03.05.021 – கோயில் (சிதம்பரம்) - தீங்கையே புரி வஞ்சமனம் - (வண்ணம்)
2007-03-17
3.5.21 – தீங்கையே புரி வஞ்சமனம் (கோயில் - சிதம்பரம்)
--------------------------------
(வண்ணவிருத்தம்;
தாந்த தானன தந்தன தந்தன
தாந்த தானன தந்தன தந்தன
தாந்த தானன தந்தன தந்தன .. தந்ததான );
(கூந்த லாழவி ரிந்துச ரிந்திட -- திருப்புகழ் - சிதம்பரம்)
தீங்கை யேபுரி வஞ்சம னங்கழல்
... ஆய்ந்தி டாதது செந்தமி ழின்சுவை
... தேர்ந்து பாடிடும் அன்பது தந்தருள் .. எம்பிரானே
தாங்கொ ணாதவி டந்தனை உண்டிருள்
... தாங்கு மாமிட றும்பொடி யும்பணி
... தாங்கு மேனியும் அஞ்சடை யுந்திகழ் .. அண்டவாணா
ஆங்கு மாலயன் அஞ்சிவ ணங்கிட
... ஓங்கு தீயென நின்றப ரம்பர
… ஆன்ற மாணியி ருந்திட அந்தனை .. வென்றபாதா
நீங்கி டாதுமை மங்கையு டன்திகழ்
... பாங்க தூயகு ளந்தனில் அங்கயல்
... நீந்த ஆடக மன்றின டம்புரி .. கின்றகோனே.
பதம் பிரித்து:
தீங்கையே புரி வஞ்ச மனம் கழல்
... ஆய்ந்திடாது; அது செந்தமிழ் இன்சுவை
... தேர்ந்து பாடிடும் அன்பது தந்து அருள் எம்பிரானே;
தாங்கொணாத விடந்தனை உண்டு இருள்
... தாங்கு மாமிடறும் பொடியும் பணி
... தாங்கு மேனியும் அம் சடையும் திகழ் அண்டவாணா;
ஆங்கு மால் அயன் அஞ்சி வணங்கிட
... ஓங்கு தீ என நின்ற பரம்பர;
… ஆன்ற மாணி இருந்திட அந்தனை வென்ற பாதா;
நீங்கிடாது உமை மங்கை உடன் திகழ்
... பாங்க; தூய; குளந்தனில் அம் கயல்
... நீந்த, ஆடக மன்றில் நடம் புரிகின்ற கோனே.
தீங்கையே புரி வஞ்ச மனம் கழல் ஆய்ந்திடாது - தீமையையே விரும்பும் (/ செய்யும்) வஞ்சம் மிக்க என் மனம் உன் திருவடியை எண்ணாது; (தீங்கு - தீமை); (புரிதல் - செய்தல் விரும்புதல்); (ஆய்தல் - ஆராய்தல்; சிந்தித்தல்);
அது செந்தமிழ் இன்சுவை தேர்ந்து பாடிடும் அன்பது தந்து அருள் எம்பிரானே - அத்தகைய என் மனமானது தேவாரம் முதலிய செந்தமிழ்ப் பாமாலைகளின் இனிய சுவையை அறிந்து உன்னைப் பாடும் அன்பைக் கொடுத்து அருள்க எம்பெருமானே; (தேர்தல் - அறிதல்);
தாங்கொணாத விடந்தனை உண்டு இருள் தாங்கு மா மிடறும், பொடியும் பணி தாங்கு மேனியும், அம் சடையும் திகழ் அண்டவாணா - எவராலும் பொறுத்தற்கு அரிய ஆலகால விடத்தை உண்டு அதனால் கருமை திகழும் அழகிய கண்டத்தையும், திருநீற்றையும் பாம்பையும் அணிந்த திருமேனியையும், அழகிய சடையையும் உடைய கடவுளே; (தாங்கொணாத - தாங்க ஒண்ணாத); (மா - அழகு); (மிடறு - கண்டம்); (பொடி - நீறு; இங்கே "நீறும்" - உம்மைத்தொகை); (பணி - நாகப்பாம்பு); (அம் - அழகு); (அண்டவாணன் - அனைத்துலக நாதன்);
ஆங்கு மால் அயன் அஞ்சி வணங்கிட ஓங்கு தீ என நின்ற பரம்பர – முன்பு திருமாலும் பிரமனும் (அடிமுடி தேடிக் காணாது) அஞ்சி வணங்கும்படி எல்லையின்றி ஓங்கிய ஜோடி வடிவில் நின்ற பரம்பரனே; (ஆங்கு - அவ்விடம்; அன்று; அசைச்சொல்)
ஆன்ற மாணி இருந்திட அந்தனை வென்ற பாதா - மாட்சிமையுடைய மார்க்கண்டேயர் சாவாமல் என்றும் இருக்குமாறு, காலனை உதைத்து அழித்த திருவடியினனே; (ஆன்ற – மாட்சிமையுடைய); (அந்தன் - யமன்);
நீங்கிடாது உமை மங்கை உடன் திகழ் பாங்க - உமாதேவி பிரியாமல் எப்போது உடனாக இருக்கும் உமாபதியே; (பாங்கன் - கணவன்); (பாங்கு - பக்கம்);
தூய - தூயனே;
குளந்தனில் அம் கயல் நீந்த, ஆடக மன்றில் நடம் புரிகின்ற கோனே - குளத்தில் அழகிய கயல்மீன்கள் நீந்தப், பொன்னம்பலத்தில் திருநடம் செய்கின்ற அரசனே; (ஆடகம் - பொன்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment