03.05.018 – ஆரூர் (திருவாரூர்) - சரமழை போலே சதா நசை - (வண்ணம்)
2007-03-10
3.5.18 - சரமழை போலே சதா நசை - (ஆரூர் - திருவாரூர்)
----------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன .. தனதான )
(இதனைத் "தனதன தானான தானன x 3 + தனதான" என்றும் நோக்கலாம்போல். திருப்புகழ்ப் பாடலில் சில அடிகளில் அதற்கேற்றவாறு சொற்கள் காண்கின்றேன்);
(சரவண ஜாதா நமோநம - திருப்புகழ் - விநாயகர்மலை (பிள்ளையார்பட்டி))
(இருகுழை மீதோடி மீளவும் - திருப்புகழ் - பொது)
சரமழை போலே சதாநசை .. வரமய லாலே பொலாவினை
.. .. தடமலை போலாய் அறாவிடர் .. எனைமூடித்
.. தளர்வுறு நாளாய் எழாநிலை .. தருபிணி சூழா முனேபுகழ்
.. .. தமிழ்கொடு தாளே பராவிட .. நினையேனோ
அரவணி சூலா யுதாபிறை .. படர்சடை மேலே நிலாவிட
.. .. அதனயல் ஏரார் குராமலர் .. புனைவோனே
.. அதளரை மீதே சுலாவிடும் .. அழகுடை நாதா பராபரை
.. .. அவளொரு பாகா அடாதது .. செயநாணா
இருபது தோளான் இராவணன் .. அழமலை மீதே ஒரேவிரல்
.. .. இறைஇடு வோனே பினேபெயர் .. தருவோனே
.. இடுபறை யோடே முழாவொலி .. செயநடம் ஆடீ நிசாசரர்
.. .. எயிலெரி ஏவால் இராவண(ம்) .. முனைநாளில்
பொரவல வீரா சுறாவணி .. கொடியுடை வீவாளி வேள்முனி
.. .. புகழுடை ஈசா கணார்நுதல் .. உடையானே
.. பொறிமயில் மேலான் விநாயகன் .. இவர்தொழு தாதாய் புராதன
.. .. புனல்மலி ஆரூரில் மேவிய .. பெருமானே.
பதம் பிரித்து:
சரமழை போலே சதா நசை .. வர, மயலாலே பொலா-வினை
.. .. தடமலை போலாய், அறா-இடர் .. எனை மூடித்
.. தளர்வுறு நாளாய், எழா-நிலை .. தரு பிணி சூழா முனே, புகழ்
.. .. தமிழ்கொடு தாளே பராவிட .. நினையேனோ;
அரவு-அணி சூலாயுதா; பிறை .. படர்-சடை மேலே நிலாவிட,
.. .. அதன் அயல் ஏர்-ஆர் குராமலர் .. புனைவோனே;
.. அதள் அரை மீதே சுலாவிடும் .. அழகுடை நாதா; பராபரை
.. .. அவள் ஒரு பாகா; அடாதது .. செய நாணா
இருபது தோளான் இராவணன் .. அழ மலை மீதே ஒரேவிரல்
.. .. இறை இடுவோனே; பினே பெயர் .. தருவோனே;
.. இடுபறையோடே முழா ஒலி .. செய நடம் ஆடீ; நிசாசரர்
.. .. எயில் எரி-ஏவால் இரா-வணம் .. முனைநாளில்
பொரவல வீரா; சுறா-அணி .. கொடியுடை வீ-வாளி வேள் முனி
.. .. புகழுடை ஈசா; கணார்-நுதல் .. உடையானே;
.. பொறி-மயில் மேலான், விநாயகன் .. இவர் தொழு தாதாய்; புராதன
.. .. புனல்மலி ஆரூரில் மேவிய .. பெருமானே.
சரமழை போலே சதா நசை வர, மயலாலே பொலா-வினை தடமலை போலாய், அறா-இடர் எனை மூடித் - அம்புமழை போல் எப்பொழுதும் ஆசைகள் வந்து தாக்க, அறியாமயால் பொல்லாத வினை (தீவினை) பெரிய மலை போல் ஆகித், தீராத துன்பம் என்னை மூடி; (சரம் - அம்பு); (பொலா - பொல்லா - கடுமையான; தீய); (தடம் - பெருமை); ( அறுதல் - தீர்தல்);
தளர்வுறு நாளாய், எழா-நிலை தரு பிணி சூழா முனே - நான் தளர்ச்சியடையும் காலம் ஆகி, எழுந்திருக்கவும் இயலாத நிலையைத் தரும் நோய்கள் என்னைச் சூழ்ந்துகொள்வதன் முன்பே; (முனே - முன்னே);
புகழ்-தமிழ்கொடு தாளே பராவிட நினையேனோ - புகழும் தமிழ்ப்பாமாலைகளால் உன் திருவடியையே போற்றும் எண்ணத்தை அருள்வாயாக; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு); (பராவுதல் - புகழ்தல்; வணங்குதல்)
அரவு-அணி சூலாயுதா - பாம்பை அணிந்த, சூலபாணியே;
பிறை படர்-சடை மேலே நிலாவிட, அதன் அயல் ஏர்-ஆர் குராமலர் புனைவோனே - படரும் சடைமேல் பிறைச்சந்திரன் திகழ, அதன் அருகே அழகிய குராமலரை அணிந்தவனே; (நிலாவுதல் - நிலவுதல் - தங்குதல்; ஒளிவிடுதல்); (ஏர் - அழகு);
அதள் அரை மீதே சுலாவிடும் அழகுடை நாதா - அரையின்மேள் தோலே ஆடையாகச் சுற்றியிருக்கும் அழகுடைய தலைவனே; (அதள் - தோல்); (சுலாவுதல் - சுலவுதல் - சுற்றுதல்);
பராபரை அவள் ஒரு பாகா - சக்தியை ஒரு பாகமாக உடையவனே; (பராபரை - சக்தி);
அடாதது செய நாணா இருபது தோளான் இராவணன் அழ மலை மீதே ஒரேவிரல் இறை இடுவோனே - தகாத செயல்கள் செய்ய நாணாதவனும் இருபது புஜங்கள் உடையவனுமான இராவணன் அழுமாறு கயிலைமலைமேல் திருப்பாத விரல் ஒன்றைச் சிறிதளவே ஊன்றியவனே; (செய நாணா - செய்ய நாணாத); (இறை - சிறிது அளவு);
பினே பெயர் தருவோனே - பின்னர் (அவன் அழுது தொழ, இரங்கி), அவனுக்கு இராவணன் என்ற பெயரைத் தந்தவனே; (பினே - பின்னே);
இடுபறையோடே முழா ஒலி செய நடம் ஆடீ - பறைகளும் முழாக்களும் ஒலிக்கக் கூத்து ஆடுபவனே; (ஆடீ - ஆடுபவனே); (சம்பந்தர் தேவாரம் - 2.84.11 - "இடுபறை யொன்ற");
நிசாசரர் எயில் எரி-ஏவால் இரா-வணம் முனைநாளில் பொரவல வீரா - அசுரர்களது முப்புரங்களும் இல்லாது ஒழியுமாறு முன்பு எரிக்கின்ற கணையால் போர்செய்ய வல்ல வீரனே; (நிசாசரர் - அசுரர்); (எயில் - மதில்); (ஏ – அம்பு); (இராவணம் - இராதவண்ணம் - இல்லாதவாறு); (பொருதல் - போர்செய்தல்);
சுறா-அணி கொடியுடை வீ-வாளி வேள் முனி புகழுடை ஈசா - சுறவக்கொடி உடையவனும் மலரம்புகளை உடையவனுமான காமனைக் கோபித்து எரித்த புகழ் உடைய ஈசனே; (வீ - பூ); (வாளி - அம்பு); (வேள் - மன்மதன்); (முனிதல் - கோபித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 – "சுறவக்கொடி கொண்டவன் நீறதுவாய் உற நெற்றி விழித்த");
கணார்-நுதல் உடையானே - நெற்றிக்கண்ணனே; (கணார் - கண்ணார் - கண் ஆர்);
பொறி-மயில் மேலான், விநாயகன் இவர் தொழு தாதாய் - புள்ளிமயில் ஏறும் முருகனும் கணபதியும் வணங்கும் தந்தையே; (பொறி - புள்ளி); (தாதை - தந்தை; தாதாய் - தந்தையே);
புராதன - பழையவனே;
புனல் மலி ஆரூரில் மேவிய பெருமானே - நீர் மிகுந்த திருவாரூரில் எழுந்தருளிய பெருமானே; (அப்பர் தேவாரம் - 6.73.2 - "வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்");
பிற்குறிப்புகள்:
1. இப்பாடலில் படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் (புணர்ச்சியால் ஓசை சிதையாத இடங்களில்) புணர்ச்சி இன்றிச் சொற்கள் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக:
புகடமிழ் = புகழ் தமிழ்
வேண்முனி = வேள்முனி
பொறிமயின் மேலான் = பொறிமயில் மேலான்
புனன்மலி யாரூரின் மேவிய = புனல்மலி ஆரூரில் மேவிய
2. திருப்புகழில் இப்படி ன்+ம வரும் இடங்களில் சந்தம் கெடாது என்பதைக் காணலாம். உதாரணமாக:
திருப்புகழ் - பூமாது உரமேயணி (சீகாழி)
For "தானாதன தானன தானன .. தந்ததான"
the last phrase in this song is
காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே
திருப்புகழ் - கருகி அறிவு அகல (அத்திப்பட்டு)
For "தனதனன தனதனன தத்தத் தத்ததன .. தனதான"
a line in the song has
மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment