Friday, July 24, 2020

03.05.106 – ஆனைக்கா - நாளைத் தேவைக்கு என - (வண்ணம்)

03.05.106 – ஆனைக்கா - நாளைத் தேவைக்கு என - (வண்ணம்)

2009-02-13

3.5.106) நாளைத் தேவைக்கு எ - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


நாளைத் தேவைக் .. கெனமாடே

.. நாடித் தீனர்க் .. களியாது

நாளைப் பாழுக் .. கிறையாமல்

.. நாவிற் பேரைத் .. தரியேனோ

தாளைப் பேணித் .. தொழுவார்பால்

.. தாயிற் சாலப் .. பரிவாகி

ஆளப் பாரைத் .. தருவோனே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

நாளைத் தேவைக்கு என மாடே

.. நாடித், தீனர்க்கு அளியாது,

நாளைப் பாழுக்கு இறையாமல்

.. நாவில் பேரைத் தரியேனோ;

தாளைப் பேணித் தொழுவார்பால்

.. தாயிற் சாலப் பரிவாகி

ஆளப் பாரைத் தருவோனே;

.. ஆனைக்காவில் பெருமானே.


நாளைத் தேவைக்கு எ மாடே நாடித் - பிற்காலத்திற்கு வேண்டும் என்று எப்பொழுதும் பொருள் திரட்டுவதிலேயே ஈடுபட்டு; (நாளை - அடுத்த தினம்); (மாடு - செல்வம்); (நாடுதல் - விரும்புதல்);

தீனர்க்கு அளியாது - வறியவர்களுக்கு ஒன்றும் கொடாமல்; (தீனர் - வறியவர்; யாசிப்பவர்);

நாளைப் பாழுக்கு இறையாமல் - ஆயுளை வீணாக்காமல்; (நாள் - வாழ்நாள்); (பாழுக்கிறைத்தல் - [பாழ் நிலத்துக்குத் தண்ணீரிறைத்தல்] வீணாகக் காரியஞ்செய்தல்);

நாவில் பேரைத் தரியேனோ - என் நாவில் உன் திருப்பெயரைத் தரித்து வாழ அருள்வாயாக;

தாளைப் பேணித் தொழுவார்பால் தாயிற் சாலப் பரிவாகி ஆளப் பாரைத் தருவோனே - உன் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்கள்மேல் தாயினும் மிகுந்த அன்புடையவன் ஆகி, அவர்களுக்கு நல்வாழ்வை அருள்பவனே; (பேணுதல் - போற்றுதல்); (சால - மிகவும்); (பரிவு - அன்பு); (பார் - உலகம்);

ஆனைக்காவில் பெருமானே - திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


03.05.105 – ஆனைக்கா - ஓடிப் பாரிற் பலநாளும் - (வண்ணம்)

03.05.105 – ஆனைக்கா - ஓடிப் பாரிற் பலநாளும் - (வண்ணம்)

2009-02-13

3.5.105) ஓடிப் பாரிற் பலநாளும் - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


ஓடிப் பாரிற் .. பலநாளும்

.. ஊனைப் பேணிப் .. பிணிமூடி

வாடிப் பாயிற் .. கிடவாமுன்

.. வாசத் தாளைத் .. தொழுவேனோ

பாடிச் சேவித் .. தடைவாரைப்

.. பாலித் தாரத் .. தருவோனே

ஆடக் கானைப் .. புரிவோனே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஓடிப் பாரில் பல நாளும்,

.. ஊனைப் பேணிப், பிணி மூடி,

வாடிப் பாயிற் கிடவாமுன்

.. வாசத் தாளைத் தொழுவேனோ;

பாடிச் சேவித்து அடைவாரைப்

.. பாலித்து ஆரத் தருவோனே;

ஆடக் கானைப் புரிவோனே;

.. ஆனைக் காவில் பெருமானே.


ஓடிப் பாரில் பல நாளும் ஊனைப் பேணிப் - உலகில் நெடுநாள்கள் (அங்கும் இங்கும்) அலைந்து திரிந்து, உடலை ஓம்புதலிலேயே காலத்தைச் செலவழித்து; (ஊன் - உடம்பு);

பிணி மூடி, வாடிப், பாயிற் கிடவாமுன் வாசத் தாளைத் தொழுவேனோ - நோய்கள் சூழ்ந்துகொள்ள, அதனால் வருந்திப், படுத்த படுக்கையாகக் கிடப்பதன்முன்னமே, மணம் கமழும் உன் திருவடியை வணங்கும் பாக்கியம் பெறுவேனோ? அருள்வாயாக; (வாசம் - மணம்);

பாடிச் சேவித்து அடைவாரைப் பாலித்து ஆரத் தருவோனே - உன்னைப் பாடி வணங்கிச் சரண்புகுந்த பக்தர்களைக் காத்து அருளையும் வரங்களையும் நிறையக் கொடுப்பவனே; (அடைதல் - சரண்புகுதல்); (பாலித்தல் - காத்தல்); (ஆர்தல் - நிறைதல்; மிகுதல்);

ஆடக் கானைப் புரிவோனே - திருநடம் செய்வதற்குச் சுடுகாட்டை விரும்புகின்றவனே; (கான் - சுடுகாடு); (புரிதல் - விரும்புதல்);

ஆனைக் காவில் பெருமானே - திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------



Wednesday, July 22, 2020

03.05.104 – பராய்த்துறை - அங்கலாய்ப்பு இடர் துன்னி - (வண்ணம்)

03.05.104 – பராய்த்துறை - அங்கலாய்ப்பு இடர் துன்னி - (வண்ணம்)

2009-02-01

3.5.104) அங்கலாய்ப்பு இடர் துன்னி - (பராய்த்துறை - திருப்பராய்த்துறை)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்த தாத்தன தன்ன தனந்தன

தத்தத் தத்தத் .. தனதான )

(வம்ப றாச்சில - திருப்புகழ் - காஞ்சிபுரம்)


அங்க லாய்ப்பிடர் துன்னி நலிந்திட

.. .. அத்தத் திற்குப் .. பலநாளும்

.. அன்ப னாய்ப்புவி தன்னில் அலைந்திடும்

.. .. அப்பித் தத்திற் .. சுழல்மூடம்

மங்கி வார்த்தைகள் மின்னி விளங்கிட

.. .. மட்டுச் சொட்டத் .. தமிழ்பாடி

.. வந்து காத்திடும் உன்னை மனந்தனில்

.. .. வைத்துத் தப்பிப் .. பிழையேனோ

பங்க னாய்த்திகழ் தென்ன அயன்றலை

.. .. பற்றிப் பிச்சைக் .. குழல்வோனே

.. பண்பி னாற்பொலி செம்மை பொருந்திய

.. .. பத்தர்க் குப்பற் .. றதுவானாய்

தெங்கு நாற்புற(ம்) மன்ன நலங்கிளர்

.. .. செய்க்குச் சுத்தப் .. புனலோடும்

.. தென்ப ராய்த்துறை தன்னை விரும்பிய

.. .. செக்கர்ச் சிட்டப் .. பெருமானே.


பதம் பிரித்து:

அங்கலாய்ப்பு இடர் துன்னி நலிந்திட,

.. .. அத்தத்திற்குப் பல நாளும்

.. அன்பனாய்ப், புவி-தன்னில் அலைந்திடும்

.. .. அப்-பித்தத்திற் சுழல்-மூடம்

மங்கி, வார்த்தைகள் மின்னி விளங்கிட

.. .. மட்டுச் சொட்டத் தமிழ் பாடி,

.. வந்து காத்திடும் உன்னை மனந்தனில்

.. .. வைத்துத் தப்பிப் பிழையேனோ;

பங்கனாய்த் திகழ் தென்ன; அயன்-தலை

.. .. பற்றிப் பிச்சைக்கு உழல்வோனே;

.. பண்பினாற் பொலி செம்மை பொருந்திய

.. .. பத்தர்க்குப் பற்றதுவானாய்;

தெங்கு நாற்புற(ம்) மன்ன, நலங்-கிளர்

.. .. செய்க்குச் சுத்தப் புனல் ஓடும்,

.. தென்-பராய்த்துறை தன்னை விரும்பிய

.. .. செக்கர்ச் சிட்டப் பெருமானே.


அங்கலாய்ப்பு இடர் துன்னி நலிந்திட, அத்தத்திற்குப் பல நாளும் அன்பனாய்ப் - துக்கமும் இடரும் சூழ்ந்து வருத்தும்படி, பொருள்மீது நெடுங்காலம் ஆராத காதல் உடையவன் ஆகி; (அங்கலாய்த்தல் - துக்கித்தல்; இச்சித்தல்); (அத்தம் - அர்த்தம் - பொருள்; பணம்);

புவி-தன்னில் அலைந்திடும் அப்-பித்தத்திற் சுழல்-மூடம் மங்கி - உலகில் அலைகின்ற அந்தப் பித்தத்தில் சுழல்கின்ற அறியாமை நீங்கி; (புவி - பூமி); (பித்தம் - மயக்கம்; பைத்தியம்); (மூடம் - அறிவின்மை);

வார்த்தைகள் மின்னி விளங்கிட மட்டுச் சொட்டத் தமிழ் பாடி - சொற்கள் ஒளிவீசத் தேன் சொட்டும்படி தமிழ்ப் பாமாலைகளைப் பாடி; (மின்னுதல் - ஒளிசெய்தல்); (மட்டு - தேன்);

வந்து காத்திடும் உன்னை மனந்தனில் வைத்துத் தப்பிப் பிழையேனோ - அடியாரைத் தேடி வந்து காக்கும் உன்னை என் மனத்தில் வைத்து நான் உய்யுமாறு அருள்வாயாக; (தப்பிப் பிழைத்தல் - உய்தல்);

பங்கனாய்த் திகழ் தென்ன - உமையை ஒரு பங்காக உடைய, இனியவனே, அழகனே; (தென்னன் - இனியவன்; அழகியவன்);

அயன்-தலை பற்றிப் பிச்சைக்கு உழல்வோனே - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சைக்குத் திரிபவனே; (அயன் - பிரமன்);

பண்பினாற் பொலி செம்மை பொருந்திய பத்தர்க்குப் பற்றது ஆனாய் - நற்குணங்களால் பொலிகின்ற செம்மை மிகுந்த பக்தர்களுக்குப் பற்றுக்கோடு ஆனவனே; (பண்பு - இயல்பு; நற்குணம்); (பொலிதல் - விளங்குதல்; சிறத்தல்); (செம்மை - செவ்வை; பெருமை); (பற்று - பற்றுக்கோடு); (சம்பந்தர் தேவாரம் - 1.97.6 – "நின்னடி சரணென்னும் அடியோர்க்குப் பற்றதுவாய பாசுபதன்");

தெங்கு நாற்புறம் மன்ன, நலங்-கிளர் செய்க்குச் சுத்தப் புனல் ஓடும் - எல்லாப் பக்கமும் தென்னை மரங்கள் மிகுந்ததும், வளம் மிக்க வயலுக்குக் காவிரியின் தூய நீர் ஓடுகின்றதுமான; (தெங்கு - தென்னைமரம்); (மன்னுதல் - நிலைத்தல்; தங்குதல்; மிகுதல்); (செய் - வயல்); (சுந்தரர் தேவாரம் - 7.57.12 – "நலங்கிளர் வயல் நாவலர் வேந்தன்");

தென் பராய்த்துறை தன்னை விரும்பிய செக்கர்ச் சிட்டப் பெருமானே - அழகிய திருப்பராய்த்துறையை இடமாக விரும்பியவனும் செம்மேனியனும் சிரேஷ்டமானவனுமான பெருமானே; (தென் - அழகு; இனிமை); (செக்கர் - சிவப்பு); (சிட்டம் - பெருமை; சிரேஷ்டம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Tuesday, July 21, 2020

03.05.103 – கச்சி ஏகம்பம் - துட்டர்க்கு உறவாகி - (வண்ணம்)

03.05.103 – கச்சி ஏகம்பம் - துட்டர்க்கு உறவாகி - (வண்ணம்)

2009-01-30

3.5.103) துட்டர்க்கு றவாகி (கச்சி ஏகம்பம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் .. தனதான )

(அற்றைக் கிரைதேடி - திருப்புகழ் - காஞ்சீபுரம்)


துட்டர்க் .. குறவாகிச்

.. சுற்றித் .. திரியாமல்

இட்டத் .. தொடுபூவை

.. இட்டுத் .. தொழுவேனோ

சிட்டர்க் .. கருள்தேவா

.. செக்கர்ச் .. சடையானே

கட்டைக் .. களைவோனே

.. கச்சிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

துட்டர்க்கு உறவு ஆகிச்

.. சுற்றித் திரியாமல்,

இட்டத்தொடு பூவை

.. இட்டுத் தொழுவேனோ;

சிட்டர்க்கு அருள் தேவா;

.. செக்கர்ச் சடையானே;

கட்டைக் களைவோனே;

.. கச்சிப் பெருமானே.


துட்டர்க்குவு ஆகிச் சுற்றித் திரியாமல் - துஷ்டர்களோடு கூடி நான் வீணே உழலாமல்; (துட்டர் - துஷ்டர் - தீயோர்);

இட்டத்தொடு பூவை இட்டுத் தொழுவேனோ - அன்போடு உன் திருவடியில் பூக்கள் தூவி வழிபடுமாறு எனக்கு அருள்வாயாக; (இட்டம் - இஷ்டம்);

சிட்டர்க்கு அருள் தேவா - ஞானியர்களுக்கு அருளும் தேவனே; (சிட்டர் - ஞானியர்);

செக்கர்ச் சடையானே - சிவந்த சடையை உடையவனே; (செக்கர் - சிவப்பு);

கட்டைக் களைவோனே - பந்தங்களை நீக்குபவனே; (கட்டு - பந்தம்);

கச்சிப் பெருமானே - திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.102 – ஒற்றியூர் - கற்றுத் தெளியாமல் - (வண்ணம்)

03.05.102 – ஒற்றியூர் - கற்றுத் தெளியாமல் - (வண்ணம்)

2009-01-30

3.5.102) கற்றுத் தெளியாமல் - (ற்றியூர் - திருவொற்றியூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் .. தனதான )

(அற்றைக் கிரைதேடி - திருப்புகழ் - காஞ்சீபுரம்)


கற்றுத் .. தெளியாமற்

.. கட்டப் .. படுவேனும்

பற்றற் .. றவனேதாள்

.. பற்றிப் .. பிழையேனோ

கற்றைச் .. சடையானே

.. கத்திக் .. கரைமீதே

எற்றித் .. திரைசேரும்

.. ஒற்றிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கற்றுத் தெளியாமல்

.. கட்டப்படுவேனும்,

பற்று அற்றவனே, தாள்

.. பற்றிப் பிழையேனோ;

கற்றைச் சடையானே;

.. கத்திக் கரை மீதே

எற்றித் திரை சேரும்

.. ஒற்றிப் பெருமானே.


கற்றுத் தெளியாமல் கட்டப்படுவேனும் - கற்க வேண்டியவற்றைக் கற்றுத் தெளிந்த அறிவு பெறாமல், பந்தபாசங்களால் கட்டுண்டு கஷ்டப்படும் அடியேனும்; (கட்டப்படுதல் - 1. பிணிக்கப்படுதல்; 2. கஷ்டப்படுதல்);

பற்று அற்றவனே, தாள் பற்றிப் பிழையேனோ - எப்பற்றும் இல்லாதவனே, உன் திருவடியைப் பற்றி உய்யுமாறு அருள்வாயாக; (பற்றற்றவன் - பற்றற்றான் - எந்தப் பந்தமும் இல்லாதவன் - கடவுள்); (பற்றுதல் - பிடித்தல்); (பிழைத்தல் - உய்தல்; தப்புதல்);

கற்றைச் சடையானே - கற்றைச் சடையை உடையவனே;

கத்திக் கரை மீதே எற்றித் திரை சேரும் ஒற்றிப் பெருமானே - ஒலித்துக் கரையின்மேல் மோதி அலைகள் அடையும் திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே. (எற்றுதல் - மோதுதல்); (திரை - அலை; கடல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Monday, July 20, 2020

03.05.101 – வான்மியூர் - காடு நாடு நாடோறும் - (வண்ணம்)

03.05.101 – வான்மியூர் - காடு நாடு நாடோறும் - (வண்ணம்)

2009-01-29

3.5.101) காடு நாடு நாடோறும் - வான்மியூர் - (திருவான்மியூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தான தானான தானத் .. தனதான )

(பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே - திருப்புகழ் - பொது)

(காதி மோதி வாதாடு - திருப்புகழ் - பொது)


காடு நாடு நாடோறும் ஓடிப் .. பணமீது

.. காத லாகி மாவாரி சூழித் .. தரைமீது

கேடு தேடி வீழாது தாளைத் .. தொழுவேனோ

.. கேழி லாத மாசோதி யேபொற் .. சடையானே

தோடு காதில் ஆர்மாதை ஆகத் .. துடையானே

.. சூரன் மீது வேலேவு வேளைத் .. தருவோனே

வீடு நாடி னார்பாடி ஆடிப் .. பணியீசா

.. வேலை ஓதம் ஆர்வான்மி யூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

காடு(ம்) நாடு(ம்) நாள்தோறும் ஓடிப், பணம் மீது

.. காதல் ஆகி, மா வாரி சூழ் இத்-தரைமீது

கேடு தேடி வீழாது தாளைத் தொழுவேனோ;

.. கேழ் இலாத மா சோதியே; பொற்சடையானே;

தோடு காதில் ஆர் மாதை ஆகத்து உடையானே;

.. சூரன் மீது வேல் ஏவு வேளைத் தருவோனே;

வீடு நாடினார் பாடி ஆடிப் பணி ஈசா;

.. வேலை ஓதம் ஆர் வான்மியூரிற் பெருமானே.


காடும் நாடும் நாள்தோறும் ஓடி - பல இடங்களிலும் தினந்தோறும் அலைந்து திரிந்து;

(* காடு - அப்பர் தேவாரம் - 6.95.5 - "திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும் திருவெண்ணீ றணியாத திருஇல் ஊரும் ...... அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே");

பணம் மீது காதல் ஆகி - பணத்தின் மேல் ஆசை கொண்டு, அதனால்;

மா வாரி சூழ் இத் தரைமீது கேடு தேடி வீழாது தாளைத் தொழுவேனோ - பெரிய கடல் சூழ்ந்த இப்புவிமீது கேட்டையே தேடி அழியாமல், உன் திருவடியை வழிபட அருள்வாயாக; (வாரி - கடல்); (வீழ்தல் - விழுதல்);

கேழ் இலாத மா சோதியே - ஒப்பற்ற பெருஞ்சோதியே; (கேழ் - ஒப்பு); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.8 - "கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை");

பொற்சடையானே - பொன் போன்ற சடையை உடையவனே;

தோடு காதில் ஆர் மாதை ஆகத்து உடையானே - காதில் தோடு அணியும் உமையைத் திருமேனியில் உடையவனே; (ஆர்தல் - அணிதல்; பொருந்துதல்); (ஆகம் - மேனி);

சூரன் மீது வேல் ஏவு வேளைத் தருவோனே - சூரபதுமன் மீது வேலை ஏவிய முருகனைத் தந்தவனே; (வேள் - முருகன்);

வீடு நாடினார் பாடி ஆடிப் பணி ஈசா - முக்தி தேடுபவர்கள் பாடி ஆடி வணங்கும் ஈசனே; (வீடு - முக்தி);

வேலை ஓதம் ஆர் வான்மியூரிற் பெருமானே - கடலின் அலைகள் ஒலிக்கின்ற திருவான்மியூரில் உறையும் பெருமானே. (வேலை - கடல்); (ஓதம் - அலை); (ஆர்த்தல் - ஒலித்தல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, July 18, 2020

03.05.100 – கடவூர் - காசை நாடி மால் ஆகி - (வண்ணம்)

03.05.100 – கடவூர் - காசை நாடி மால் ஆகி - (வண்ணம்)

2009-01-29

3.5.100) காசை நாடி மால் ஆகி - கடவூர் - (திருக்கடவூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தான தானான தானத் .. தனதான )

(பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே - திருப்புகழ் - பொது)

(காதி மோதி வாதாடு - திருப்புகழ் - பொது)


காசை நாடி மாலாகி மாயக் .. கடன்மூழ்கிக்

.. காயம் ஓயு(ம்) நாளாகி நோயுற் .. றதனாலே

நேச மான பேராலும் ஏசப் .. படுவேனோ

.. நீறு பூசி னாயேழை யேனுக் .. கருளாயே

பாசம் வீசி ஓர்மாணி யாரைத் .. தொடர்காலன்

.. பாரில் வீழ ஓர்பாதம் வீசிச் .. செறுகாலா

வாச(ம்) நாறு பூவேறு சோலைக் .. கடவூரா

.. வாம பாக(ம்) மாதான மேனிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

காசை நாடி, மால் ஆகி, மாயக் கடல் மூழ்கிக்,

.. காயம் ஓயும் நாள் ஆகி, நோயுற்று, அதனாலே

நேசமான பேராலும் ஏசப்படுவேனோ;

.. நீறு பூசினாய்; ஏழையேனுக்கு அருளாயே;

பாசம் வீசி ஓர் மாணியாரைத் தொடர் காலன்

.. பாரில் வீழ ஓர் பாதம் வீசிச் செறு காலா;

வாசம் நாறு பூ ஏறு சோலைக் கடவூரா;

.. வாம பாகம் மாது ஆன மேனிப் பெருமானே.


காசை நாடி, மால் ஆகி, மாயக் கடல் மூழ்கி - பணத்தை விரும்பி, மனம் மயங்கி, வஞ்சனைக் கடலில் ஆழ்ந்து; (மால் - மயக்கம்); (மாயம் - மாயை; வஞ்சனை; அஞ்ஞானம்); (மாய்தல் - அழிதல்; சாதல்); (கடன்மூழ்கி - 1. கடல்+மூழ்கி / 2. கடன்+மூழ்கி); (கடன் - கடமை; கடன் loan); ("மாயக் கடன் மூழ்கி" என்று கொண்டால், "மாயக் கடமைகளில் ஆழ்ந்து" / மாயுமாறு கடனில் ஆழ்ந்து);

காயம் ஓயும் நாள் ஆகி, நோயுற்று, அதனாலே - உடல் தளரும் முதுமைப் பருவம் அடைந்து, பல நோய்களால் வாடி, அக்காரணங்களால்; (காயம் - உடல்); (ஓய்தல் - தளர்தல்; முடிதல்; அழிதல்);

நேசமான பேராலும் ஏசப்படுவேனோ - முன்பு பிரியத்தோடு இருந்த குடும்பத்தினராலும் (இப்பொழுது அந்த அன்பு குன்றியதால்) ஏசப்படும் நிலைக்கு ஆளாவேனோ? (நேசமான - நேசம் ஆன – 1. அன்பான / 2. அன்பு தீர்ந்து போன); (ஆதல் - முடிதல்; exhausted); (ஏசுதல் - இகழ்தல்);

நீறு பூசினாய், ஏழையேனுக்கு அருளாயே - திருநீற்றைப் பூசிய சிவபெருமானே, அறிவில்லாத அடியேனுக்கு (நான் அந்த நிலையை அடைவதன் முன்னமே) விரைந்து அருள்புரிவாயாக; (நீறு பூசி - திருநீற்றைப் பூசியவன்); (ஏழையேன் - அறிவில்லாத நான்);

பாசம் வீசி ஓர் மாணியாரைத் தொடர் காலன் பாரில் வீழ ஓர் பாதம் வீசிச் செறு காலா - ஒப்பற்ற மார்க்கண்டேயரைக் கொல்வதற்காகப் பாசத்தை வீசி அவரைத் துரத்திய காலனே நிலத்தில் விழுந்து இறக்கும்படி ஒரு திருவடியை வீசி உதைத்த காலகாலனே; (பாசம் - கயிறு); (மாணியார் - மார்க்கண்டேயர்; மாணி - பிரமசாரி); (செறுதல் - அழித்தல்);

வாசம் நாறு பூ ஏறு சோலைக் கடவூரா - மணம் வீசும் பூக்கள் மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரில் உறைபவனே; (ஏறுதல் - மிகுதல்);

வாம பாகம் மாது ஆன மேனிப் பெருமானே - இடப்பக்கம் பாகமாக உமை இருக்கும் திருமேனியையுடைய பெருமானே; (வாமம் - இடப்பக்கம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------