03.05.014 – பொது - உனதடி யிணைக்கு நானும் - (வண்ணம்)
2006-10-20
3.5.14) ஞானம் அருள்வாய் (பொது)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனதன தனத்த தான .. தனதன தனத்த தான
தனதன தனத்த தான .. தனதானா)
(மனையவள் நகைக்க ஊரின் - திருப்புகழ் - ஞானமலை)
(அருவரை யெடுத்த வீரன் - திருப்புகழ் - வயிரவிவனம்)
உனதடி யிணைக்கு நானும் .. அருமலர் தொடுத்த மாலை
.. .. உறுதமிழ் மணக்க நாளும் .. இடுமாறே
.. உருகிடு மனத்த னாகி .. இருவினை இருப்பி லாத
.. .. உயர்நிலை அளிக்கும் ஞானம் .. அருளாயே
முனமொரு வனத்தில் வேடன் .. எனவொரு சரத்தொ டேன
.. .. முதுகினில் அடித்த போது .. விசையோடே
.. முரணுறு கருத்தி னோடு .. பொருவிச யனுக்கு நாடு
.. .. முழுவதும் அளிக்கு மாறு .. படையீவாய்
அனலுரு எடுத்த போது .. மலர்மிசை அயற்கும் ஆடும்
.. .. அலைமிசை அரிக்கும் நேட .. அரியோனே
.. அருமுனி அடுத்த காலன் .. அலறிட உதைத்த கால
.. .. அடியவர் தமக்கு நேயம் .. உடையானே
மனமலி செருக்கி னோடு .. மலைபெயர் அரக்கர் கோனை
.. .. வலிகெட நெரித்த பாத .. அணியாரும்
.. மலைமகள் இடத்தன் ஆகி .. இருளினில் நிருத்தன் ஆகி
.. .. மழுவமர் கரத்த னான .. பெருமானே.
உனது அடியிணைக்கு நானும் அருமலர் தொடுத்த மாலை உறு தமிழ் மணக்க நாளும் இடுமாறே - உன் இரு திருவடிகளுக்கு நானும் அரிய மலர்களால் தொடுத்த மாலை போல் தமிழ்ப்பாமாலைகள் மணம் கமழ இடும்படி; (உறுதல் - ஒத்தல்);
உருகிடு மனத்தன் ஆகி இருவினை இருப்பு இலாத உயர்நிலை அளிக்கும் ஞானம் அருளாயே - உருகும் மனத்தை உடையவன் ஆகி இருவினைகளின் தொகுதியும் தீர்ந்துபோன உயர்ந்த கதியைக் கொடுக்கும் ஞானத்தை அருள்வாயாக;
முனம் ஒரு வனத்தில் வேடன் என ஒரு சரத்தொடு ஏன முதுகினில் அடித்த போது, விசையோடே முரண் உறு கருத்தினோடு பொரு விசயனுக்கு நாடு முழுவதும் அளிக்குமாறு படை ஈவாய் - முன்பு ஒரு காட்டில் வேடன் வடிவில் சென்று ஓர் அம்பால் ஒரு பன்றியில் முதுகில் எய்து, சினந்து போரிட்ட அருச்சுனனுக்கு (பாண்டவர்கள் இழந்த) நாடு முழுவதும் மீண்டும் கிடைக்கும்படி பாசுபதாஸ்திரத்தை அருள்செய்தவனே; (சரம் - அம்பு); (ஏனம் - பன்றி); (விசை - வேகம்); (முரண் உறுதல் - மாறுபடுதல்); (பொருதல் - போரிடுதல்); (விசயன் - அருச்சுனன்); (படை - ஆயுதம் - பாசுபதாஸ்திரம்);
அனல் உரு எடுத்தபோது மலர்மிசை அயற்கும் ஆடும் அலைமிசை அரிக்கும் நேட அரியோனே - எல்லையில்லாத தீப்பிழம்பின் வடிவில் நின்றபொழுது, தாமரைமேல் உறையும் பிரமனுக்கும் அசைகின்ற அலையின்மேல் உறையும் விஷ்ணுவுக்கும் தேடிக் காண அரியவனே; (அனல் - தீ). (அயற்கும் - அயனுக்கும் - பிரம்மாவுக்கும்); (நேடுதல் - தேடுதல்);
அருமுனி அடுத்த காலன் அலறிட உதைத்த கால – அரிய முனிவரான மார்க்கண்டேயரை நெருங்கிய காலனே அலறும்படி அவனை உதைத்த காலனே; (அடுத்தல் - நெருங்குதல்);
அடியவர் தமக்கு நேயம் உடையானே - பக்தர்களுக்கு அன்பு உடையவனே; (நேயம் - அன்பு);
மனம் மலி செருக்கினோடு மலை பெயர் அரக்கர் கோனை வலி கெட நெரித்த பாத - மனத்தில் மிகுந்த ஆணவத்தால் கயிலைமலையைப் பெயர்த்த அரக்கர் தலைவனான இராவணனை அவனது வலிமை அழியுமாறு ஊன்றி நசுக்கிய திருப்பாதனே; (வலி - வலிமை); (நெரித்தல் - நசுக்குதல்);
அணி ஆரும் மலைமகள் இடத்தன் ஆகி, இருளினில் நிருத்தன் ஆகி, மழு அமர் கரத்தன் ஆன பெருமானே - அழகிய உமையை இடப்பக்கத்தில் உடையவன் ஆகி, நள்ளிருளில் கூத்து ஆடுபவன் ஆகி, மழுவைக் கையில் ஏந்தியவனும் ஆன பெருமானே; (நிருத்தன் - கூத்தன்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment