03.05.007 – பொது - பரவித் திருவடி துதியாது - (வண்ணம்)
2006-08-24
3.5.7 - பரவித் திருவடி துதியாது - (பொது)
-----------------------------------
(வண்ணவிருத்தம்;
தனனத் தனதன .. தனதான )
(அயிலொத் தெழுமிரு விழியாலே - திருப்புகழ் - மயிலாப்பூர்)
பரவித் திருவடி .. துதியாது,
... பதிகச் சுவைதனை .. அறியாது,
திரைசுற் றுலகினில் .. உழல்வேனும்
... தெருளுற் றிடவருள் .. புரியாயே;
அரவப் புனலடை .. சடையானே
... அரையிற் புலியுரி .. உடையானே;
இரவிற் றிருநடம் .. இடுவோனே;
... இகல்முப் புரமெரி .. பெருமானே.
பரவித் திருவடி துதியாது - உன் திருவடியைப் போற்றி வழிபடாமல்;
பதிகச் சுவைதனை அறியாது - தேவாரப் பதிகங்களின் சுவையை அறியாமல்;
திரை சுற்று உலகினில் உழல்வேனும் - கடல் சூழ்ந்த இவ்வுலகில் உழல்கின்ற நானும்; (திரை - கடல்; அலை); (சுற்றுதல் - சூழ்ந்திருத்தல்);
தெருள் உற்றிட அருள் புரியாயே - தெளிவு அடைய அருள்வாயாக; (தெருள் - அறிவின் தெளிவு; ஞானம்);
அரவப் புனல் அடை சடையானே - ஒலிக்கின்ற கங்கையைச் சடையில் அடைத்தவனே; (அரவம் - ஒலி);
அரையில் புலி உரி உடையானே - அரையில் புலித்தோலை உடையாக உடைய சுவாமியே; (உரி - தோல்); (உடையான் - சுவாமி); (உடை - ஆடை); (சுந்தரர் தேவாரம் - 7.5.9 - "ஊரும் காடு உடையும் தோலே ஓண காந்தன் தளியு ளீரே");
இரவில் திருநடம் இடுவோனே - நள்ளிருளில் கூத்தாடுபவனே;
இகல் முப்புரம் எரி பெருமானே - பகைத்த முப்புரங்களை எரித்த பெருமானே; (இகல்தல் - மாறுபடுதல்; பகைத்தல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment