம்பு); (ஏகுதல் - போதல்);

"எம் கோவே - "எம் அரசே;

குரா ருக்கு வானாறு சூடு சத்தி கூறா" - குராமலர், எருக்கமலர், கங்கை இவற்றையெல்லாம் சூடிய, உமைபங்கனே; (வானாறு - கங்கை); (சத்தி - சக்தி; உமை); (திருஈங்கோய்மலை எழுபது - 11.10.65 - "ஈங்கோயே செஞ்சடைமேல் வானாறு வைத்தான் மலை");

னா வழுத்து மனம் ஈயாய் - என்று துதிக்கும் மனத்தை எனக்கு அருள்வாயாக; (எனா - என்னா - என்று; - செய்து என்ற பொருளில் வரும் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்);

மாலாகி வாது புக்க தீயோர்கள் நாண – அறியாமையாலும் ஆணவத்தாலும் (சம்பந்தரோடு) வாது செய்த தீய சமணர்கள் நாணும்படி; (மால் - மயக்கம்); (புக்க - புகுந்த; புகுதல் - செய்யப்புகுதல்; தொடங்குதல்);

அற்றை வாடாத மாலை உற்ற திரு-டு மா-வேக ஆறு எதிர்த்து மேல்-டி நீரில் நிற்கும் - அன்று வாடாத தமிழ்ப்பாமாலை எழுதப்பெற்ற தேவார ஏடு மிகுந்த வேகமுடைய வைகையாற்றை எதிர்த்து மேலேறிச் சென்று நீரில் நின்ற; (அற்றை - அன்று; அத்தினத்தில்)

மாண் ஏறும் ஏடகத்தில் றைவோனே - மாட்சிமை மிகுந்த திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; (மாண் - மாட்சிமை); (ஏறுதல் - உயர்தல்; மிகுதல்);

பாலான வாரி கக்கும் லாலம் ஓர் இனித்த பாகாகவே மடுத்த மிடறானே - பாற்கடல் கக்கிய ஆலகால விஷத்தை இனிக்கும் வெல்லப்பாகு போல உண்டருளிய நீலகண்டனே; (வாரி - கடல்); (பாகு - வெல்லப்பாகு); (மடுத்தல் - உண்ணுதல்); (மிடறு - கழுத்து);

பாய்-காலனார் இரத்தம் ஆறாக ஓட வைத்த பாதா - (மார்க்கண்டேயர்மேல்) பாய்ந்த காலனது இரத்தம் ஆறாக ஒடுமாறு செய்த ( = காலனை மார்பில் உதைத்த) திருப்பாதனே;

அரா சைத்த பெருமானே - பாம்பை அரைநாணாகக் கட்டிய பெருமானே; (அரா - பாம்பு); (அசைத்தல் - கட்டுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment