03.05.022 – பொது - கமழ்தமிழ் ஓதுகின்ற - (வண்ணம்)
2007-03-22
3.5.22 - கமழ்தமிழ் ஓதுகின்ற - (பொது)
----------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதன தான தந்த
தனதன தான தந்த
தனதன தான தந்த .. தனதான )
(நிலவினி லேயி ருந்து -- திருப்புகழ் - சுவாமிமலை)
கமழ்தமிழ் ஓது கின்ற அடியவர் பால டைந்து
.. .. கடையவ னேனு னன்பன் .. எனவாகிக்
.. கசிவொடு பாடி நெஞ்சில் நிலவிருள் போய கன்று
.. .. கழலடி யேஇ லங்க .. அருளாயே
நமவென ஓதி உன்றன் அடிதொழு மாணி அஞ்சு
.. .. நமனுயிர் கால நெஞ்சில் .. உதைபாதா
.. நடமிடு மாவ ரங்கம் எனவிடு காட மர்ந்த
.. .. நதிபுனை நாத வெந்த .. பொடியாடீ
சமநிலை யேஅ டைந்த தவசிகள் நாடும் இன்ப
.. .. தழலெரி யாகி நின்ற .. தனிநாதா
.. சரமென மேனி யெங்கும் அரவுடை யாய்வி ரிந்த
.. .. சடைதனில் ஆறு கொன்றை .. அணிவோனே
இமையவர் ஓதம் அன்று கடையவு(ம்) மேலெ ழுந்த
.. .. எரிதரும் ஆலம் உண்ட .. அருளாளா
.. எருதினை யேஉ கந்த கொடியிடை மாது பங்க
.. .. இருளினில் ஆடு கின்ற .. பெருமானே
பதம் பிரித்து:
கமழ்-தமிழ் ஓதுகின்ற அடியவர்பால் அடைந்து,
.. .. கடையவனேன் உன் அன்பன் .. என ஆகிக்,
.. கசிவொடு பாடி, நெஞ்சில் நிலவு-இருள் போய்-அகன்று,
.. .. கழல்-அடியே இலங்க, அருளாயே;
"நம" என ஓதி உன்றன் அடிதொழு மாணி அஞ்சு
.. .. நமன் உயிர் கால நெஞ்சில் உதை-பாதா;
.. நடமிடும் மா அரங்கம் என இடுகாடு அமர்ந்த,
.. .. நதி புனை நாத; வெந்த பொடி ஆடீ;
சமநிலையே அடைந்த தவசிகள் நாடும் இன்ப;
.. .. தழல் எரி ஆகி நின்ற தனி நாதா;
.. சரம் என மேனி எங்கும் அரவு உடையாய்; விரிந்த
.. .. சடைதனில் ஆறு கொன்றை அணிவோனே;
இமையவர் ஓதம் அன்று கடையவும் மேல் எழுந்த
.. .. எரிதரும் ஆலம் உண்ட அருளாளா;
.. எருதினையே உகந்த, கொடியிடை மாது பங்க;
.. .. இருளினில் ஆடுகின்ற பெருமானே;
கமழ்-தமிழ் ஓதுகின்ற அடியவர்பால் அடைந்து, கடையவனேன் உன் அன்பன் என ஆகிக் - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளால் உன் மலர்த்திருவடியைப் பாடும் அடியார்களை அடைந்து, கீழ்மையுடைய நானும் உன் பக்தன் என்று ஆகி; (கமடமிழ் = கமழ் + தமிழ்); (கடையவனேன் - சிறியேனாகிய நான்); (உனன்பன் - உன்னன்பன் என்பது சந்தம் நோக்கி இப்படி வந்தது);
கசிவொடு பாடி, நெஞ்சில் நிலவு-இருள் போய்-அகன்று, கழல் அடியே இலங்க, அருளாயே - உருகி உன்னைப் போற்றிப் பாடி, என் மனத்தில் இருக்கும் அறியாமை நீங்கிக், கழல் அணிந்த உன் திருவடியே ஒளி வீச அருள்வாயாக;
"நம" என ஓதி உன்றன் அடிதொழு மாணி அஞ்சு நமன் உயிர் கால நெஞ்சில் உதை-பாதா - உன் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயர் அஞ்சிய காலனே உயிரைக் கக்கும்படி (மாளும்படி) அன்று காலனது மார்பில் உதைத்த திருவடியினனே;
நடமிடும் மா அரங்கம் என இடுகாடு அமர்ந்த, நதி புனை நாத - கூத்தாடும் மன்று எனச் சுடுகாட்டை விரும்பியவனே; (அமர்தல் - விடும்புதல்);
வெந்த பொடி ஆடீ - சுட்ட திருநீற்றைப் பூசியவனே; (ஆடுதல் - பூசுதல்; ஆடி - பூசியவன்; ஆடீ - பூசியவனே):
சமநிலையே அடைந்த தவசிகள் நாடும் இன்ப - விருப்பு வெறுப்பு இல்லாத தவசிகள் போற்றும் ஆனந்த ஸ்வரூபியே;
தழல் எரி ஆகி நின்ற தனி நாதா - எல்லையற்ற சோதியாகி நின்ற ஒப்பற்ற தலைவனே; (தழல் எரி - தழல்கின்ற சோதி); (தனி - ஒப்பற்ற);
சரம் என மேனி எங்கும் அரவு உடையாய் - திருமேனியில் பாம்புகளை மாலையாக அணிந்தவனே; (சரம் - மாலை);
விரிந்த சடைதனில் ஆறு கொன்றை அணிவோனே - விரிந்த சடையில் கங்கையையும் கொன்றைமலரையும் அணிந்தவனே; (ஆறு கொன்றை - உம்மைத்தொகை);
இமையவர் ஓதம் அன்று கடையவும் மேல் எழுந்த எரிதரும் ஆலம் உண்ட அருளாளா - தேவர்கள் முன்பு பாற்கடலைக் கடைந்தபோது பொங்கிய சுட்டெரிக்கும் ஆலகால விடத்தை உண்ட அருளாளனே; (ஓதம் - கடல்);
எருதினையே உகந்த, கொடியிடை மாது பங்க - இடபத்தையே வாகனமாக விரும்பிய, கொடி போன்ற நுண்ணிடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே;
இருளினில் ஆடுகின்ற பெருமானே - சர்வ சங்கார காலத்தில் கூத்து இயற்றுபவனே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment