03.05.008 – பொது - பெரிது மோதிடும் தொடர்-அவா - (வண்ணம்)
2006-08-24
3.5.8 - பெரிது மோதிடும் தொடர்-அவா - (பொது)
----------------------
(வண்ணவிருத்தம்;
தனன தானனந் தனன தானனந்
தனன தானனந் .. தனதான );
(அயில்வி லோசனங் குவிய வாசகம் - திருப்புகழ் - பொது)
பெரிது மோதிடுந் தொடர வாவதன்
.. .. பிடியி லேபடுந் .. துயரோடு
.. பிணிய தாய்வருங் கொடிய பாவமும்
.. .. பிரிய நானிலந் .. தனில்நாளும்
பிரிய மாயிரும் புகழை ஓதிடும்
.. .. பிணைய லாமருந் .. தமிழ்பாடிப்
.. பெரியர் கூடிடுங் கழலை ஓர்மனம்
.. .. பிறைய னேபரிந் .. தருளாயே
எரியு(ம்) மாயனுங் கடிய காலுமங்
.. .. கிணையும் ஓர்சரந் .. தொடுவீரா
.. இறைவ னேபெருங் கருணை யாயிரங்
.. .. கினிய னேஎனுஞ் .. சுரர்வாழக்
கரிய மாவிடஞ் சுவைகொள் நாவலின்
.. .. கனிய தேயெனும் .. படிமேவிக்
.. கறையு லாவிடுங் களமு ளாய்மணங்
.. .. கமழும் வேணியெம் .. பெருமானே.
பதம் பிரித்து:
பெரிது மோதிடும் தொடர் அவா அதன்
.. .. பிடியிலே படும் .. துயரோடு
.. பிணியதாய் வரும் கொடிய பாவமும்
.. .. பிரிய நானிலந்தனில் நாளும்
பிரியமாய் இரும் புகழை ஓதிடும்
.. .. பிணையல் ஆம் அரும் .. தமிழ் பாடிப்
.. பெரியர் கூடிடும் கழலை ஓர் மனம்,
.. .. பிறையனே, பரிந்து .. அருளாயே;
எரியும் மாயனும் கடிய காலும் அங்கு
.. .. இணையும் ஓர் சரம் .. தொடு வீரா;
.. "இறைவனே; பெரும் கருணையாய்; இரங்கு
.. .. இனியனே" எனும் .. சுரர் வாழக்,
கரிய மா விடம் சுவைகொள் நாவல் இன்
.. .. கனியதே எனும்படி மேவிக்,
.. கறை உலாவிடும் களம் உளாய்; மணம்
.. .. கமழும் வேணி எம் .. பெருமானே.
பெரிது மோதிடும் தொடர் அவா அதன் பிடியிலே படும் துயரோடு - மிகவும் தாக்குகின்ற முடிவற்ற ஆசையின் பிடியில் சிக்கிப் படுகின்ற துயரமும்;
பிணியதாய் வரும் கொடிய பாவமும் பிரிய - பந்தித்து வருகின்ற கொடிய வினைகளும் நீங்குமாறு;
நானிலந்தனில் நாளும் பிரியமாய் - இவ்வுலகில் என்றும் உனக்கு அன்பாகி;
இரும் புகழை ஓதிடும் பிணையல் ஆம் அரும் தமிழ் பாடிப் - உன் பெரிய புகழை ஓதுகின்ற மாலையான அரிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி; (இருமை - பெருமை); (பிணையல் - மலர்மாலை);
பெரியர் கூடிடும் கழலை ஓர் மனம், பிறையனே, பரிந்து அருளாயே - மகான்கள் அடையும் உன் திருவடியை எண்ணும் மனத்தைப், பிறையை அணிந்தவனே, எனக்கு இரங்கி அருள்வாயாக; (ஓர்தல் - நினைத்தல்);
எரியும் மாயனும் கடிய காலும் அங்கு இணையும் ஓர் சரம் தொடு வீரா - (முப்புரங்களை அழித்த நாளில்) அக்கினி, திருமால், விரைந்து செல்லும் வாயு இம்மூவரும் ஒன்றாகச் சேர்ந்த ஒப்பற்ற ஒரு கணையை எய்த வீரனே; (எரி - தீ); (மாயன் - திருமால்); (கடி - விரைவு); (கால் - காற்று); (அங்கு - அசை); (சம்பந்தர் தேவாரம் - 2.108.5 - "கடிய ஏற்றினர் கனலன மேனியர்");
"இறைவனே; பெரும் கருணையாய்; இரங்கு இனியனே" எனும் சுரர் வாழக் - "கடவுளே; பரம கருணாமூர்த்தியே; இனியவனே; இரங்குவாயாக" என்ற தேவர்கள் வாழுமாறு; (சுரர் - தேவர்);
கரிய மா விடம் சுவைகொள் நாவல் இன் கனியதே எனும்படி மேவிக், கறை உலாவிடும் களம் உளாய் - கரிய கொடிய நஞ்சைச் சுவைமிக்க இனிய நாவற்பழம் போல விரும்பி உண்டு, கறை விளங்கும் கண்டம் உடையவனே; (மேவுதல் - உண்ணுதல்; விரும்புதல்); (உலாவுதல் - பரவுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.105.9 - "கீழ்வேளூர் நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்");
மணம் கமழும் வேணி எம் பெருமானே - மணம் கமழும் சடையை உடைய எம்பெருமானே; (வேணி - சடை);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment