Thursday, November 23, 2017

03.05.020 – ஆரூர் - செலவு செயப்பணம் அதனை நினைத்தனு - (வண்ணம்)

03.05.020 – ஆரூர் - செலவு செயப்பணம் அதனை நினைத்தனு - (வண்ணம்)

2007-03-16

3.5.20 - செலவு செயப் பணம் - (ஆரூர் - திருவாரூர்)

------------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தனத்தன தனன தனத்தன

தனன தனத்தன தனன தனத்தன

தனன தனத்தன தனன தனத்தன .. தனதான)

(இதனைத் - தனதன தத்தன தனதன தத்தன x 3 + தனதான - என்றும் நோக்கலாம்)

(குருவி யெனப்பல கழுகு நரித்திரள் - திருப்புகழ் - திருத்தணிகை)

(பலபல தத்துவ மதனையெ ரித்திருள் - திருப்புகழ் - திருவெண்ணெய்நல்லூர்)


செலவு செயப்பணம் அதனை நினைத்தனு

.. .. தினமு மலைப்புறு மனமும் உனைத்தொழு

.. .. செயலை நயப்புறு நலனை எனக்கருள் .. புரியாயே

.. திலக வதிக்கென இளைய வருக்கொரு

.. .. வலியை அளித்தவர் உனது கழற்புகழ்

.. .. செகமும் உயச்சொல அரிய திருப்பெயர் .. தருவோனே


உலக மயக்குகள் ஒழிய உனைத்தொழு

.. .. துருகி அழைத்திடும் அடியர் வழுத்திடும்

.. .. ஒருவ அவர்க்குயர் நிலையை அளித்திடும் .. அருளாளா

.. உடைய தெனப்புலி அதளை உடுத்தழல்

.. .. உமிழும் அரக்கயி றரையில் அசைத்தணி

.. .. உமையை இடத்தினில் மகிழும் அருத்தியை .. உடையானே


மலையை எடுத்திடு மதியி லரக்கனை

.. .. வரையின் மிசைத்திரு விரலின் நெரித்தவன்

.. .. மறுகி இசைத்தடி பரவ விடுத்தொரு .. படையீவாய்

.. மணியை அடித்திடு பசுவின் வழக்கினில்

.. .. முறையை அளித்திட அரசு நடத்திய

.. .. மனுவின் மகற்குயிர் அருளும் மதிச்சடை .. யுடையாரூர்த்


தலைவ வனத்தினில் விசயன் விருப்பொடு

.. .. தவம தியற்றியொர் விறலை உடைப்படை

.. .. தருக எனத்தொழ அதனை அளித்திடும் .. ஒருவேடா

.. தருவின் அடித்தவர் அறிய இருக்குரை

.. .. தருமம் விரித்திடு குரவ மயக்கிடு

.. .. சரம துகைத்திடு மதனை விழித்தடு .. பெருமானே.


பதம் பிரித்து:

செலவு செயப் பணம்-அதனை நினைத்து அனு

.. .. தினமும் அலைப்புறு மனமும் உனைத் தொழு

.. .. செயலை நயப்புறு நலனை எனக்கு அருள் .. புரியாயே;

.. திலகவதிக்கு என இளையவருக்கு ஒரு

.. .. வலியை அளித்து, அவர் உனது கழற்புகழ்

.. .. செகமும் உயச் சொல, அரிய திருப்பெயர் .. தருவோனே;


உலக மயக்குகள் ஒழிய உனைத் தொழுது

.. .. உருகி அழைத்திடும் அடியர் வழுத்திடும்

.. .. ஒருவ; அவர்க்கு உயர்-நிலையை அளித்திடும் .. அருளாளா;

.. உடையது எனப் புலி-அதளை உடுத்து, அழல்

.. .. உமிழும் அரக்-கயிறு அரையில் அசைத்து, அணி

.. .. உமையை இடத்தினில் மகிழும் அருத்தியை .. உடையானே;


மலையை எடுத்திடு மதி-இல் அரக்கனை

.. .. வரையின்மிசைத் திருவிரலின் நெரித்து, அவன்

.. .. மறுகி இசைத்து அடி பரவ, விடுத்து ஒரு .. படை ஈவாய்;

.. மணியை அடித்திடு பசுவின் வழக்கினில்

.. .. முறையை அளித்திட அரசு நடத்திய

.. .. மனுவின் மகற்கு உயிர் அருளும் மதிச்சடையுடை ஆரூர்த்


தலைவ; வனத்தினில் விசயன் விருப்பொடு

.. .. தவமது இயற்றி, "ஒர் விறலையுடைப் படை

.. .. தருக" எனத் தொழ, அதனை அளித்திடும் .. ஒரு வேடா;

.. தருவின்-அடித் தவர் அறிய இருக்கு உரை

.. .. தருமம் விரித்திடு குரவ; மயக்கிடு

.. .. சரமது உகைத்திடு மதனை விழித்து அடு .. பெருமானே.


செலவு செயப் பணம் அதனை நினைத்து அனுதினமு மலைப்புறு மனமும் உனைத் தொழு செயலை நயப்புறு நலனை எனக்கு அருள் புரியாயே - செலவு செய்யப் பணத்தையே எண்ணித் தினமும் மயங்கிக் கலங்கும் என் மனமும் உன்னை வழிபடுவதை விரும்பும் நன்மையை எனக்கு அருள்வாயாக; (தினமுமலைப்புறு = தினமும் மலைப்புறு & தினமும் அலைப்புறு); (மலைப்பு - அறிவுமயக்கம்); (அலைப்பு - வருத்தம்); (நயப்பு - அன்பு; விருப்பம்); (நலன் - நலம் - நன்மை);

திலகவதிக்கு என இளையவருக்கு ஒரு வலியை அளித்து, வர் உனது கழற்புகழ் செகமும் உயச் சொல அரிய திருப்பெயர் தருவோனே - திலகவதியாரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து அவர் தம்பியார்க்குச் சூலைநோயைத் தந்து, பின் அவர் உனது திருவடிப்புகழை உலகும் உய்யுமாறு பாடக் கேட்டு, அவருக்குத் திருநாவுக்கரசர் என்ற அரிய திருப்பெயரைத் தந்தவனே; (செகம் - உலகம்); (உய - உய்ய - இடைக்குறை);


உலக மயக்குகள் ஒழிய உனைத் தொழுதுருகி அழைத்திடும் டியர் வழுத்திடும் ஒருவ - அவர்க்குயர் நிலையை அளித்திடும் அருளாளா - உலக மயக்கங்கள் எல்லாம் நீங்கும்படி உன்னை உருகிப் போற்றி அழைக்கும் பக்தர்களால் துதிக்கப்படும் ஒப்பற்றவனே; (ஒருவ - ஒருவனே - ஒப்பற்றவனே);

உடை-அது எனப் புலி அதளை உடுத்து, ழல் உமிழும் அரக் கயிறு அரையில் அசைத்து, ணி உமையை இடத்தினில் மகிழும் அருத்தியை உடையானே - ஆடையாகப் புலித்தோலை அணிந்து, சீறுகின்ற பாம்பை அரைநாணாகக் கட்டி, அழகிய உமையை இடப்பக்கம் ஒரு கூறாக விரும்பிய அன்பு உடையவனே; (அதள் - தோல்); (அர - பாம்பு); (அசைத்தல் - கட்டுதல்); (அணி - அழகு); (அருத்தி - அன்பு);


மலையை எடுத்திடு மதி இல் அரக்கனை வரையின்மிசைத் திருவிரலின் நெரித்து, வன் மறுகி இசைத்து அடி பரவ, விடுத்து ஒரு படைவாய் - கயிலைமலையை எடுத்த அறிவற்ற அரக்கனான இராவணனை அம்மலையின்மேல் (ஊன்றிய) ஒரு விரலினால் நசுக்கிப், பின் அவன் மனம் கலங்கி இசைபாடித் திருவடியை வழிபடக் கண்டு, அவனைப் போகவிட்டு அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளை அளித்தவனே; (வரை - மலை); (மறுகுதல் - மனம் கலங்குதல்); (விரலின் - விரலினால்); (விடுத்தல் - போகவிடுதல்); (படை - ஆயுதம்);

மணியை அடித்திடு பசுவின் வழக்கினில் முறையை அளித்தி அரசு நடத்திய மனுவின் மகற்குயிர் அருளும் மதிச்சடையுடைரூர்த் தலைவ - ஆராய்ச்சிமணியை அடித்த பசுவின் வழக்கில் நீதி அளித்திடுமாறு செங்கோல் பிறழாமல் ஆட்சி செய்த அரசன் மனுநீதிச்சோழன் மகனுக்கு மீண்டும் உயிர்கொடுத்த, சந்திரனைச் சடையில் அணிந்த, திருவாரூர்த் தலைவனே; (முறை - இராசநீதி); (மனு - மனுநீதிச்சோழன்)


வனத்தினில் வியன் விருப்பொடு தவம் அது இயற்றி, "ர் விறலை உடைப் படை தருக" எனத் தொழ, அதனை அளித்திடும் ஒரு வேடா - காட்டில் அருச்சுனன் விரும்பித் தவம் செய்து, "ஒப்பற்ற வெற்றியையுடைய பாசுபதாஸ்திரத்தை வரம் அருள்க" என்று வேண்ட, அதனை அவனுக்கு அளித்த வேடனே; (விசயன் - விஜயன் - அர்ஜுனன்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல்; - ஒப்பற்ற); (விறல் - வெற்றி; வலிமை; பெருமை);

தருவின்அடித் தவர் அறிய இருக்குரை தருமம் விரித்திடு குரவ - கல்லால மரத்தின்கீழ்ச் சனகாதி முனிவர்களுக்கு வேதங்கள் சொல்லும் தர்மத்தை விளக்கிய குருவே; (தரு - மரம்); (தவர் - தவசிகள்); (இருக்கு - வேதம்); (விரித்தல் - விளக்குதல்); (குரவன் - குரு);

மயக்கிடு சரம்-அது உகைத்திடு மதனை விழித்து அடு பெருமானே - மனத்தை மயக்கும் மலர்க்கணை தொடுத்த மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்து எரித்த பெருமானே; (சரம் - அம்பு); (உகைத்தல் - செலுத்துதல்); (மதன் - மன்மதன்); (அடுதல் - அழித்தல்; கொல்லுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment