03.05.010 – பொது - உருகிடு மனமோ பணிபுரி குணமோ - (வண்ணம்)
2006-09-02
3.5.10 - உருகிடு மனமோ பணிபுரி குணமோ - (பொது)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா .. தனதான);
(அரியய னறியா தவரெரி - திருப்புகழ் - வடுகூர்)
உருகிடு மனமோ பணிபுரி குணமோ
.. .. உதவிடு திறமோ .. இலனாகி
.. உயிர்வளர் வழியோ திருமுறை மொழியோ
.. .. ஒருசிறி துணரா .. துனைநாடும்
ஒருதவ மறியா தடியரை அடையா
.. .. துலகினி லவமே .. உழலாமல்
.. உயர்தமிழ் மலரா ரழகிய தொடையா
.. .. லுனதடி தொழுமா .. றருளாயே
திருமலை எறிமூ டனையொரு பதுவாய்
.. .. சிவசிவ கமியா .. யெனுமாறு
.. திருவிரல் நுனியா லழவிடு மரனே
.. .. சினவிடை உடையாய் .. சுரர்வாழ
மருவலர் புர(ம்)நீ றெழநகு தலைவா,
.. .. மலைமகள் ஒருபால் .. மகிழ்வோனே
.. மதியணி சடையாய் அரையினில் அதள்மேல்
.. .. வரியர வினையார் .. பெருமானே.
பதம் பிரித்து:
உருகிடு மனமோ பணி புரி குணமோ
.. .. உதவிடு திறமோ இலன் ஆகி,
.. உயிர் வளர் வழியோ திருமுறை மொழியோ
.. .. ஒரு சிறிது உணராது, உனை நாடும்
ஒரு தவம் அறியாது, அடியரை அடையாது,
.. .. உலகினில் அவமே உழலாமல்,
.. உயர்-தமிழ்-மலர் ஆர் அழகிய தொடையால்
.. .. உனது அடி தொழுமாறு அருளாயே;
திருமலை எறி மூடனை ஒருபது-வாய்
.. .. "சிவசிவ கமியாய்" எனுமாறு
.. திருவிரல் நுனியால் அழவிடும் அரனே;
.. .. சினவிடை உடையாய்; சுரர் வாழ
மருவலர் புரம் நீறு எழ நகு தலைவா;
.. .. மலைமகள் ஒருபால் மகிழ்வோனே;
.. மதி அணி சடையாய்; அரையினில் அதள்மேல்
.. .. வரி-அரவினை ஆர் பெருமானே.
உருகிடு மனமோ, பணிபுரி குணமோ, உதவிடு திறமோ இலன் ஆகி - உருகும் மனமோ, திருத்தொண்டு செய்யும் பண்போ, பிறர்க்கு உதவும் தன்மையோ இல்லாதவன் ஆகி; (பணி - திருப்பணி; திருத்தொண்டு);
உயிர் வளர் வழியோ திருமுறை மொழியோ ஒரு சிறிது உணராது - உயிரை வளர்க்கும் வழியையோ திருமுறைப் பாடல்களையோ சற்றும் உணராமல்; (சிறிது - சிறிதும் - உம்மைத்தொகை);
உனை நாடும் ஒரு தவம் அறியாது, அடியரை அடையாது, உலகினில் அவமே உழலாமல் - உன்னை அடைய ஒரு தவமும் செய்யாது, உன் அடியவர்களை அடையாது, இவ்வுலகத்தில் வீணே உழலாமல்;
உயர்-தமிழ்-மலர் ஆர் அழகிய தொடையால் உனது அடி தொழுமாறு அருளாயே - உயர்ந்த தமிழ்ச்சொல் மலர்கள் நிறைந்த அழகிய பாமாலைகளால் உன் திருவடியை நான் வணங்குவதற்கு அருள்புரிவாயாக;
திருமலை எறி மூடனை ஒருபது வாய், "சிவசிவ! கமியாய்" எனுமாறு திருவிரல் நுனியால் அழவிடும் அரனே - கயிலைமலையை வீசியெறிய முயன்ற மூடனான இராவணனை, அவனது பத்து வாய்களும், “சிவசிவ! என் குற்றத்தைப் பொறுத்தருளாய்" என்று தொழும்படி, உன் திருவடியின் ஒரு விரல் நுனியை ஊன்றி அவனை நசுக்கி அழவைத்த ஹரனே; (கமித்தல் - மன்னித்தல்; குற்றம் பொறுத்தல்); (ஒருபது - பத்து);
சினவிடை உடையாய் - சினம் மிக்க இடபத்தை வாகனமாக உடையவனே;
சுரர் வாழ, மருவலர் புரம் நீறு எழ நகு தலைவா - தேவர்கள் உய்யும்படி, பகைவர்களின் முப்புரங்களும் சாம்பலாகும்படி சிரித்த தலைவனே; (மருவலர் - பகைவர்);
மலைமகள் ஒருபால் மகிழ்வோனே - உமையை ஒரு பங்காக விரும்பியவனே;
மதி அணி சடையாய் - சடையில் சந்திரனை அணிந்தவனே;
அரையினில் அதள்மேல் வரி-அரவினை ஆர் பெருமானே - அரையில் புலித்தோலின்மேல் வரியுடைய பாம்பினைக் கட்டிய பெருமானே; (அதள் - தோல்); (ஆர்த்தல் - கட்டுதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment