Thursday, November 2, 2017

03.05.005 – ஆரூர் (திருவாரூர்) - பாடாதே சீர் கேளாதே - (வண்ணம்)

 03.05.005 – ஆரூர் (திருவாரூர்) - பாடாதே சீர் கேளாதே - (வண்ணம்)


2006-08-21

3.5.5 - பாடாதே சீர் கேளாதே (ஆரூர் - திருவாரூர்)

------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானா தானா தானா தானா

தானா தானத் .. தனதான );

(கூசா தேபா ரேசா தேமால் - திருப்புகழ் - திருவாரூர்)

(பாலோ தேனோ பாகோ வானோர் - திருப்புகழ் - திருவாரூர்)


பாடா தேசீர் கேளா தேஊர்

.. .. பாரா தேகற் .. றவர்சீலர்

.. பாலா காதே தாள்நா டாதே

.. .. பாழே பாரிற் .. சுழலாமல்


வீடா நோய்தீர் வாய்மீ ளாவோர்

.. .. வீடே சேரற் .. கருளாயே

.. மேவார் மூவூர் ஓரே வாலே

.. .. வீழ்வீ ராகற் .. சிலையானே


தோடோர் காதா நூலார் மார்பா

.. .. தூயா நீரைப் .. புனைவோனே

.. தூமா வீயே ஏவாம் வேள்காய்

.. .. சூலா தோளெட் .. டுடையானே


ஓடார் ஊணா டீசா சேமேல்

.. .. ஊரூ ராகத் .. திரிவோனே

.. ஓவா தேதே னார்கா வார்ஆ

.. .. ரூரா வேணிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பாடாதே சீர் கேளாதே, ஊர்

.. .. பாராதே, கற்றவர் சீலர்

.. பால் ஆகாதே, தாள் நாடாதே,

.. .. பாழே பாரிற் சுழலாமல்,


வீடா நோய் தீர்வு ஆய், மீளா ஓர்

.. .. வீடே சேரற்கு அருளாயே;

.. மேவார் மூ ஊர் ஓர் ஏவாலே

.. .. வீழ் வீரா; கற்சிலையானே;


தோடு ஓர் காதா; நூல் ஆர் மார்பா;

.. .. தூயா; நீரைப் புனைவோனே;

.. தூ மா வீயே ஏ ஆம் வேள் காய்

.. .. சூலா; தோள் எட்டு உடையானே;


ஓடு ஆர் ஊண் நாடு ஈசா; சேமேல்

.. .. ஊரூராகத் திரிவோனே;

.. ஓவாதே தேன் ஆர் கா ஆர்

.. .. ஆரூரா; வேணிப் பெருமானே.


பாடாதே சீர் கேளாதே, ஊர் பாராதே, கற்றவர் சீலர் பால் ஆகாதே, தாள் நாடாதே, பாழே பாரில் சுழலாமல் - உன் புகழைப் பாடாமல், உன் புகழைக் கேளாமல், உன் தலங்களைத் தரிசனம் செய்யாமல், உன்னை ஓதக் கற்ற சீலர்களை (அடியவர்களை) அடையாமல், உன் திருவடியை நாடாமல், வீணே உலகில் அலையாமல்; (பால் - பக்கம்);


வீடா நோய் தீர்வு ஆய், மீளார் வீடே சேரற்கு ருளாயே - நீங்காத நோய் நீங்கி, மீண்டும் பூமியில் பிறவி அடையாதபடி ஒப்பற்ற முக்தியே அடைவதற்கு அருள்வாயாக; (வீடுதல் - நீங்குதல்); (தீர்வு - நீங்குதல்); (ஓர் - ஒப்பற்ற); (வீடு - முக்தி);


மேவார் மூர் ஓர் ஏவாலே வீழ் வீரா - பகைர்களது (அசுரர்களது) முப்புரங்களை ஒரு கணையால் வீழ்த்திய விரனே; (மேவார் - பகைவர்); (- அம்பு); (வீழ்த்தல் - விழச்செய்தல்);

கற்சிலையானே - அப்படிப் போர்செய்ய மேருமலையை வில்லாக ஏந்தியவனே; (கல் - மலை); (சிலை - வில்);


தோடு ஓர் காதா - ஒரு செவியில் தோடு அணிந்தவனே;

நூல் ஆர் மார்பா - மார்பில் பூணூலை அணிந்தவனே;

தூயா - தூயனே;

நீரைப் புனைவோனே - கங்காதரனே;

தூ மா வீயேம் வேள் காய் சூலா - தூய மாம்பூவே அம்பு ஆகும் மன்மதனை எரித்த சூலபாணியே; (வீ - பூ) (வேள் - காமன்); (காய்தல் - எரித்தல்);

தோள் எட்டுடையானே - எட்டுப் புஜங்களை உடையவனே;


டு ஆர் ஊண் நாடு ஈசா - மண்டையோட்டில் பெற்ற உணவை விரும்பும் ஈசனே; (ஓடு - மண்டையோடு); (ஆர்தல் - உண்ணுதல்; பெறுதல்); (ஊண் - உணவு); (நாடுதல் - விரும்புதல்);

சேமேல் ஊரூராகத் திரிவோனே - இடபத்தின்மேல் ஏறிப் பல ஊர்களில் (பிச்சைக்கு) உழல்பவனே;

வாதே தேன் ஆர் கா ர் ஆரூரா - எப்பொழுதும் வண்டுகள் ஒலிக்கின்ற சோலை நிறைந்த திருவாரூரில் எழுந்தருளியவனே; (ஓவுதல் - முடிதல்; நீங்குதல்); (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (கா - சோலை);

வேணிப் பெருமானே - சடையை உடைய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment