Wednesday, November 8, 2017

03.05.011 – பொது - அரக்கன் வன்புயம் இருபது முரிதர - (வண்ணம்)

03.05.011 – பொது - அரக்கன் வன்புயம் இருபது முரிதர - (வண்ணம்)

2006-09-07

3.5.11 - அரக்கன் வன்புயம் இருபது முரிதர - (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன .. தனதான )

(உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


அரக்கன் வன்புய மிருபது(ம்) முரிதர

.. அடர்த்த வன்பிற கவனர கரவென

.. அடித்த லந்தொழ ஒளிமலி படைதரும் .. ஒருதேவன்

சிரத்தில் வெண்பிறை மதிநதி அரவொடு

.. செழித்த கொன்றையு மணிபவன் அயனரி

.. திகைக்க வெந்தழ லெனவெழு பெரியவன் .. அடையாதார்

புரத்தை முன்பொரு நகைகொடு சுடுமிறை

.. புடைத்து வெங்கரி தனையுரி பரனுயர்

.. பொருப்பன் மங்கையை ஒருபுடை தனிலுடை .. மணவாளன்

இரக்கும் அன்பர்கள் விழைவன அருள்பவன்

.. எரித்த நஞ்சது மணியென நிலைபெற

.. எடுத்த ருந்திய சிவனடி அனுதின(ம்) .. நினைவேனே.


பதம் பிரித்து:

அரக்கன் வன்புயம் இருபதும் முரிதர

.. அடர்த்தவன்; பிறகு, அவன் "அரகர" என

.. அடித்தலம் தொழ ஒளி மலி படை தரும் ஒரு தேவன்;

சிரத்தில் வெண்பிறை, மதி, நதி, அரவொடு,

.. செழித்த கொன்றையும் அணிபவன்; அயன் அரி

.. திகைக்க வெந்தழல் என எழு பெரியவன்; அடையாதார்

புரத்தை முன்பு ஒரு நகைகொடு சுடும் இறை;

.. புடைத்து வெங்கரிதனை உரி பரன்; உயர்

.. பொருப்பன் மங்கையை ஒரு-புடைதனிலுடை மணவாளன்;

இரக்கும் அன்பர்கள் விழைவன அருள்பவன்;

.. எரித்த நஞ்சது மணி என நிலைபெற

.. எடுத்து அருந்திய சிவன் அடி அனுதினம் நினைவேனே.


அரக்கன் வன் புயம் இருபதும் முரிதர அடர்த்தவன் - இராவணனது வலிய இருபது புஜங்களும் முரியும்படி நசுக்கியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.82.7 – “வன்புயத்த அத் தானவர் புரங்களை எரியத்” - வலிய தோள்களை உடைய அந்த அவுணர்தம் புரங்கள் எரியுமாறு);

பிறகு அவன் "அரகர" என அடித்தலம் தொழ, ஒளி மலி படை தரும் ஒரு தேவன் - பின்னர், இராவணன் "ஹரஹர" என்று போற்றித் திருவடியை வழிபடவும், இரங்கி, ஒளிவீசும் சந்திரஹாஸம் என்ற வாளை அவனுக்கு அருள்செய்த ஒப்பற்ற தேவன்;

சிரத்தில் வெண்பிறை மதி நதி அரவொடு செழித்த கொன்றையும் அணிபவன் - தலைமேல் வெண்-பிறைச்சந்திரனையும், கங்கையையும், பாம்பையும் செழுமையான கொன்றைமலரையும் சூடியவன்;

அயன் அரி திகைக்க வெந்தழல் என எழு பெரியவன் - விஷ்ணுவும் பிரமனும் அடிமுடி தேடித் திகைக்குமாறு பெரும் சோதியாக ஓங்கிய பெரியவன்;

அடையாதார் புரத்தை முன்பு ஒரு நகைகொடு சுடும் இறை - பகைவர்களது முப்புரங்களை முற்காலத்தில் ஒரு சிரிப்பினால் எரித்த இறைவன்;

புடைத்து வெங்கரிதனை உரி பரன் - கொடிய யானையோடு போரிட்டு அதன் தோலை உரித்த பரமன்; (புடைத்தல் - அடித்தல்);

உயர் பொருப்பன் மங்கையை ஒரு புடைதனிலுடை மணவாளன் - மலையான் மகளைத் தன் திருமேனியில் ஒரு பக்கத்தில் உடையவன்; (பொருப்பு - மலை); ("உயர் பொருப்பன் - கயிலைமலையில் உறையும் ஈசன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

இரக்கும் அன்பர்கள் விழைவன அருள்பவன் - யாசிக்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களை அருள்பவன்;

எரித்த நஞ்சுஅது மணி என நிலைபெற எடுத்து அருந்திய சிவன் அடி அனுதினம் நினைவேனே - எல்லாவற்றையும் சுட்டெரித்த ஆலகால விஷமானது நீலமணியாக என்றும் நிலைத்திருக்கும்படி அதனை எடுத்து உண்ட சிவபெருமானது திருவடியை நான் நாள்தோறும் நினைப்பேன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment