03.05.067 – பொது - மணம் ஏறுகின்ற தமிழ் - (வண்ணம்)
2009-01-12
3.5.67) மணம் ஏறுகின்ற தமிழ் - (பொது)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதான தந்த .. தனதான )
(தனனா தனந்த .. தனதான - என்றும் கருதலாமோ)
(வரியார் கருங்கண் மடமாதர் - திருப்புகழ் - திருச்செந்தூர்)
மணமேறு கின்ற .. தமிழ்பாடி
.. மணிநீல கண்டம் .. நினைவேனோ
குணசீலர் உண்ப .. தரிதாகிக்
.. குடமாடும் உன்றன் .. முடிவீழ
உணர்வேதும் இன்றி .. நிலம்வீழ
.. உலவாத அன்பர் .. பசிதீரும்
வணநாளும் அன்று .. படியீவாய்
.. மதிசூடு கின்ற .. பெருமானே.
பதம் பிரித்து:
மணம் ஏறுகின்ற தமிழ் பாடி
.. மணிநீல கண்டம் நினைவேனோ;
குணசீலர் உண்பது அரிது ஆகிக்,
.. குடம் ஆடும் உன்றன் முடி வீழ,
உணர்வு ஏதும் இன்றி நிலம் வீழ,
.. உலவாத அன்பர் பசி தீரும்
வணம் நாளும் அன்று படி ஈவாய்;
.. மதி சூடுகின்ற பெருமானே.
* புகழ்த்துணை நாயனார் வரலாற்றைச் சுட்டியது;
மணம் ஏறுகின்ற தமிழ் பாடி - மணம் மிக்க தமிழ்ப் பாமாலைகளைப் பாடி;
மணிநீல கண்டம் நினைவேனோ - நீலமணி திகழும் கண்டத்தை நினைக்க அருள்வாயாக;
குணசீலர் உண்பது அரிது ஆகிக் - நற்குணம் மிக்க புகழ்த்துணை நாயனார் (பஞ்சகாலத்தினால்) உணவு இன்மையால் உண்ணாதவராகி;
குடம் ஆடும் உன்றன் முடி வீழ - (உன்னை வழிபடும்போது உடல் தளர்ந்து) நீர்க்குடம் அபிஷேகம் செய்யப்பெறும் கூத்தனான உன் திருமுடிமேல் விழ; (ஆடுதல் - நீராடுதல்; கூத்தாடுதல்);
உணர்வு ஏதும் இன்றி நிலம் வீழ - அவர் உணர்வழிந்து மயங்கிக் கீழே விழ;
உலவாத அன்பர் பசி தீரும் வணம் நாளும் அன்று படி ஈவாய் - அவருக்கு இரங்கி, அழியாத அன்பை உடைய அவரது பசி தீரும்படி அந்தப் பஞ்சகாலத்தில் தினந்தோறும் அவருக்குப் படிக்காசு தந்தவனே; (உலத்தல் - குறைதல்; அழிதல்); (படி - படிக்காசு);
மதி சூடுகின்ற பெருமானே - பிறைச்சந்திரனைச் சூடிய பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment