Thursday, November 9, 2017

03.05.013 – மயிலாப்பூர் - சினமே மிகநற் குணமாய் - (வண்ணம்)

03.05.013 – மயிலாப்பூர் - சினமே மிகநற் குணமாய் - (வண்ணம்)


2006-10-12

3.5.13) அரன் அடியை நினை மனமே (மயிலாப்பூர்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனனா தனனத் தனனா தனனத்

தனனா தனனத் .. தனதான)

(அருமா மதனைப் பிரியா தசரக் - திருப்புகழ் - திருவருணை)

(தசையா கியகற் றையினால் முடியத் - திருப்புகழ் - கருவூர்)


சினமே மிகநற் குணமாய், வழியைத்

.. .. தெரியா துலகிற் .. பலநாளும்

.. திரிவாய்; ஒருவர்க் களியாய்; உடலைத்

.. .. திரமா நினைவுற் .. றதனாலே;

கனவாய் நொடியிற் கலைவாழ் விதனிற்

.. .. கழலா இடருற் .. றலையாதே,

.. ருமா மதனைச் சுடுமோர் நுதலிற்

.. .. கணினா னடியைச் .. சிறிதேனும்

நினையாய்; பிறவித் துயரே தருமிப்

.. .. பிணிதீர் நிலையைப் .. பெறலாமே,

.. நிலவோ டரவைச் சடைமே லணிவித்

.. .. தகனே எனநித் .. தலுமோதின்,

மனமே! அடியர்க் கெளியான், மழுமுத்

.. .. தலைவேல் மறியைத் .. தரியீசன்

... வருவா னுடனற் றுணையாய்; அருளைப்

.. .. பொழிவான் மயிலைப் .. பெருமானே.


சினமே மிக நற்குணமாய், வழியைத் தெரியாது உலகிற் பல நாளும் திரிவாய் - கோபமே குணம் என்று கொண்டு, நல்வழியை அறியாமல், இவ்வுலகத்தில் என்றும் திரிகின்றாய்;

ஒருவர்க்கு அளியாய் - ஒருவருக்கும் எதுவும் கொடுக்கமாட்டாய்;

உடலைத் திரமா நினைவுற்றதனாலே - இந்த உடல் நிலையானது என்ற எண்ணத்தினால்; (திரமா - ஸ்திரமாக);

கனவாய் நொடியில் கலை வாழ்வு இதனில் கழலா இடர் உற்று அலையாதே - கனவு போல் விரைவில் கலைந்துவிடும் இந்த வாழ்வில் நீங்காத துன்பம் அடைந்து வருந்தாமல்; (கழல்தல் - நீங்குதல்);

கரு மா மதனைச் சுடும் ஓர் நுதலிற் கணினான் அடியைச் சிறிதேனும் நினையாய் - கரிய வலிய மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண்ணன் திருவடியைச் சற்றேனும் எண்ணுவாயாக; (மதன் = மன்மதன்; காமனது நிறம் கறுப்பு; அதனால் கருவேள் என்றும் பெயர்); (நுதல் - நெற்றி); (கணினான் - கண்ணினான் - இடைக்குறையாக வந்தது);

பிறவித் துயரே தரும் இப்பிணி தீர் நிலையைப் பெறலாமே - அப்படி எண்ணினால், தொடர்ந்து பிறவிகளைத் தரும் இந்த வல்வினைப் பந்தம் தீரும் நற்கதியை அடையலாம்;

நிலவோடு அரவைச் சடைமேல் அணி வித்தகனே என நித்தலும் ஓதின் - சந்திரனையும் பாம்பையும் சடைமேல் அணியும் வல்லவனே என்று தினமும் ஓதினால்; (வித்தகன் - வல்லவன்);

மனமே! அடியர்க்கு எளியான், மழு முத்தலை வேல் மறியைத் தரி ஈசன் வருவான் உடன் நற்றுணையாய் - மனமே, அடியவர்களால் எளிதில் அடையப்படுபவனும், மழு சூலம் மான்கன்று இவற்றைக் கையில் ஏந்தியவனுமான ஈசன் நல்ல துணை ஆகி உடன் வருவான்;

அருளைப் பொழிவான் மயிலைப் பெருமானே - மயிலாப்பூரில் உறைகின்ற சிவபெருமான் பேரருள் புரிவான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment