Monday, November 6, 2017

03.05.009 – வெண்காடு - எந்தாயென ஈபவன் - (வண்ணம்)

03.05.009 – வெண்காடு - எந்தாயென ஈபவன் - (வண்ணம்)

2006-08-30

3.5.9 - எந்தாயென ஈபவன் - (வெண்காடு)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தாதன தானன தாத்தன

தந்தாதன தானன தாத்தன

தந்தாதன தானன தாத்தன .. தனதான )

(அந்தோமன மேநம தாக்கையை - திருப்புகழ் - திருச்சிராப்பள்ளி)


எந்தாயென ஈபவன் ஈட்டிய

.. .. என்தீவினை வேரற மாய்ப்பவன்

.. .. என்பாலொரு மாலையை ஏற்றவன் .. எருதேறி

.. இன்பாலினில் ஆடிடும் மூத்தவன்

.. .. எங்கேயடி யார்தொழு தேத்தினும்

.. .. இந்தாவென ஓர்கரம் நீட்டிடும் .. அருளாளன்


வெந்தீயினில் மூவெயில் ஆழ்த்தரன்

.. .. வெங்கானிடை ஆடிடு கூத்தினன்

.. .. வெண்காடுறை கோனடி வாழ்த்திட .. மறவேனே

.. வெண்டாமரை மேலயன் ஓட்டினில்

.. .. உண்பானிடு வீரென நாட்டினில்

.. .. ஒண்போதணி ஏழையர் வீட்டுமுன் .. வருமீசன்


சிந்தாமணி வானவர் போற்றிடு

.. .. செஞ்சோதிய வாவினை நீத்தவர்

.. .. சிந்தாகுலம் ஆனவை தீர்த்திடு .. மதிசூடி

.. திண்டோள்களி னால்வரை பேர்த்தெறி

.. .. வெங்கோபனை ஓவென வாட்டிய

.. .. செந்தாளினன் ஓர்பெயர் சூட்டிய .. கயிலாயன்


அந்தீயன மேனியில் நீற்றினன்

.. .. அன்பேஉரு ஆகிய வேட்டுவர்

.. .. அம்பாலொரு பூவிழி பேர்த்தடை .. கணநாதன்

.. ஐம்போதினை ஏவிடு போர்த்தொழில்

.. .. அங்காமனை நீறுசெய் நேத்திரன்

.. .. அன்றாலதன் நீழலில் ஓத்துரை .. பெருமானே.


பதம் பிரித்து:

"எந்தாய்" என ஈபவன்; ஈட்டிய

.. .. என் தீவினை வேரற மாய்ப்பவன்;

.. .. என்பால் ஒரு மாலையை ஏற்றவன்; எருதேறி;

.. இன்-பாலினில் ஆடிடும் மூத்தவன்;

.. .. எங்கே அடியார் தொழுதேத்தினும்

.. .. "இந்தா" என ஓர் கரம் நீட்டிடும் அருளாளன்;


வெந்தீயினில் மூவெயில் ஆழ்த்து-அரன்;

.. .. வெங்கானிடை ஆடிடு கூத்தினன்;

.. .. வெண்காடு உறை கோன் அடி வாழ்த்திட மறவேனே;

.. வெண்-தாமரைமேல் அயன் ஓட்டினில்

.. .. "உண்பான் இடுவீர்" என நாட்டினில்

.. .. ஒண்-போது அணி ஏழையர் வீட்டுமுன் வரும் ஈசன்;


சிந்தாமணி; வானவர் போற்றிடு

.. .. செஞ்சோதி; அவாவினை நீத்தவர்

.. .. சிந்தாகுலம் ஆனவை தீர்த்திடு மதிசூடி;

.. திண்-தோள்களினால் வரை பேர்த்து எறி

.. .. வெங்கோபனை "" என வாட்டிய

.. .. செந்தாளினன்; ஓர் பெயர் சூட்டிய கயிலாயன்;


அந்தீ அன மேனியில் நீற்றினன்;

.. .. அன்பே உரு ஆகிய வேட்டுவர்

.. .. அம்பால் ஒரு பூ-விழி பேர்த்து அடை கணநாதன்;

.. ஐம்போதினை ஏவிடு போர்த்தொழில்

.. .. அங்-காமனை நீறுசெய் நேத்திரன்;

.. .. அன்று ஆலதன் நீழலில் ஓத்து உரை பெருமானே.


"எந்தாய்" என ஈபவன் - "எம் தந்தையே" என்று போற்றினால் அருள்பவன்;

ஈட்டிய என் தீவினை வேர் அற மாய்ப்பவன் - செய்து சேர்த்த என் பாவங்களையெல்லாம் அடியோடு அழிப்பவன்;

என்பால் ஒரு மாலையை ஏற்றவன் எருதேறி - எலும்பால் ஆன ஒரு மாலையை அணிபவன், இடப வாகனன்; (என்பு - எலும்பு); ("என்பால் = என்னிடம்" என்றும் பொருள்கொள்ளலாம்; "நான் இட்ட பாமாலையை ஏற்றருளியவன்”);

எருதேறி - இடப வாகனன்;

இன் பாலினில் ஆடிடும் மூத்தவன் - இனிய பாலில் அபிஷேகம் விரும்பியவன், மிகவும் தொன்மையானவன்;

எங்கே அடியார் தொழுது ஏத்தினும் "இந்தா" என ஓர் கரம் நீட்டிடும் அருளாளன் - எங்கே இருந்து அடியவர்கள் போற்றி வணங்கினாலும். "இந்தா" என்று அருட்கரத்தை நீட்டுபவன்; (அபயஹஸ்தம் / வரதஹஸ்தம்); (சுந்தரர் தேவாரம் - 7.23.2 – "எங்கேனும் ருந்துன் டியேன் உனை நினைந்தால் அங்கே வந்தென்னொடும் டனாகி நின்றருளி);


வெம் தீயினில் மூ எயில் ஆழ்த்து அரன் - முப்புரங்களை நெருப்பில் ஆழ்த்திய ஹரன்;

வெங்கானிடை ஆடிடு கூத்தினன் - சுடுகாட்டில் கூத்து ஆடுபவன்;

வெண்காடு உறை கோன் அடி வாழ்த்திட மறவேனே - திருவெண்காட்டில் உறைகின்ற தலைவனது திருவடியை வாழ்த்த மறக்கமாட்டேன்;

வெண்டாமரை மேலயன் ஓட்டினில் "உண்பான் இடுவீர்" என - வெண்தாமரைமேல் வீற்றிருக்கும் பிரமனது மண்டையோட்டில் "உண்ண இடுங்கள்" என்று; (உண்பான் - உண்ண); (பான் - A suffix in a verbal participle, indicating purpose; ஒரு வினையெச்ச விகுதி);

நாட்டினில் ஒண் போது அணி ஏழையர் வீட்டுமுன் வரும் ஈசன் - நாட்டில் பல ஊர்களில் ஒளியுடைய பூக்களை அணிந்த பெண்களது வீட்டுவாயிலில் வந்துநிற்கும் ஈசன்; (ஒண் - ஒளி; அழகு); (போது - பூ); (ஏழை - பெண்);


சிந்தாமணி - விரும்பியதெல்லாம் கொடுப்பவன்; அழிவற்ற மணி போன்றவன்; (சிந்தாமணி - चिन्तामणिः 1 a fabulous gem supposed to yield to its possessor all desires); (சிந்துதல் - அழிதல்);

வானவர் போற்றிடு செஞ்சோதி - தேவர்களெல்ளாம் வணங்கும் சிவந்த சோதி;

அவாவினை நீத்தவர் சிந்தாகுலம் ஆனவை தீர்த்திடு மதிசூடி - ஆசைகளைத் துறந்தவர்களது கவலைகளையெல்லாம் தீர்க்கின்றவன், சந்திரனைச் சூடியவன்; (நீத்தல் - துறத்தல்); (சிந்தாகுலம் - மனக்கவலை);

திண் தோள்களினால் வரை பேர்த்து எறி வெம் கோபனை "" என வாட்டிய செந்தாளினன் - வலிய புஜங்களினால் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற கடுங்கோபம் உடைய இராவணனை, அவன் "" என்று கத்தி அழும்படி சிவந்த திருவடியை ஊன்றி அவனை வருத்தியவன்; (வரை - மலை);

ஓர் பெயர் சூட்டிய கயிலாயன் - (பின்னர், அவன் தொழுது இசைபாடக் கேட்டு இரங்கி) அவனுக்கு "இராவணன்" (அழுதவன்) என்ற பெயரை அருளிய கயிலைமலையான்;


அம் தீ அன மேனியில் நீற்றினன் - அழகிய தீப் போன்ற திருமேனியில் திருநீற்றைப் பூசியவன்; (அம் - அழகு); (அன - அன்ன – போன்ற); (அந்தீ - அந்தி என்பதன் நீட்டல் விகாரம் என்றும் கொள்ளல் ஆம்; அப்படிக் கொண்டால், "அந்தீ அன மேனி" - மாலைநேரத்து வானம் போன்ற செம்மேனி);

அன்பே உரு ஆகிய வேட்டுவர் அம்பால் ஒரு பூவிழி பேர்த்து அடை கணநாதன் - அன்பே வடிவமான கண்ணப்பர் அம்பினால் ஒரு மலர்க்கண்ணைப் பேர்த்து அப்பி அடைந்த, ணங்களுக்குத் தலைவன்;

ஐம்போதினை ஏவிடு போர்த்தொழில் அம் காமனை நீறுசெய் நேத்திரன் - ஐந்து பூக்களை ஏவுகின்ற போர்த்தொழிலை உடைய அழகிய மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணை உடையவன்;

அன்று ஆலதன் நீழலில் ஓத்து உரை பெருமானே - முன்பு கல்லால மரத்தின்கீழ் வேதங்களை விளக்கிய பெருமான்; (ஓத்து - வேதம்); (உரைத்தல் - விளக்குதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment