03.05.023 – மதுரை - கற்கிற பொருளைக் - (வண்ணம்)
2009-08-20
03.05.023 - உனக்கு அற்றிடும் அறிவைத் தருவாய் (மதுரை)
-------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தன தனனத் தத்தன தனனத்
தத்தன தனனத் .. தனதான );
(இச்சந்தத்தில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)
கற்கிற பொருளைக் கற்கிற முறையிற்
..... கற்றிடு வழியைத் .. தெரியாமல்
.. கற்பனை உலகிற் பற்பல கனவுக்
..... கட்டுகள் வலையிற் .. படுவேனோ
அற்பரை அணுகிப் பொய்க்குழி விழுதற்
..... கக்கினி புகுவிட் .. டிலின்நேர்நான்
.. அப்படி அழிவைப் பெற்றிடு முனுனக்
..... கற்றிடு மறிவைத் .. தருவாயே
வெற்பினை எறியப் புக்கவன் அலறப்
..... பொற்புடை விரலிட் .. டருள்வோனே
.. வித்தகர் புகலிப் புத்திரர் எரியிற்
..... பத்திரம் இடவெற் .. றியையீவாய்
அற்புத வடிவிற் சத்தியு மிணையப்
..... பொற்சடை அதனிற் .. புனல்சூடீ
.. அக்கர அரவக் கச்சின மணிவிட்
..... டக்கணி மதுரைப் .. பெருமானே.
பதம் பிரித்து:
கற்கிற பொருளைக் கற்கிற முறையில்
..... கற்றிடு வழியைத் தெரியாமல்
.. கற்பனை உலகில் பற்பல கனவுக்
..... கட்டுகள் வலையில் படுவேனோ;
அற்பரை அணுகிப் பொய்க்குழி விழுதற்கு
..... அக்கினி புகு விட்டிலின் நேர் நான்;
.. அப்படி அழிவைப் பெற்றிடுமுன் உனக்கு
..... அற்றிடும் அறிவைத் தருவாயே;
வெற்பினை எறியப் புக்கவன் அலறப்
..... பொற்பு உடை விரல் இட்டு அருள்வோனே;
.. வித்தகர், புகலிப் புத்திரர் எரியில்
..... பத்திரம் இட வெற்றியை ஈவாய்;
அற்புத வடிவில் சத்தியும் இணையப்,
..... பொற்சடை அதனில் புனல்சூடீ
.. அக்கர; அரவக் கச்சின; மணி விட்டு
..... அக்கு அணி மதுரைப் பெருமானே.
* 3-ம் அடி - கயிலையைப் பேர்க்க முயன்ற இராவணனை நெரித்ததையும், மதுரையில் அனல்வாதத்தின்போது சம்பந்தரின் திருப்பதிக ஏடு பசுமையாக இருக்க அருள்புரிந்ததையும் சுட்டியது;
சொற்பொருள்:
பொய்க்குழி - பொய்ம்மையாகிய குழி;
அக்கினி புகு - தீயிற் புகும்; (இலக்கணக் குறிப்பு: ஏழாம் வேற்றுமைத்தொகையில் பொதுவாக வலி மிகும். ஓசைக்காக இவ்விடத்தில் மிகாமல் வந்தது என்று கொள்க);
நேர் - ஒப்பு;
அறுதல் - நட்புச்செய்தல். (பேணித் தம்மோ டற்றவருக் கறாதோரும் - உத்தரரா. திக்குவி. 55);
வெற்பு - மலை; இங்கே கயிலை மலை;
பொற்பு உடை விரல் - அழகிய விரல்;
வித்தகன் - ஞானி; பேரறிவாளன்; வல்லவன்;
புகலிப் புத்திரர் - காழிப்பிள்ளையார்; (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);
பத்திரம் - புத்தகத்தின் ஏடு;
புனல் - நீர் - இங்கே கங்கை;
அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்;
விடுதல் - நீங்குதல்; விலக்குதல்;
அக்கு - எலும்பு;
கற்கிற பொருளைக் கற்கிற முறையில் கற்றிடு வழியைத் தெரியாமல் - கற்க வேண்டியதைக் கற்கின்ற முறையில் கற்கும் வழியை அறிந்துகொள்ளாமல்;
கற்பனை உலகில் பற்பல கனவுக் கட்டுகள் வலையில் படுவேனோ - நிலையற்ற உலகில் பலபல கனவுக்கோட்டைகளைக் கட்டி அந்த பந்தங்களின் வலையில் சிக்கி அழிவேனோ;
அற்பரை அணுகிப் பொய்க்குழி விழுதற்கு அக்கினி புகு விட்டிலின் நேர் நான் - கீழோரை அண்டிப் பொய்ம்மைக்குழியில் விழுவதற்கு விரைகின்ற நான் தீயில் விழ விரைகின்ற விட்டிலை ஒத்தேன்;
அப்படி அழிவைப் பெற்றிடுமுன் உனக்கு அற்றிடும் அறிவைத் தருவாயே - அப்படி அழிவதன்முன் உனக்கு அன்புசெய்யும் உணர்வை அருள்வாயாக;
(சம்பந்தர் தேவாரம் - 3.120.2 - "... உலகினில் இயற்கையை ஒழித்திட் டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே" - உலகியல்புகளை வெறுத்து அகப்பற்று, புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும் அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர்);
(திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.1 - "புற்றில்வா ளரவும் அஞ்சேன்....எம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே" - 'பெம்மாற்கு அற்றிலாதவர்');
வெற்பினை எறியப் புக்கவன் அலறப் பொற்பு உடை விரல் இட்டு அருள்வோனே - கயிலையைப் பெயர்த்து எறியச் சென்ற இராவணன் அலறி அழும்படி அழகிய விரலை ஊன்றி அவனை நசுக்கியருளியவனே;
வித்தகர், புகலிப் புத்திரர் எரியில் பத்திரம் இட வெற்றியை ஈவாய் - புகலியில் அவதரித்த திருஞான சம்பந்தர் அனல்வாதத்தின்போது தேவாரப் பதிக ஏட்டினைத் தீயில் இட்டபோது அவர்க்கு வெற்றியைக் கொடுப்பவனே; (திருப்புகழ் - "புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே");
அற்புத வடிவில் சத்தியும் இணையப், பொற்சடை அதனில் புனல்சூடீ - அற்புதமான அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் பொன் போன்ற சடையில் கங்கையைத் தரித்தவனே;
அக்கர - அக்ஷரனே - அழிவற்றவனே;
அரவக் கச்சின - பாம்பைக் கச்சாக உடையவனே;
மணி விட்டு அக்கு அணி மதுரைப் பெருமானே - நவரத்தினங்களை அணியாமல் எலும்பை அணிந்த, மதுரையில் எழுந்தருளிய சிவபெருமானே;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------