03.05.006 – பொது - சேந்தன் உதிக்க விழித்தவன் - (வண்ணம்)
2006-08-21
3.5.6 - சேந்தன் உதிக்க விழித்தவன் - (பொது)
---------------------------------------
(வண்ணவிருத்தம்;
தாந்தன தத்தன தத்தன தத்தன
தாந்தன தத்தன தத்தன தத்தன
தாந்தன தத்தன தத்தன தத்தன .. தனதான );
(கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள் - திருப்புகழ் - திருத்தணிகை )
சேந்தனு திக்கவி ழித்தவன் உத்தமி
... சேர்ந்தஇ டத்தினன் எய்த்தடி யைத்தொழு
... தேய்ந்தம திக்கருள் வித்தகன் நச்சர .. வணிமார்பன்
ஆர்ந்தவி டத்தைமி டற்றினில் வைத்தவன்
... ஆங்கிரு வர்க்கறி தற்கரு நற்சுடர்
... ஆண்பெண லிக்குணம் உற்றவன் அற்புதன் .. எருதேறும்
வேந்தன ருட்கழல் அற்றவர் பற்றிட
... வேண்டுவ ரத்தைய ளிப்பவன் நற்புனல்
... வீழ்ந்தச டைப்பரன் வெற்பைவ ளைத்தெயில் .. எரிமூழ்கி
மாய்ந்துந சித்திட நக்கவன் நித்தியன்
... மாண்டவர் அக்கணி பெற்றியன் இற்பலி
... வாங்கந டப்பவன் அத்தன டித்தல(ம்) .. மறவேனே.
பதம் பிரித்து:
சேந்தன் உதிக்க விழித்தவன்; உத்தமி
... சேர்ந்த இடத்தினன்; எய்த்து அடியைத் தொழு
... தேய்ந்த மதிக்கு அருள் வித்தகன்; நச்சரவு அணி மார்பன்;
ஆர்ந்த விடத்தை மிடற்றினில் வைத்தவன்;
... ஆங்கு இருவர்க்கு அறிதற்கு அரு-நற்சுடர்;
... ஆண் பெண் அலிக் குணம் உற்றவன்; அற்புதன்; எருது ஏறும்
வேந்தன்; அருட்கழல் அற்றவர் பற்றிட
... வேண்டு வரத்தை அளிப்பவன்; நற்புனல்
... வீழ்ந்த சடைப்பரன்; வெற்பை வளைத்து எயில் எரி மூழ்கி
மாய்ந்து நசித்திட நக்கவன்; நித்தியன்;
... மாண்டவர் அக்கு அணி பெற்றியன்; இற்பலி
... வாங்க நடப்பவன்; அத்தன் அடித்தலம் மறவேனே.
சேந்தன் உதிக்க விழித்தவன் - முருகன் தோன்றுமாறு நெற்றிக்கண்ணைத் திறந்தவன்; (சேந்தன் - முருகன்);
உத்தமி சேர்ந்த இடத்தினன் - திருமேனியில் இடப்பக்கம் உமையை ஒரு பாகமாக உடையவன்;
எய்த்து அடியைத் தொழு தேய்ந்த மதிக்கு அருள் வித்தகன் - சாபத்தால் தேய்ந்து வருந்தித் திருவடியை வணங்கிய திங்களுக்கு அருளியவன்; (வித்தகன் - பேரறிவாளன்; வல்லவன்);
நச்சரவு அணி மார்பன் - மார்பில் விஷம் பொருந்திய நாகப்பாம்பை அணிந்தவன்;
ஆர்ந்த விடத்தை மிடற்றினில் வைத்தவன் - உண்ட ஆலகால நஞ்சைக் கண்டத்தில் வைத்தவன்; (ஆர்தல் - உண்ணுதல்); (மிடறு - கண்டம்);
ஆங்கு இருவர்க்கு அறிதற்கு அரு-நற்சுடர் - முன்பு திருமாலாலும் பிரமனாலும் அறிய ஒண்ணாத அரிய நல்ல ஜோதி; (ஆங்கு - அசையாகவும் கொள்ளலாம்);
ஆண் பெண் அலிக் குணம் உற்றவன் - ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் உள்ளவன்; (ஆண்பெணலி - ஆண்பெண்ணலி என்பது சந்தம் கருதி ஆண்பெணலி என்று வந்தது);
அற்புதன் - மிக அதிசயன்; வியத்தகு தன்மைகள் உடையவன்;
எருது ஏறும் வேந்தன் - இடப வாகனம் உடைய அரசன்;
அருட்கழல் அற்றவர் பற்றிட வேண்டு வரத்தை அளிப்பவன் - அருள் மிக்க திருவடியைச் சரணடைந்த பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் கொடுப்பவன்;
நற்புனல் வீழ்ந்த சடைப்பரன் - சடையில் கங்கையைத் தாங்கிய பரமன்; (புனல் - நீர்; நதி);
வெற்பை வளைத்து எயில் எரி மூழ்கி மாய்ந்து நசித்திட நக்கவன் - மேருமலையை வில்லாக வளைத்து, முப்புரங்களும் தீயில் மூழ்கி சாம்பலாகி அழியும்படி சிரித்தவன்; (வெற்பு - மலை); (எயில் - கோட்டை); (மாய்ந்து நசித்திட – ஒருபொருட்பன்மொழி); (நகுதல் - சிரித்தல்);
நித்தியன் - அழிவற்றவன்;
மாண்டவர் அக்கு அணி பெற்றியன் - இறந்தவர்களது எலும்பை அணியும் பெருமை உடையவன்; (அக்கு - எலும்பு); (பெற்றி - பெருமை; தன்மை);
இற்பலி வாங்க நடப்பவன் - பல இல்லங்களில் பிச்சையேற்கத் திரிபவன்; (இல் - வீடு); (பலி - பிச்சை); (வாங்குதல் - ஏற்றல்);
அத்தன் அடித்தலம் மறவேனே - அனைவர்க்கும் தந்தையாகிய சிவபெருமானது திருவடியை நான் மறவாது வழிபடுவேன்; (அத்தன் - தந்தை);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment