Thursday, November 9, 2017

03.05.012 – பொது - இறப்பிலாய் உனதுயர்புகழ் - (வண்ணம்)

03.05.012 – பொது - இறப்பிலாய் உனதுயர்புகழ் - (வண்ணம்)


2006-10-08

3.5.12) புகழ் பாட அருள் (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தானன தனதன தனதன .. தனதான);

(அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும் - திருப்புகழ் - பழநி)


இறப்பி லாயுன துயர்புகழ் தனைநிதம் .. அடியேனும்

.. இழுக்கி லாவணம் இனிதுரை செயவரம் .. அருளாயே.

மறத்தை யேநினை மதியிலி தசமுகன் .. இசைபாடி

.. வழுத்து மாறொரு விரல்நுனி தனைஇறை .. இடுமீசா!

பறக்கு மூவெயி லவைபட எரிகணை .. தொடுவோனே!

.. பதத்தை நேடிய அரிஅயன் அயர்வுற .. வளர்சோதீ!

மறப்பி லாமுனி நிலைபெற மறலியை .. உதைகாலா

.. மதிக்கும் ஓரிட முடிதனில் அருளிய .. பெருமானே!


இறப்பு இலாய் உனது உயர் புகழ்தனை நிதம் அடியேனும் இழுக்கு இலாவணம் இனிது உரைசெய வரம் அருளாயே - என்றும் இறவாதவனே, உன் உயர்ந்த திருப்புகழை உன் அடியேன் நான் குற்றமில்லாதபடி தினமும் இனிதே சொல்ல வரம் அருள்வாயாக;

மறத்தையே நினை மதியிலி தசமுகன் இசை பாடி வழுத்துமாறு ஒரு விரல் நுனிதனை இறை இடும் ஈசா - தன் வலிமையையே எண்ணிய அறிவிலியான இராவணன் (கயிலையைப் பெயர்த்தபொழுது) உன்னை இசை பாடி வழிபடும்படி திருப்பாதத்தின் ஒரு விரலின் நுனியைச் சற்று ஊன்றிய ஈசனே; (மறம் - வலிமை); (தசமுகன் - இராவணன்); (இறை - கொஞ்சம்);

பறக்கும் மூ எயில் அவை பட எரிகணை தொடுவோனே - எங்கும் பறந்து திரிந்த முப்புரங்களும் அழிய எரிக்கின்ற கணையை எய்தவனே; (எயில் - கோட்டை); (படுதல் - அழிதல்);

பதத்தை நேடிய அரி அயன் அயர்வுற வளர் சோதீ - திருவடியையும் திருமுடியையும் தேடிய விஷ்ணுவும் பிரமனும் தளர்வாகும்படி ஓங்கிய சோதியே; (நேடுதல் - தேடுதல்); (சோதீ - சோதியே என்ற விளி);

மறப்பு இலா முனி நிலைபெற மறலியை உதை காலா - உன்னை என்றும் மறவாமல் வழிபட்ட முனிவரான மார்க்கண்டேயர் அழியாது நிலைபெறக் கூற்றுவனை உதைத்த காலனே; (மறலி - இயமன்);

மதிக்கும் ஓர் இடம் முடிதனில் அருளிய பெருமானே - பிறைச்சந்திரனுக்கும் உன் திருமுடியில் தங்க இடம் கொடுத்த பெருமானே; (மதி - திங்கள்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment