Thursday, November 23, 2017

03.05.019 – இடைமருதூர் - காடு மலைகடல் ஓடி - (வண்ணம்)

03.05.019 – இடைமருதூர் - காடு மலைகடல் ஓடி - (வண்ணம்)

2009-08-20

3.5.19 - காடு மலைகடல் ஓடி (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான )

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


காடு மலைகட லோடி மிகுபொருள்

..... நாடு மனநிலை .. உளதாலே

.. காணு மிடர்பல வாகி உனதிரு

..... காலை வழிபட .. அறியேனும்

கூடு தனைவிடு நாளி லொருபெயர்

..... கூறு நினைவது .. பெறுமாறே

.. கோல உமைதனை ஆக மதிலொரு

..... கூறு மகிழ்பவ .. அருளாயே

சூடு மதியொடு நாக மலைமலி

..... தூய நதியடை .. சடையானே

.. தோழர் அவர்துயர் தீர இருமுறை

..... தூது செலுமதி .. சயநேயா

ஓடு தனில்இடும் ஊணை எனமறை

..... ஓதி உழல்தரும் .. உடையானே

.. ஓத முகில்வள மாரு மிடைமரு

..... தூரி லினிதுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

காடு மலை கடல் ஓடி மிகு பொருள்

..... நாடும் மனநிலை உளதாலே,

.. காணும் இடர் பலவாகி உனது இரு

..... காலை வழிபட அறியேனும்,

கூடு தனைவிடு நாளில் ஒரு பெயர்

..... கூறு நினைவு-அது .. பெறுமாறே,

.. கோல உமைதனை ஆகம்-அதில் ஒரு

..... கூறு மகிழ் பவ, அருளாயே;

சூடு மதியொடு, நாகம், அலை மலி

..... தூய நதி அடை சடையானே;

.. தோழர் அவர் துயர் தீர, இருமுறை

..... தூது செலும் அதிசய நேயா;

"ஓடுதனில் இடும் ஊணை" என மறை

..... ஓதி உழல்தரும் உடையானே;

.. ஓத முகில் வளம் ஆரும் இடைமரு

..... தூரில் இனிது உறை பெருமானே.


* 3-ம் அடி - சுந்தரருக்காகப் பரவையாரிடம் சிவபெருமான் இரவில் இருமுறை தூது சென்றதைக் குறித்தது.


காடு மலை கடல் ஓடி மிகு பொருள் நாடும் மனநிலை உளதாலே - காடு மலை கடல் என்று உலகெங்கும் அலைந்து திரிந்து பெரும்பொருளைத் தேடுகின்ற ஆசையினால்; (ஓடுதல் - செல்லுதல்);

காணும் இடர் பலவாகி உனது இரு காலை வழிபட அறியேனும் - அடையும் துன்பங்கள் பல ஆகி, உன் இரு தாளை வழிபட அறியாது இருக்கின்ற நானும்; (காணுதல் - அனுபவத்தில் அறிதல்);

கூடுதனை விடு நாளில் ஒரு பெயர் கூறு நினைவு அது பெறுமாறே - உடலிலிருந்து உயிர் பிரியும் தினத்தில் உன் ஒப்பற்ற திருநாமத்தைச் சொல்லும் எண்ணத்தைப் பெறும்படி; (கூடு - உடல்); (ஒரு - ஒப்பற்ற);

கோல உமைதனை ஆகம் அதில் ஒரு கூறு மகிழ் பவ அருளாயே - அழகிய உமையைத் திருமேனியில் ஒரு கூறாக விரும்பிய பவனே, அருள்வாயாக; (கோலம் - அழகு); (ஆகம் - மேனி); (பவன் - சிவன் திருநாமம்);

சூடு மதியொடு நாகம் அலை மலி தூய நதி அடை சடையானே - சூடிய சந்திரனுடன் பாம்பும் அலை மிக்க கங்கையும் திகழும் சடையை உடையவனே;

தோழர் அவர் துயர் தீர இருமுறை தூது செலும் அதிசய நேயா - தோழரான சுந்தரருக்கு இரங்கித் திருவாரூரில் பரவையார் இல்லத்திற்கு இருமுறை தூது நடந்த அதிசயனே, அன்பனே; (அதிசயநேயா - 1. அதிசயனே, நேயனே; 2. அதி ஜய (மிகுந்த வெற்றியுடைய) நேயனே);

"ஓடுதனில் இடும் ஊணை" என மறை ஓதி உழல்தரும் உடையானே - "மண்டையோட்டில் பிச்சையாக உணவை இடுங்கள்" என்று வேதங்களைப் பாடியவண்ணம் திரிகின்ற சுவாமியே, செல்வனே; (ஓடு - மண்டையோடு); (ஊண் - உணவு); (உழல்தரும் - உழலும் - திரியும்); (தருதல் - ஒரு துணைவினை); (உடையான் - சுவாமி; - உடையவன் - 1. உரியவன்; 2. செல்வமுள்ளவன்);

ஓத முகில் வளம் ஆரும் இடைமருதூரில் இனிது உறை பெருமானே - ஈரம் உள்ள மேகத்தின் வளம் பொருந்திய திருவிடைமருதூரில் இனிது எழுந்தருளிய சிவபெருமானே; (ஓத முகில் - ஈரம் உள்ள மேகம்); (திருப்புகழ் - பொது - "சூதினுண வாசைதனில் ... ஓதமுகி லாடுகிரி யேறுபட");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment