03.05.016 – இடைமருதூர் - தொடர்வினைகள் அழிவாகி - (வண்ணம்)
2007-03-09
3.5.16) தமிழ்மாலை இடு நேயம் அருளாய் (இடைமருதூர் - திருவிடைமருதூர்)
--------------------------------
(வண்ணவிருத்தம்;
"தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான .. தனதான" என்ற சந்தக்குழிப்பு );
(சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான - திருப்புகழ் - சிதம்பரம்)
தொடர்வினைகள் அழிவாகி .. எமபடர்கள் அணுகாத
.. .. சுகநிலையை அடியேனும் .. உறுமாறே
.. தொழுதுநிதம் மணநாறு .. மொழிவிரவு தமிழ்மாலை
.. .. துணையடியில் இடுநேயம் .. அருளாயே
சுடலைதனில் நடமாடும் .. உனதடியை நினைமாணி
.. .. துயரமுற வருகாலன் .. அவன்மார்பில்
.. சுமமனைய அடிவீசி .. அவனுயிரை அழிகால
.. .. சுடுபொடியை விரைபோல .. அணிவோனே
விடவரவு கயிறாக .. இருபுறமும் இழுநாளில்
.. .. மிகவுமெரி செயுமாலம் .. வரவாடும்
.. விணவரமு தினையார .. அருளிவிடம் மணியாகி
.. .. மிடறுதனில் ஒளிவீச .. இடுவோனே
படமுடைய இளநாகம் .. மதிகுரவ மலராறு
.. .. படர்சடையில் உடனாக .. உடையானே
.. பருமதில்கள் அவைசூழும் .. இடைமருதில் ஒருகூறு
.. .. பவளவிதழ் உமையான .. பெருமானே.
தொடர்வினைகள் அழிவாகி எமபடர்கள் அணுகாத சுகநிலையை அடியேனும் உறுமாறே - என்னைத் தொடரும் வினைகள் எல்லாம் அழிந்து, எமதூதர்கள் என்னை நெருங்காத இன்பநிலையை நானும் அடையும்படி;
தொழுது நிதம் மணம் நாறு மொழி விரவு தமிழ்மாலை துணையடியில் இடு நேயம் அருளாயே - உன்னை வணங்கித் தினமும் மணம் கமழும் சொற்கள் பொருந்திய தமிழ்ப்பாமாலைகளை உன் இரு திருவடிகளில் இடுகின்ற அன்பை அருள்வாயாக; (மொழி - சொல்); (விரவுதல் - கலத்தல்; பொருந்துதல்);
சுடலைதனில் நடமாடும் உனது அடியை நினை மாணி துயரம் உற வரு காலன்அவன் மார்பில் சுமம் அனைய அடி வீசி அவன் உயிரை அழி கால - சுடுகாட்டில் கூத்தாடும் உன் திருவடியைத் தியானித்த மார்க்கண்டேயர் மனம் கலங்கும்படி வந்த காலனது மார்பில் பூப் போன்ற உன் பாதத்தை வீசிக் காலனைக் கொன்ற காலனே; (மாணி - மார்க்கண்டேயர்); (சுமம் - பூ);
சுடுபொடியை விரைபோல அணிவோனே - சுட்ட சாம்பலை வாசனைப்பொடி போலப் பூசியவனே; (விரை - வாசனைப்பண்டம்; கலவைச்சாந்து); (சம்பந்தர் தேவாரம் - 3.54.3 - "வெந்த சாம்பல் விரையெனப் பூசியே");
விட அரவு கயிறாக இருபுறமும் இழு நாளில் மிகவும் எரி செயும் ஆலம் வர வாடும் விணவர் அமுதினை ஆர அருளி - (பாற்கடலைக் கடைய) வாசுகி என்ற விஷநாகத்தை ஒரு கயிறாகக் கொண்டு இருபக்கமும் இழுத்த பொழுது, மிகவும் சுட்டெரிக்கும் ஆலகால விஷம் எழுந்ததால் வாடிய தேவர்கள் அமுதத்தை உண்ண அருள்செய்து; (விணவர் - விண்ணவர் - இடைக்குறை); (ஆர்தல் - உண்ணுதல்);
விடம் மணி ஆகி மிடறுதனில் ஒளி வீச இடுவோனே - ஆலகால விடம் ஒரு மணி போலக் கண்டத்தில் ஒளி வீசுமாறு வைத்தவனே;
படம் உடைய இளநாகம் மதி குரவ மலர் ஆறு படர்சடையில் உடனாக உடையானே - படம் உடைய இளம் பாம்பையும், சந்திரனையும், குராமலரையும், கங்கையையும் படர்ந்த சடையின்மேல் சேர்ந்திருக்குமாறு சூடியவனே;
பருமதில்கள் அவை சூழும் இடைமருதில் ஒரு கூறு பவளவிதழ் உமை ஆன பெருமானே - பெரிய மதில்களால் சூழப்பெற்ற திருவிடைமருதூரில் பவளம்போல் சிவந்த வாயை உடைய உமை ஒரு பாகமான பெருமானே. (பருமை - பருத்திருக்கை. பெருமை); (பவள இதழ் - பவளம்போல் சிவந்த உதடு);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment